ரவிக்குமாரின் கடல் கிணறு என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் திலிப்குமார் எழுதியுள்ள பின் அட்டைக் குறிப்பு ( Blurb)
சமூக, அரசியல், தலித் செயற்பாட்டாளரான திரு ரவிக்குமார் அவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய 9 சிறுகதைகளின் தொகுப்பு இது. முதன்மையாக, ஒரு கட்டுரையாளராகவே அவர் நிலை பெற்றிருந்தாலும், இந்தக் கதைகள் புனைவு தளத்திலும் அவரது ஆற்றலை வெளிப்படுத்துவதோடு, ஒரு குறிப்பிடத்தக்க இலக்கிய அனுபவமாகவும் அமைந்துள்ளன. தமிழ் மக்களின் சமூக, அரசியல் வாழ்வின் சில ஆதாரமான கூறுகளை, இந்தக் கதைகள் சமகாலப் புனைவு மொழியின் பசுமையோடும் நுட்பத்தோடும் பதிவு செய்கின்றன.
ரவிக்குமார், தலித் எழுத்தாளர் தான் என்றாலும், தனது ஆழ்ந்த வாசிப்பின் மூலமும் தீவிரமான வாழ்வனுபவங்களின் மூலமும் தலித் அழகியலின் மரபான எல்லைகளை விஸ்தரிக்க முற்பட்டவர். தமிழில், தலித் இலக்கியமும், பின் நவினத்துவ எழுத்தும், கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் உருக்கொள்ளத் தொடங்கின. ஒரு வகையில், தலித் இலக்கியம் அதன் உட்பொருளில் பின் நவீனத்துவக் கூறுகளையும், பின் நவீனத்துவ உருவம் அதன் உட்கிடையாக தலித் வாழ்வின் கலக உணர்வையும் கொண்டது. தமிழ் சூழலில் இந்த இருவேறு ஓடைகளது இசைவின் சாத்யகூறுகளை கூர்மையான இலக்கிய உணர்வோடு பரிசீலித்து அதில் வெற்றியும் அடைந்தவர் ரவிக்குமார். பிற தலித் எழுத்தாளர்களும் இத்திசையில் சற்று தீவிரத்தோடு பயணித்திருந்தால் தமிழ் தலித் உரைநடை அழகியலுக்கு ஒரு கூடுதல் பரிமாணம் கிட்டியிருக்கும். அதோடு, தமிழ் மண்ணோடு பிணைந்த நம்பகத்தண்மை மிகுந்த பின் நவீனத்துவ எழுத்தும் சாத்தியமாகியிருக்கும். ரவிக்குமாரின் கதைகளைப் படிக்கும்போது இந்த எண்ணம் தோண்றுவது தவிர்க்க முடியாததாகிறது.
இத்தொகுப்பில், தம்பி, அகாலம், கடல் கிணறு, போன்ற கவித்துவமும் நெகிழ்ச்சியும் மிக்கக் கதைகளோடு, உண்மை அறிதல், எட்டாம் துக்கம், ழ, வார்த்தை, ஆகிய உருவப் பரிசோதனை மிக்க அரசியல் சார்ந்த கதைகளும் உள்ளன.
இலக்கியத்தின் வினையாற்றும் சக்தி குறித்த நமது நம்பிக்கைகளும், கற்பிதங்களும் வெகுவாக நெகிழ்ந்துவிட்ட இன்றைய சூழலில், ரவிக்குமார் தனது கதைகள் வாயிலாக முன்வைக்கும் முனைப்புகளும், அக்கறைகளும் நமக்குள் தீவிரமான ஒரு சலனத்தை ஏற்படுத்த விழைகின்றன.
No comments:
Post a Comment