திமுக பொதுக்குழு இன்று (15.12.2013) கூடுவதையொட்டி இந்துத்துவ
கடும்போக்காளர்கள் பலர் அமைதியிழந்துள்ளதைக் காண முடிகிறது. அவர்கள் முழுமையான பாஜக
தொண்டர்களுமில்லை, விசுவாசமான அதிமுக தொண்டர்களுமில்லை. இரண்டு கட்சிகளிலும் இல்லாமல்
இரண்டுக்காகவும் உழைப்பவர்கள். எந்தக் கட்சியையும் சாராத பொதுவான நபர் என்ற பிம்பம்
தரும் பலம் அவர்களுக்குத் தெரியும். அந்த பலத்தில்தான் அவர்களது செயல்பாடு மையம் கொண்டிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பல்வேறு போலி முகங்களில் இந்த நடுநிலையாளர்கள்
உலவுகிறார்கள். கட்சிக்காரர்களைவிடவும் அவர்களது உழைப்பு அதிகம். இப்போதைக்கு பாஜக-
அதிமுக உறவு ஏற்படவில்லையென்றாலும் பரவாயில்லை, ஆனால் தேர்தலுக்குப் பிறகு அது உருவாகவேண்டும்
என விரும்புகிறவர்கள் அவர்கள். மாநிலத்தில் அதிமுகவும் மத்தியில் பாஜகவும் ஆளவேண்டும்
என்பது அவர்களது ஆசை. திமுக – பாஜக உறவு ஏற்படக்கூடாது என்பது அவர்களது அந்தரங்க பிரார்த்தனை.
பாஜகவின் உண்மையான தொண்டர்களாக இருந்தால் அக்கட்சி பெரும்பான்மை
பெறுவதற்கு ஏற்ற கூட்டணி அமையவேண்டும் என நினைப்பார்கள். அதிமுக தொண்டர்களோ தமது தலைமைக்குப்
பிரதமர் பதவி கிடைக்க உழைப்பார்கள். ஆனால் இந்த இந்துத்துவ கடும்போக்காளர்களோ இந்த
இரண்டையும் முக்கியமாகக் கருதுவதில்லை. அவர்களது அடிப்படைவாத புத்தி ஒரு பெண் இந்த
நாட்டின் பிரதமராக வருவதை ஏற்காது. அவர்மூலம் கிடைக்கும் ஆதரவு முக்கியமே தவிர அவர்
அந்தப் பதவிக்கு வந்துவிடக்கூடாது. தமிழ்நாட்டிலும் அதிமுக தலைமையைப்போல வாக்குகளை
ஈர்க்கும் வேறு தலைமை இல்லாததாலேயே அவர்கள் அதை ஏற்கிறார்களே தவிர அவர்களது உள்ளார்ந்த
விருப்பம் அதுவல்ல.
திமுகவை ஒருபோதும் அவர்களால் ஏற்க முடியாது. அது தொடர்ந்து
அதிகாரத்தில் இருப்பதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தனிப்பட்ட முறையில் அவர்களுக்குத்
திமுக எந்தக் கேட்டையும் செய்யவில்லையென்றாலும்கூட அவர்களுக்கு ஒவ்வாத கட்சியாகவே திமுக
இருக்கிறது.அதற்குக் காரணம் அதன் சூத்திரத்தனமா அல்லது சுயமரியாதை குணமா என்பதை அவர்கள்தான்
சொல்லவேண்டும்.
இந்தக் கடும்போக்காளர்கள் எண்ணிக்கையில் சொற்பமாக இருக்கலாம்.
ஆனால் அவர்கள் ஏற்படுத்தும் கருத்தியல் தாக்கம் கணிசமானது. ’ஈரைப் பேனாக்கி பேனைப்
பெருமாளாக்குவது’ எனத் தமிழில் ஒரு சொலவடை உண்டு. அது இந்தக் கடும்போக்காளர்களின் பிரச்சாரத்துக்கு
நன்றாகப் பொருந்தும்.
எனக்கு ஒரு சந்தேகம் ஈர் பேனாகும், ஆனால் பேன் பெருமாள் ஆகுமா?
No comments:
Post a Comment