Thursday, December 12, 2013

பாரதிய ஜனதா கட்சியுடன் தி.மு.க சேரலாமா?


 

காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம் என்பதை ஒப்புக்கொள்ளும் தி.மு.க தொண்டர்கள் சிலர் பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்தால் நல்லது என்று கருதுகின்றனர். அவர்களைவிடவும் பா.ஜ.க தரப்பில் அந்த ஆசை அதிகமாகவே இருக்கிறது.


பா.ஜ.கவுக்கென்று தமிழ்நாட்டில் பெரிய வாக்குவங்கி ஏதுமில்லை.கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி 194 இடங்களில் போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. அது பெற்ற வாக்குகள் வெறும் 2% மட்டும்தான்.  மத்தியில் ஆட்சியிலிருந்தபோது அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த அதி.மு.கவும், தி.மு.கவும் உருவாக்கித் தந்த செல்வாக்கையும்கூட அக்கட்சியால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.


நரேந்திர மோடிக்கு ஆதரவாகத் திட்டமிட்டு உருவாக்கப்படும் ஊடக மாயையின் விளைவால் ஒருவேளை தி.மு.கவினர் இப்படி நினைக்கலாம். சமூக ஊடகங்களில் மோடி அலை எப்படி போலியாக உருவாக்கப்படுகிறது என்பதை அண்மையில்  ’கோப்ராபோஸ்ட்’ என்ற இணையதளம் அம்பலப்படுத்தியது. தமிழ்நாட்டில் மோடிக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதாக ஜூனியர் விகடன் போன்ற  இதழ்கள் செய்தி வெளியிடுவதும்கூட இப்படியான திட்டமிட்ட மோசடியோ என சந்தேகிக்க வேண்டியுள்ளது . 


ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் மோடி அலையின் வரையறையை உலகுக்குத் தெரியப்படுத்திவிட்டன.சத்திஸ்கரில் காங்கிரஸ் தோற்றது அதன் உள்கட்சித் தகராறால்தான். மத்தியப்பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6-7 சதவீத வாக்குகள் இருந்தன. தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தால் அந்த மாநிலங்களிலும் பாஜக    வெற்றி பெற்றிருக்க முடியாது. டெல்லியில் தொடர்ந்து மூன்றுமுறை ஆட்சியில் காங்கிரஸ் இருந்துவிட்டது. அங்கு மக்களொரு மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் பாஜகவை ஒரே மாற்றாகக் கருதவில்லை. கடந்த முறை பாஜகவிடமிருந்த பல இடங்களில் இப்போது ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருப்பதே அதற்கொரு சான்று. இந்த நான்கு மாநிலங்களிலும் திரு. நரேந்திர மோடி 45 தேர்தல் பேரணி- பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறார். உண்மையிலேயே மோடி அலை வீசியிருந்தால் எல்லா மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பாஜக அடைந்திருக்கவேண்டும். அப்படி நடக்காததிலிருந்தே மோடி அலை என ஒன்று இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.


தற்போது தி.மு.கவுக்கு ஆதரவாக இருக்கும் சிறுபான்மையினரும் தலித்துகளும் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில்  35 % உள்ளனர். பாஜகவுடன் சேரவில்லையென்றால் அவர்கள் அத்தனைபேரும் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் பாஜகவுடன் சேர்ந்தால் அவர்களில் ஒரு சதவீதத்தினர்கூட திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது உறுதி. 35% ஆதரவை 2% ஆதரவுள்ள பா.ஜ.க வுக்காக இழப்பது தேவைதானா என்பதையும் தி.மு.க சிந்தித்துப் பார்க்கவேண்டும்.அது 2016 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.


1999 தேர்தலுக்கும் இப்போதைய தேர்தலுக்கும் பாஜக நிலைப்பாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை திமுக கவனிக்கவேண்டும். அப்போது கூட்டணி அமைப்பதற்காக பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளத்தக்க சாத்வீக முகம்கொண்ட வாஜ்பாயியை பாஜக பிரதம வேட்பாளராக முன்னிறுத்தியது. இப்போது அந்த அணுகுமுறை தேவையில்லையென முடிவுசெய்து இருப்பதிலேயே மிகவும் தீவிரவாதத் தன்மை கொண்டவரெனக் கருதப்படும் மோடியை அது பிரதம வேட்பாளராக அறிவித்திருக்கிறது. இதை பாஜகவின் அறிவிப்பு என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்சின் அறிவிப்பு என்பதே பொருத்தமாயிருக்கும். இந்த மாற்றத்தின்காரணமாகவே இப்போது பாஜகவுக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. 


1999 இல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தி.மு.க செய்த தவறை மீண்டும் அது செய்துவிடக்கூடாது. அப்படிச் செய்தால் எதிர்காலத்தில் தி.மு.க தனக்கென்று சொல்லிக்கொள்ள எந்தவொரு தனித்தன்மையும் இல்லாமல் போய்விடும்.


அதிமுக மத்திய அரசில் அங்கம் வகிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சிலர் கூறும் கருத்தின் பின்னால் பொதுநலம் இல்லை, சுயநலமே அடங்கியிருக்கிறது. அதிமுகவுக்கு அதிக எண்ணிக்கையில் இடம் கிடைக்காமல் தடுப்பதற்கு பாஜக கூட்டணி உதவாது. மாறாக அது மேலும் திமுகவை பலவீனப்படுத்தி " சுயநலத்துக்கான கூட்டணி" என்ற அதிமுகவின் பிரச்சாரத்துக்குத் தீனியாக அமைந்துவிடும். 


பாஜகவுக்கு வாக்களிப்பார்களெனக் கருதப்படும் 18+ வயதுகொண்ட புதிய வாக்காளர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாலேயே திமுகவை ஆதரித்துவிடுவார்கள் எனக் கூறிவிடமுடியாது. அவர்களை மரபான அரசியல் வழிகளால் ஈர்க்க முடியாது. அதற்கான யுக்திகளைக் கண்டறிவதும் அதற்கு உகந்த வகையில் கட்சியில் சீர்திருத்தங்களைச் செய்வதும்தான் இன்றைய உடனடித் தேவை என்பதை திமுக புரிந்துகொண்டால் நல்லது!

No comments:

Post a Comment