ஈழத்தமிழரின் நிகழ்காலம் என்பது கடந்தகால குற்றங்களுக்கும் உரிமைமறுப்புக்களுக்கும் நியாயம் தேடும் முனைப்புகளுக்குள் மட்டுப்படுத்திக்கொள்வது என்ற நிலையினை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டியுள்ளது.
தமிழ்மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட இனஒழிப்பு படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பது வெறுமனே பழிவாங்கும் உணர்வுகளுக்கு அப்பால் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தினை பெற்றுக்கொள்வதாக விரிவுபடுத்தப்படவேண்டும்.
கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்மக்களின் அரசியல் மூலோபாயங்கள் தொடர்பாகவும் சிறப்பானமுறையில் மீளாய்வுகள் செய்யப்படுவது எதிர்கால செல்நெறியினை தீர்மானிப்பதற்கான முதற்பயிற்சியாகவும் அவசியமாகவும் உள்ளது என்பதனை நாம் அனைவரும் ஏற்பதென்பதே பொருத்தப்பாடானதாகும்.
இதுவரை, நம்மிடையே மீளாய்வுகள் மிகமிக அரிதாகவே நடத்தப்பட்டுள்ளன. மீளாய்வு என்றாலே பலருக்கும் கசப்பாகத்தான் இருக்கின்றது.
எழுபதாண்டுகளுக்கும் மேலாக பலபரிமாணங்களில் மேலேழுந்த தமிழ்மக்களின் அரசியற்தலைமைகள் யாவும் அரசியல் போராட்டம் என்பது ஆட்சி அதிகாரத்தினை வென்றெடுப்பது அல்லது அரசுசார்ந்த அதிகாரங்களினை பரிமாறிக்கொள்வது என்ற ஒற்றைப்பரிமாண தளத்திலேயே கட்டியெழுப்பப்பட்டிருந்தன.
ஆட்சியதிகாரம் வலுவிழக்கப்படும் சூழலிலும் சமூகம் தன்னைத் தக்கவைத்து மேலேழக்கூடிய பொருண்மியக்கட்டமைப்புகளும் தனித்துவமான நிறுவனக்கட்டமைப்புகளும் உருவாக்கப்படாமை தமிழ்மக்களின் போராட்டவரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தவறாகவே எம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றது.
2009-மே மாதத்திற்கு முன் தமிழீழ விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டு வன்னிப் பெருநிலப்பரப்பினுள் நிர்வகிக்கப்பட்ட முறைசார அரசநிர்வாகமும் கூட தமதுஅமைப்பு சார்ந்த அதிகாரக்கட்டமைப்பிற்கு புறம்பாக தமிழ்மக்களின் பாரம்பரிய தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் தனித்துவமாக செயற்படக்கூடிய பொருண்மிய கட்டமைப்புக்களினையும் அதுசார்ந்து செயற்படக்கூடிய தனிமனித மற்றும் சமூக ஆளுமைகளினையும் உருவாக்குவதிலோ, ஊக்கப்படுத்துவதிலோ ஆர்வம்கொண்டிருக்கவில்லை என்பது வெளிப்படையானது.
2009 மே மாதத்திற்கு பின்பு தோற்றம் பெற்றுள்ள அக புற சூழல்கள் தமிழ்மக்களின் எதிர்காலம் பற்றிய தீர்மானிக்கும் உரிமையினை பல்வேறு தேசிய, அனைத்துலக பிராந்திய சக்திகள், குழுக்கள், தனிமனிதர்கள், மற்றும் மறைகரங்களின் விளையாட்டுப் பொருளாக்கியுள்ளது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அத்துடன், புலம்பெயர் சமூகத்தினுள் ஊதிப்பெருத்து நிற்கும் குழுநிலைவாதங்களும், தங்களது தொடர் இருப்புக்காக மேடையேற்றப்படும் சாகச மகாநாடுகளும் - கூட்டங்களும், இரகசியக் கலந்துரையாடல்களும் இன்னுமொரு வகையான தோற்றப்போலிகள் எனவே உணரமுடிகின்றது.
