இயற்கை வேளாண்மைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர், வேளாண்துறை சார்ந்த பிரச்சனைகளைக் கவனப்படுத்துவதில் ஓய்வு ஒழிவின்றி செயல்பட்டவர்- நம்மாழ்வார் அவர்கள் காலமான செய்தி அறிந்து துயருற்றேன்.
காவிரி சிக்கல் தொடர்பாக தந்தி தொலைக்காட்சியின் விவாதத்தில் பங்கேற்றபோதுதான் இறுதியாக அவரை சந்தித்தேன். நாகை மாவட்டத்தில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு எதிரான போராட்டத்தில் முனைப்பாக அவர் ஈடுபட்டிருந்ததை செய்திகளில் பார்த்து வந்தேன். ஆரோக்கியமாகத்தான் தெரிந்தார். தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்த அவரைப் பார்த்தவர்கள் அவரது வயதைக் கவனித்திருக்க மாட்டார்கள்.
இயற்கை வேளாண்மைமூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றபோதிலும் நாடுமுழுவதும் முழுமையாக அந்த முறைக்கு மாறிவிடமுடியும் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது. அப்படி மாறினால் மீண்டும் பஞ்சத்தில் பல்லாயிரக் கணக்கானோர் மடியக்கூடும் என்ற அச்சமும் எனக்கு உண்டு. இயற்கை வேளாண்மை என்பது வெறும் தனிமனித விருப்பம் அல்ல. நிலவுடைமை, நிலங்களின் பயன்பாடு, அரசாங்கக் கொள்கை முதலானவற்றோடு தொடர்புகொண்டது. இந்திய வேளாண்மையைத் தீர்மானிப்பதில் பருவநிலைகளைவிட அரசாங்கமே முக்கிய பங்கு வகிக்கிறது என்று கார்ல் மார்க்ஸ் கூறிய கருத்தை ஏற்பவன் நான். இருப்பினும் திரு . நம்மாழ்வார் அவர்களின் கொள்கைப் பிடிப்பை நான் மதிக்கிறேன்.
இயற்கை வேளாண்மையைப் பிரபலப்படுத்தியதைவிடவும் காலியாகிக்கொண்டிருக்கும் கிராமங்கள் குறித்தும், வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் வேளாண்மை குறித்தும் நகரவாசிகளின் கவனத்தை ஈர்த்தவர் என்ற அம்சமே எனக்கு முக்கியமாகப் படுகிறது. அவரது பணி நீண்டகாலத்துக்கு நினைக்கப்படும். அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
No comments:
Post a Comment