Sunday, November 11, 2012

ஃ பைனல் டெஸ்ட்டினேஷன்



இன்று நண்பர் சாத்தப்பனை சந்திக்கப் போயிருந்தேன். அவரது வீட்டுக்கு வந்த ஒருவரை எனக்கு அறிமுகம் செய்தார். அவர் ஒரு டாக்டர். என் வீட்டுக்கு அருகில்தான் அவரது மருத்துவமனை இருக்கிறது. அவரது முகம் மிகவும் பழகியதுபோலத் தோன்றியது. என்னை அறிமுகம் செய்ததும் அவர் தயக்கத்தோடு என்னிடம் கேட்டார். ' உங்க ஃ பிரண்ட் யாராவது சில மாதங்களுக்கு முன் விபத்தில் அகப்பட்டு பி வி எல் மருத்துவமனைக்கு வந்தார்களா ? நான் சிரித்தபடியே சொன்னேன். 'நான்தான் கடந்த வருடம் தீபாவளி சமயத்தில் அங்கு கொண்டுவரப்பட்டேன்' . அவர் சொன்னார் ' அப்போது நான்தான் உங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து பிம்சுக்கு அனுப்பினேன்'. வேறொரு பேஷண்டைப் பார்க்க வந்திருந்தபோது உங்களைக் கொண்டுவந்தார்கள் '

கடந்த ஆண்டு தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்  நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதி நான்  விபத்துக்குள்ளானேன். . மழை பெய்து கொண்டிருந்தபோது அந்த விபத்து நடந்தது.விபத்து நடந்த இடத்தில் மழைக்காக ஒதுங்கி நின்றவர்கள் என்னை அருகிலிருந்த மருத்துவமனைக்கு தூக்கிப்போய் போட்டார்கள். அங்கிருந்து பிம்ஸ் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டுசெல்லப்பட்டேன். தலையில் இருபத்தைந்து தையல் போட்டார்கள். வலது கையிலும், கால்களிலும் பலத்த அடி. அங்கு அளிக்கப்பட சிகிச்சையால் உயிர்பிழைத்தேன்.

சிலநாட்களுக்கு முன் HBO தொலைக்காட்சி சேனலில் ஃ பைனல் டெஸ்ட்டினேஷன் என்ற படத்தைக் காட்டினார்கள். விபத்து
ந டக்கப்போவதாக கதாநாயகனுக்கு முன்னுணர்வு சொல்லும், உடணே அவன் அந்த இடத்திலிருந்து வெளியேறுவான். அவனோடு அவனது நண்பர்கள் சிலரும் தப்பிப்பார்கள் .ஆனால் விபத்தில் தப்பித்தவர்களை மரணம் தேடிப்பிடித்து ஒவ்வொருவராகக்  கொல்லும். தேர்ந்த வில்லனை விட நுட்பமாக கொலைகளை மரணம் செய்யும். முகமற்ற வில்லனாக மரணம் இருக்கும். இதுவரை ஐந்து பாகங்கள் அந்தப் படம் வெளியாகியிருக்கிறது என நினைக்கிறேன்.  'மரணத்தை ஏமாற்ற முடியாது' என்று படத்தில் ஒருவர் சொல்வார்.

நண்பர் சாத்தப்பன் வீட்டில் இன்று அந்த டாக்டரைப் பார்த்தபோது ஏனோ அந்தப் படம் நினைவுக்கு வந்தது.

No comments:

Post a Comment