எழுத்தாளர் அம்பை இன்று ( 17.11.2014) தனது 70 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சற்றுமுன் அவரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். தனது பிறந்த நாளைக் கொண்டாட குடும்பத்தினரோடு கோவா வந்திருப்பதாகச் சொன்னார்.
தமிழ் இலக்கிய உலகில் பெண் ஒருவர் எழுத்தாளராக அங்கீகாரம் பெறுவது அத்தனை சுலபமல்ல. அண்மையில் ஒரு எழுத்தாளர் (திரைப்பட வசனகர்த்தா ?) விளம்பரத்துக்காகக் கிளப்பிய சர்ச்சையில் எப்படியெல்லாம் பெண் எழுத்தாளர்கள் அவதூறு செய்யப்பட்டனர் என்பதை நாம்
பார்த்தோம். அந்த நேரத்தில் அறச்சீற்றத்தோடு அவர் எதிர்வினை புரிந்ததையும் பார்த்தோம்.
அம்பை எழுத்துலகில் நுழைந்த காலமும்கூட பொற்காலம் இல்லை. ஆனால் அவரது உழைப்பும் படைப்புத் திறனும் அவருக்கென ஒரு இடத்தைத் தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் உருவாக்கித் தந்திருக்கிறது.
அம்பை படைப்பிலக்கியங்களை உருவாக்கியவர் மட்டுமல்ல. ஆழமான ஆய்வுக் கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். பெண் எழுத்தாளர்கள், அளுமைகளை அடையாளம்
கண்டு அவர்களின் நேர்காணல்களை ஒலி ஒளி ஆவணங்களாகத் தொகுத்து அவற்றுக்கென மும்பையில் ஒரு ஆவணக் காப்பகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். தமிழில் எழுதும் இளம் பெண் படைப்பாளிகளை அவரைப்போல் ஊக்குவிப்பவர்கள் எவரும் இருக்க முடியாது.
மணற்கேணி 26 ஆவது இதழ் ஈழத் தமிழ் அறிஞர் எம்.ஏ.நுஃமான் சிறப்பிதழாக டிசம்பரில் வெளிவருகிறது. அதற்கு அடுத்த இதழை அம்பை 70 என்ற தலைப்பில் சிறப்பிதழாகக் கொண்டுவர மணற்கேணி விரும்புகிறது. அதற்குப் பங்களிப்புச் செய்யுமாறு படைப்பாளிகளையும் ஆய்வாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கட்டுரைகளை manarkeni@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
- ரவிக்குமார்
ஆசிரியர், மணற்கேணி
No comments:
Post a Comment