தமிழக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், மாணவர்களும் ஈழச் சிக்கல் தொடர்பாக வலியுறுத்திவந்த கருத்துகளை தமிழக சட்டப் பேரவையில் தீர்மானமாக முன்மொழிந்த தமிழக முதல்வருக்கும் அதனை நிறைவேற்றித் தந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இத்தீர்மானத்தில் இடம்பெற்றிருக்கும் பொது வாக்கெடுப்பு, சர்வதேச விசாரணை முதலான கருத்துகள் ஏற்கனவே 'டெசோ' உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு அதற்காகப் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன. என்றாலும், தமிழக சட்டப் பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதன்மூலம் அவை இன்னும் அதிகமான வலிமையைப் பெற்றிருக்கின்றன. சிங்கள அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவர இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தருவனவாக அமைந்துள்ளன. தக்க நேரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பதன் மூலம் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் உணர்வுகளும் உலகறியச் செய்யப்பட்டுள்ளன.
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாகச் சில ஆங்கில ஊடகங்களும் விமர்சித்துள்ளன. தமிழ் இனத்தில் பிறந்த காரணத்தாலேயே பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதை 'இனப்படுகொலை'யென அழைக்கக் கூடாது என்று வாதிடுகிறவர்கள்தான் இப்படி விமர்சிக்கிறார்கள். அவர்களின் தமிழின விரோதப் போக்கைத் தெரிந்துகொள்ள இதுவொரு வாய்ப்பு எனக் கருதுவோம்.
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை இந்திய அரசு பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்யலாம். எனவே, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இத்தீர்மானத்தை தமிழக முதல்வர் தாமே நேரில் சென்று பிரதமரிடம் அளித்து விளக்க வேண்டும். அத்துடன் பிற மாநில முதல்வர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து இத்தீர்மான நகலை அளித்து அவர்களது ஆதரவையும் திரட்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கையில் இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு நாம் வெகுதூரம் பயணப்பட்டாகவேண்டும். கட்சி வேறுபாடுகளைக் களைவோம்! அந்த நீண்ட நெடிய போராட்டப் பயணத்தில் தமிழகம் ஒன்றுபட்டு நின்றது என்ற வரலாற்றை உருவாக்குவோம்!
இவண்
தொல்.திருமாவளவன்
No comments:
Post a Comment