தமிழக அரசு சார்பில் குடிசை மின் நுகர்வோர்களுக்கு
8 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா சிறுகுழல் விளக்கு (C.F.L) வழங்கும்
திட்டத்தை முதலமைச்சர் இன்று துவக்கி வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சி
எஃப் எல் பல்புகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கவேண்டும் என வலியுறுத்தி ஐந்து
ஆண்டுகளுக்கு முன்னர் 13.11.2008 அன்று நான் சட்டப்பேரவையில் பேசியதை இங்கே தருகிறேன்:
திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!
நம்முடைய மின் பற்றாக்குறை நிலவரத்தைச்
சமாளிப்பதற்காக, இடைக்காலத்திலே கொண்டுவரப்பட்ட அந்த மின் கட்டண
உயர்வை, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பொது
மக்களும் இரத்து செய்யவேண்டுமென்று கோரிக்கை
விடுத்தபோது, அதை ஏற்றுக்கொண்டு, அந்தக்
கட்டண உயர்வை இரத்து செய்த,
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும்,
மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் அவர்களுக்கும்
முதலிலே என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்றைக்கு
மின் கட்டண உயர்வு இரத்தானதற்குப்
பிறகு, இப்போது மின் பற்றாக்குறையைப்பற்றி
தொடர்ந்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த
மின் பற்றாக்குறை பிரச்சினையைச் சமாளிப்பதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும்
பல ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. நாம் இன்றைக்குக் கொண்டுவந்த
புதிய மின் திட்டங்கள், உடனடியாக
நிறைவேற்றப்படாமல் இடையூறு ஏற்பட்டதற்கு, அங்கே
நிலங்களைக் கையகப்படுத்துவதில் நேர்ந்த பிரச்சினைகளும், எதிர்ப்புகளும்தான்
காரணம். இத்தகைய பிரச்சினைகள், குறிப்பாக
கடலூர் மாவட்டத்திலே, கடலூர் பவர் புராஜக்ட்,
அதுபோல நெய்வேலி நிலக்கரி நிறுவன விரிவாக்கத் திட்டம்
ஆகியவற்றிற்கு ஏற்பட்டபோது அங்கே பொது மக்களின்
பிரதிநிதிகளை அழைத்து மாவட்ட நிருவாகத்தின்
சார்பாகக் கூட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன. இப்படியான
நிலம் கையகப்படுத்துகிற பிரச்சினை வரும்போது மக்கள் அதிக விலை
கோருகின்ற நேரத்திலே, இப்போது இந்தியாவிலே மத்திய
அரசு அறிமுகப்படுத்தியிருக்கின்ற 2007
ஆம் ஆண்டுக்கான R&R Policy என்று
சொல்லப்படுகிற Resettlement and Rehabilitation Policy-ஐ நம்முடைய அரசாங்கம் நடைமுறைப்படுத்த
திட்டமிட்டு அதை அறிவித்திருக்கிறது. ஆனால்,
அது மட்டுமே இந்தப் பிரச்சினையைத்
தீர்த்துவிடுவதற்குப் போதுமானது அல்ல. இன்றைக்கு
ஜார்கண்ட், சட்டீஸ்கர் போன்ற சிறு சிறு
மாநிலங்கள் எல்லாம், மாநிலங்களுக்கென்று தனியே
R&R Policy -ஐ உருவாக்கி
இருக்கின்றன. அப்படி அந்தப் பாலிசியை
உருவாக்குகின்றபோது, இத்தகைய
நிலம் கையகப்படுத்துகிற பிரச்சினை வருகின்றபோது, கூடுதலாகத் தொகையை வழங்கி அந்த
நிலங்களைக் கையகப்படுத்துகின்ற வாய்ப்பு அங்கே ஏற்பட்டிருக்கிறது.
பிற்பகல்
1-25
அதுபோல,
தமிழகத்திலும் நம்முடைய மாநிலத்திற்கென்று மத்திய
அரசுக்கு அப்பாற்பட்டு Resettlement and Rehabilitation Policy
உருவாக்கப்படவேண்டும். அப்படி உருவாக்கப்பட்டால்தான் இத்தகைய நிலம்
கையகப்படுத்துகிற பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள
விரும்புகின்றேன்.
அடுத்ததாக,
நம்முடைய மின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்குப்
புதிதாக மின் உற்பத்தியை எப்படியெல்லாம்
செய்யலாம் என்று யோசிக்கின்ற அதே
நேரத்திலே, ஏற்கெனவே நம்முடைய பயன்பாட்டை எந்த அளவுக்குக் குறைத்துக்கொள்ளலாம்
அல்லது கட்டுப்படுத்தலாம்; வீணாகச்
செலவழிகிற மின்சாரத்தை எப்படி மிச்சப்படுத்தலாம் என்று
யோசிப்பதும் மிக முக்கியமானது.
சில மாதங்களுக்கு முன்னாலே உத்தரப்பிரதேச மாநிலத்திலே எடுக்கப்பட்டிருக்கிற நடவடிக்கையை நான் இங்கே சுட்டிக்காட்ட
விரும்புகின்றேன். கடந்த
ஜூலை மாதத்திலே உத்தரப்பிரதேச மாநிலம் ஒரு அறிவிப்பைச்
செய்திருக்கிறது. அரசாங்க அலுவலகங்கள், அரசு
சார்பான அலுவலகங்கள் எல்லாவற்றிலும் பல்புகளைப் பயன்படுத்தக் கூடாது. C.F.L என்று
சொல்லப்படுகின்ற Compact Fluorescent Lamp-களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல்
பல்புகளை முற்றாகத் தடை செய்திருக்கின்றது.