இந்த தோற்றப்போலிகளின் அரைவேக்காட்டு செயற்பாடுகளால் மீண்டும் மீண்டும் மக்களே பலிக்கடாவாக்கப்படுகின்றனர் என்பதே 'புதினப்பலகை'யின் கவலையாக உள்ளது.
***************
ஈழத்தமிழ்மக்கள் மத்தியிலுள்ள குழுநிலைவாதங்களுக்குள் குளிர்காய முற்படும் சிறிலங்கா அரசு உட்பட்டதான சக்திகள் பல தளங்களிலும் பலவடிவங்களில் தங்களினை தக்கவைப்பதில் வெற்றிபெற்றுள்ளன.
குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும், செயற்பாட்டாளர்களும், தமிழின உணர்வாளர்களும் ஈழத்தமிழர்கள் சார்ந்த தங்களது அக்கறைக்கும், ஆதரவிற்கும் செயல்வடிவம் கொடுப்பதில் 'எல்லைதாண்டிய' பொருத்தமற்ற ஆட்டங்களை ஆடிவருகின்றனர்.
தமிழ்நாட்டு அரசியற்கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்காகவும் உள்ளுர்கட்டைப்பஞ்சாயத்து உரிமைக்காகவும் கையாளும் அதேவிதமான சித்துவிளையாட்டுக்களினை ஈழத்தமிழ்மக்களின் உரிமைப்போராட்டம், மற்றும் எமது மீள் எழுச்சிக்கான முனைப்புகளிலும் காட்டமுயற்சிக்கின்றன.
அண்மைக்காலத்தில் அவை உச்சநிலை அடைந்து 'தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறுவேறானது' என்ற சாதாரண நடைமுறை உண்மையைக்கூட புறந்தள்ளி ஈழத்தமிழர்களின் தலைவிதியையே தீர்மானிப்பவர்கள்போல் வாய்ப்பந்தலிடுகிறார்கள். உத்தரவிடும் தொனியிலும் பேசத்தொடங்கி உள்ளார்கள்.
இவ்வாய்ப்பந்தல் வேடதாரிகளிடம் புலம்பெயர்ந்தோரில் சிலரும் குறிப்பாக புலம்பெயர் சமூகத்தின் தலைமையென ஊதிப்பெருத்த தோற்றப்போலிகள் சிலரும் மயங்கி நிற்கின்றனர் என்பதுதான் வேதனை அளிக்கும் விடயமாகும்.
இந்த தோற்றப்போலிகளுக்கு அரசியல்தளத்திற்கும் - ஆதரவுத்தளத்திற்குமான அடிப்படை வேறுபாடுகூட தெரிந்திருக்கவில்லை என்பதுபற்றி என்ன சொல்வது?
இந்தியாவில் மாநிலங்கள் என்பது மொழிவாரியாக பிரிக்கப்பட்டவையாகும். அவற்றுக்கு சுயாட்சி கிடையாது. மாநிலங்கள் தங்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கே டெல்லியின் கதவைத்தட்டி பிச்சை எடுக்கும் நிலைதான். இந்திய மத்திய அரசென்பதும் கூட்டாட்சி கொண்டதல்ல. கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான். கூட்டணி என்பதும் அரசியல் சார்ந்ததல்ல.
'மாநிலசுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்னும் அரசியல்கோரிக்கை முன்னொரு காலத்தில் இந்திய அளவில் முளைவிட்டபோதும் தற்போது அது ஒரு பழங்கதையாகிவிட்டது.
ஆதலால் தமிழ்நாடு என்பது ஆதரவுத்தளத்திற்கும் அப்பால் ஓரடிகூட எடுத்துவைக்க முடியாதது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்தியவல்லாதிக்கத்தினதும் டெல்லிசார்ந்த அதிகாரக்கட்டமைப்பினதும் முடிவெடுக்கும் செயற்பாடுகளில் ஈழத்தமிழர்கள் நலன்சார்ந்த மாற்றங்களினை செய்யமுடியாதவர்கள், கடந்தகால தவறுகளுக்கு துணைபோனவர்கள் தற்போது அனைத்துலக அரசியற் தளத்தில் ஈழத்தமிழர்களுக்காக தீர்மானங்களினை முன்மொழிவது 21ம்நூற்றாண்டின் அரசியற்கோமாளித்தனமாகும்.
