சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட
ஊடகவியலாளர் மகா தமிழ்பிரபாகரனை மீட்க
இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!
இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன் என்பவர், கிளிநொச்சிப் பகுதியில் கிறித்தவத் தேவாலயம் ஒன்றிலிருந்தபோது சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழீழத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுடன் சுற்றுப் பயணத்திலிருந்தபோது அவரைக் கைது செய்துள்ளனர். எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடாத நிலையில் அவரை சிங்களப் படையினர் கைது செய்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மகா தமிழ்பிரபாகரன் ஏற்கனவே இலங்கைக்குச் சென்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பொதுவாக, ஊடகவியலாளர்கள் எவரையும் இலங்கைக்குள் அனுமதிப்பதில்லை என்ற சனநாயக விரோத நடவடிக்கையில் இராஜபக்சே அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. சர்வதேச ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவதும்,மர்மமான முறையில் கொலை செய்யப்படுவதும்,இலங்கைத் தீவினுள் நுழையவே விடாமல் தடுக்கப்படுவதும் அங்கே தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. தற்போது மகா தமிழ்பிரபாகரனும் அவ்வாறே சிங்களப் படையினரால் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
சிங்களப் படையினரின் இத்தகைய சனநாயக விரோதப் போக்கை அனைத்துலக ஊடகவியலாளர்கள் வன்மையாகக் கண்டித்திட முன்வரவேண்டும். இப்பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். இந்தியத் துணைத் தூதர் தேவயானி விவகாரத்தில் அமெரிக்க அரசின் நடவடிக்கையை உடனடியாகக் கண்டித்ததைப் போல சிங்கள அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளையும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்பதுடன், தமிழ் பிரபாகரனை விரைவாக மீட்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவண்
தொல்.திருமாவளவன்
No comments:
Post a Comment