அப்படிச் செய்ததன்மூலம் நாள் ஒன்றுக்கு 100 மெகா
வாட் மின்சாரத்தை அந்த மாநிலத்திலே
மிச்சப்படுத்துகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல்,
இதே முறையை வீடுகளிலும் பின்பற்றினால்
நாள் ஒன்றுக்கு 800 மெகா வாட் மின்சாரம்
அங்கே மிச்சப்படுத்தப்படும் என்று திட்டமிட்டு, அதற்கான
செயல்பாட்டிலே அவர்கள் இறங்கியிருக்கின்றார்கள். புதிதாக
மின்னிணைப்புகள் பெற வேண்டுமென்று சொன்னால்,
அந்த வீடுகளிலே பல்புகளுக்குப் பதிலாக சி.தி.லி. மட்டும்தான் பயன்படுத்தப்படும்
என்று உத்தரவாதம் அளித்தால்தான் அங்கே புதிய மின்னிணைப்புகள் வழங்கப்படுகின்றன. அப்படி
ஒரு அறிவிப்பை நம்முடைய மாநில அரசும் செய்வதற்கு
முன்வர வேண்டும். ஏற்கெனவே நம்முடைய மின்சாரத் துறை சார்பாக C.F.L
ஐப் பயன்படுத்துவதற்கான
அறிவிப்புகள் செய்யப்பட்டிருந்தாலும் அது Optional ஆகத்தான் இருக்கிறது.
அது நுகர்வோர்களுடைய விருப்பம் சார்ந்ததாக இருக்கிறது. அது
கட்டாயமாக்கப்படவேண்டும்.
அதிலும்
குறிப்பாக, மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள்
இதிலே முன்முயற்சி எடுத்து உள்ளாட்சித் துறை
சார்பாக செய்யப்படுகின்ற அனைத்துப் பணிகளுக்கும் குறிப்பாக பஞ்சாயத்துகளிலே மின்
விளக்குகள் பொருத்துகின்ற பணிகள் உட்பட அனைத்துப்
பணிகளுக்கும் இந்த C.F.L.-ஐப்
பயன்படுத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல்,
நாம் இன்றைக்கு இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு இலவச
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே
60 இலட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை
வழங்கியிருக்கின்றோம். மேலும்
40 இலட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு
இப்பொழுது நாம் அனுமதியளித்திருக்கின்றோம். இந்த
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கும்போது அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளைப்
பெறுகிறவர்கள், வீடுகளிலே, C.F.L. இருக்க வேண்டும்
என்பதையும் ஒரு நிபந்தனையாக மாற்றினால்
நிச்சயமாக தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற கூடுதல் மின் செலவை
நாம் இந்த , C.F.L..-ஐப்
பயன்படுத்துவதன்மூலம் ஈடுகட்ட முடியும்.
அதுமட்டுமல்லாமல்,
இப்போது தொழிற்சாலைகளிலே ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவதற்கு நாம் அனுமதித்திருக்கின்றோம். ஜெனரேட்டர்களுக்கு
மானியமும் நம்முடைய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இப்போது சர்வதேச சந்தையிலே
கச்சா எண்ணெய் விலை பாதியாகக்
குறைந்திருக்கிறது. ஒரு பேரல்
57 டாலர் என்கின்ற
அளவுக்கு விலை வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்த
நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு நாம் இந்த ஜெனரேட்டர்களுக்கு
வழங்குகின்ற டீசல் மொத்தத்திற்கும் மத்திய
அரசு வரி விலக்கு அளிக்கவேண்டும்
என்கின்ற கோரிக்கையை நாம் முன்வைத்து மத்திய
அரசிடமிருந்து அந்த டீசலுக்கான வரி
விலக்கைப் பெறவேண்டும். அப்படிச் செய்தோமேயானால் நம்முடைய மாநிலத்திற்கான நிதி இழப்பையும் ஈடுகட்ட
முடியும். . .
மாண்புமிகு பேரவைத் தலைவர்:
திரு. ரவிக்குமார், உரையை முடியுங்கள். நேரம்
ஆகிவிட்டது.
திரு. து. ரவிக்குமார்:
அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு நமக்கு மத்திய மின்
பகிர்மானத்திலிருந்து வரவேண்டிய மின்சாரத்திலே குறைவு ஏற்பட்டதனால்தான் இத்தகைய
தடையை நாம் இங்கே சந்தித்துக்
கொண்டிருக்கின்றோம். இதனிடையே
ஒரு செய்தி எனக்கு மின்னஞ்சலிலே
வந்தது. அதிலே
நமது மாநிலத்தைச் சேர்ந்த கார்வேந்தன் என்கிற
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எம்.பி.
அவர்கள் பிரதிநிதித்துவம் செய்து அவர் கோரிக்கை
விடுத்து, இன்றைக்கு 600 மெகா வாட் அளவுக்கு மின்சாரம்.
. .
பிற்பகல்
1-30
மாண்புமிகு பேரவைத் தலைவர்:
பேரவையின் முன்னனுமதியுடன் பேரவையின் அலுவல் நேரம் நீட்டிக்கப்படுகிறது. உரையை
முடியுங்கள். மணி
1-30 ஆகிவிட்டது.
திரு. து. ரவிக்குமார்:
மத்திய அரசு வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக
ஒரு செய்தி வந்து இருக்கிறது.
அது உண்மையா என்பதையும் நான்
உங்கள் வாயிலாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இத்தகைய நடவடிக்கை எடுத்தால்
நிச்சயமாக மின் பற்றாக்குறை இல்லாத
மாநிலமாகத் தமிழகம் திகழும் என்ற
ஒரு கருத்தை மட்டும் தெரிவித்து,
வாய்ப்புக்கு நன்றி சொல்லி அமைகிறேன்,
வணக்கம்.
No comments:
Post a Comment