மறுவகையில் ஈழத்தமிழர்களின் துயரங்களில் பங்குபெறத்துடிக்கும் சாதாரண தமிழ்நாட்டு குடிமக்களின் பற்றுறுதியினை கொச்சைப்படுத்தும் கொடுந்துரோகமுமாகும்.
இந்தியாவின் தமிழ்நாடும் அதன் அரசியற்கட்சிகளும் ஈழத்தமிழர்சார்ந்த தங்களது பணிதொடர்பில் தங்களுக்கு இருக்கக்கூடிய எல்லைகளினை அறிந்து செயற்படவேண்டும் என்பதே புதினப்பலகையின் கோரிக்யைாகும்.
தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு ஈழத்தமிழ்மக்களின் அரசியல்விடுதலைப்போராட்டத்தில் ஒரு ஆதரவுத்தளம் என்ற எல்லைக்கு அப்பால் தன்னை முன்னகர்த்தக்கூடாது. அத்தகைய முயற்சிகளுக்கு ஈழத்தமிழர்கள் அனுமதிக்கவும்கூடாது.
ஈழத்தமிழரின் அரசியல் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் தலைவர்களாகவும் பேச்சாளர்களாகவும் அவர்களினை புலம்பெயர்தமிழர்கள் அனுமதிப்பது மிகவும் அபத்தமாகவும் ஆபத்தாகவுமே முடியும்.
எத்தனை வலிகள், வேதனைகள் இருந்தாலும் ஈழத்தமிழர்களாலும் அவர்களின் அரசியல் தலைமைத்துவத்தாலுமே தங்களுக்கான அரசியல் தீர்வினை பெறமுடியும்.
எழுபதாண்டுகால அரசியல் போராட்டத்தில் அறவழி மற்றும் ஆயுதவழி போராட்ட பட்டறிவை கொண்டவர்கள் ஈழத்தமிழர்கள். தங்கள் அரசியல் தலைமைத்துவத்திற்கான உருத்தினை [Mandate] தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு ஐனநாயக வழிமுறையில் வாக்களித்து வழங்கியுள்ளார்கள்.
இவ்வுருத்தினை தொப்புழ்கொடி உறவு எனக்கூறி வாய்ப்பந்தல் கட்டும் தமிழ்நாட்டு வேடதாரிகள் கையகப்படுத்த முயற்சிப்பதை ஈழத்தமிழர்களோ அவர்களது தலைமையோ ஏற்கமாட்டார்கள் என்பதனை 'புதினப்பலகை' சுட்டிக்காட்ட விரும்புகின்றது.
****************
ஈழத்தமிழர்களின் பாதுகாப்பும் உறுதியும் செழிப்பும் நிறைந்த எதிர்காலம் என்பது மிகவும் ஆழ்ந்த தேடலுடனும் உலகம் தழுவியதாக ஏற்பட்டுவரும் அரசியல் பொருளாதார தொழில்நுட்ப மற்றும் சந்தைசார்ந்த மாற்றங்களினை கருத்திற்கொண்டதாகவும் விவாதிக்கப்படவேண்டும்.
புலம்பெயர் தேசங்களின் பொருண்மிய மற்றும் பண்பாட்டு தளத்தில் கொட்டிச்சிதறிய மணிகளாய் சுமார் மூன்றில் ஒருபகுதி மக்கள்தொகையினை ஈழத்தமிழ்சமூகம் இழந்துபோயுள்ளது. மறுபுறத்தில் தாயகத்தில் முற்றிலும் நெருக்கடியான அரசியல் பொருண்மிய வாழ்வியற் சுழலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
வறுமையும் வல்லாதிக்கமும் வன்முறையும் வாய்ப்புக்களினை தட்டிப்பறிக்கும் அரசியல் பஞ்சதந்திரங்களும் தாயகமக்களினை புதியநூற்றாண்டின் பின்தங்கிய சமூகமாகமாற்றிக் கொண்டிருக்கின்றது.
2009 மேயினை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட துயர்துடைக்கும் பணிகளும் மனிதாபிமான உதவிகளும் தொடர்ந்தும் அதேபாணியில் தொடரப்படக்கூடாது.
ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகள் பலமான மூலோபாயந்தழுவியதாக முன்னெடுக்கப்படவேண்டும். அதற்கான கலந்துரையாடல்களும் முயற்சிகளும் திறந்த மனப்பான்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பரஸ்பரபுரிந்துணர்வினை அடிப்படையாக கொண்டும் உருவாக்கப்படவேண்டும்.
ஒருங்கிணைப்பு என்ற பெயரால் மறைகரங்களும் குழுக்களும் தங்களது கட்டுப்பாட்டு வலையமைப்பினை தக்கவைக்கும் முயற்சிகள் ஊக்குவிக்கப்படக்கூடாது.
வன்முறையும் ஒடுக்குமுறையும் உரிமை மறுப்பும் பொய்களினை பரப்புதலும் ஒடுக்குமுறை அரசுகளால் மட்டும் மேற்கொள்ளப்படுவதில்லை. அதிகாரத்திலும் அடாவடித்தன அரசியலிலும்; சுவைகண்ட தனிமனிதர்களும் குழுக்களும் கூட இதில் வெற்றிபெற்றுள்ளன என்பது காலம் கற்றுத்தரும் பாடமாகும்.
இத்தகையவர்களின் கைகளில் நவீன தொடர்பாடல் வலையமைப்புகளும் தகவற்தொழில்நுட்பமும் ஆபத்தான கருவிகளாக மாறியுள்ளமை மிகவும் வேதனைக்குரியதே.
இந்நிலை களையப்பட்டு, குழுநிலைச் செயற்பாடுகள் ஓரங்கட்டப்பட்டு, பொதுத்தலைமை, பொதுவேலைத்திட்டம் என்பதன் கீழ் நாம் ஈழத்தமிழரென ஒருத்துவம் கொண்டவர்களாய் ஒருங்கிணைந்தாகவேண்டும்.
தமிழ்மக்களின் அரசியலானது சமூகம், பண்பாடு, தேசியம், பொருண்மியம் என்கின்ற பலம்பொருந்திய அடித்தளத்தில் கட்டியெழுப்பப்படவேண்டும்.
அதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட மூலோபாய வேலைத்திட்டத்தினை வடிவமைப்பதற்கு வேண்டிய உயர்புலமையும் தன்னார்வமும் சமூக அக்கறையும் அரசியற்புரிந்துணர்வும் கொண்ட குழுவினரினை ஓர் இடத்தில் இணைக்கும் முயற்சிகள் இதுவரை கைகூடவேயில்லை. அவை வெற்றுக்கதைகளாகவே உள்ளன.
அதனை நாம் செயல்முறைபடுத்தவேண்டிய கட்டாய சூழலில் உள்ளோம்.
அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.- குறள்:684
என்பது வள்ளுவர் கூற்று. அதாவது இயற்கையிலமைந்த கூர்மையான அறிவும், விரும்பும் தோற்றப்பொலிவும், ஆட்சி நெறிமுறைகளை நன்கு ஆராய்ந்த அரசியல் கல்வியறிவும் ஆகிய இம் மூன்றையும் முழுமைபெறப் பெற்றவன் தூது செல்வதற்கு தகுதியுடையவனாவான் என்கிறார் அவர்.
புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்கு தலைமை ஏற்பவர்களுக்கும் இது பொருந்தும்.
இவற்றையே புதினப்பலகை தனது நான்காம் ஆண்டின் உரத்த சிந்தனையாக புதினப்பார்வையாக முன்மொழிகின்றது.
- புதினப்பலகை குழுமத்தினர்
17-11-2012
http://www.puthinappalakai.com/view.php?20121120107315
No comments:
Post a Comment