Monday, November 10, 2014

அறிஞர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனுக்கு அஞ்சலி - ரவிக்குமார்


தமிழ்நாட்டில் அறிஞர் என மதிக்கத்தக்க ஒருசிலருள் முக்கியமானவரான எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இன்று (10.11.2014) மாலை 4 மணிக்கு டெல்லி AIIMS மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை அங்கு பேராசிரியராக இருக்கும் திரு. சந்திரசேகர் மூலம் அறிந்தேன். நேற்று இரவு ரத்த வாந்தி எடுத்த அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால் அங்கு அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என பேரா.சந்திரசேகர் தெரிவித்தார். 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பாண்டியன் திராவிடக் கருத்தியலை ஏற்றுக்கொண்டு குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்தவர். எகனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லியில் ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது Image Trap என்ற ஆங்கில நூல் எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தை முன்வைத்து தமிழக அரசியலில் சினிமாவின் செல்வாக்கை ஆராய்ந்த முக்கியமானதொரு நூலாகும். 

பாண்டியனுக்கும் எனக்குமான உறவு நட்பும் பிணக்கும் கொண்டது. திராவிட அரசியல் குறித்த எனது கருத்துகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. அதுபோலவே எனக்கும் அவரது அணுகுமுறைமீது விமர்சனங்கள் இருந்ததுண்டு. திமுகவைப் பற்றி உயர்ந்த மதிப்பை ஏற்படுத்தும் விதமாக ஆங்கிலத்தில் பல கட்டுரைகளை எழுதிய பாண்டியன், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். ஈழப் பிரச்சனை தொடர்பான எனது கட்டுரைகளின் தொகுப்பான ' தமிழராய் உணரும் தருணம்' என்ற நூலுக்கு அவர் முன்னுரை எழுதித் தந்ததை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். கடந்த 7 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒரு இலக்கிய மாநாட்டில் பேச என்னை அழைத்திருந்தார்கள். நான் போகமுடியவில்லை. எழுத்தாளர் அம்பைதான் அந்த அமர்வை ஒருங்கிணைத்தார். மாற்று ஏற்பாடாக யாரைக் கூப்பிடலாம் என அம்பை என்னிடம் கேட்டபோது நான் பாண்டியன் அல்லது ராஜன்குறையைக் கூப்பிடுங்கள் என்றேன். 

உடல்நலம் குறித்து கொஞ்சமும் அவர் அக்கறை காட்டியதில்லை. JNU இல் வாய்த்த  தனிமையை விரட்ட அவர் கையாண்ட வழிமுறை அவரது உடல் நலத்துக்குக் கேடாகிவிட்டது. அவர் எழுதத் திட்டமிட்டிருந்த பல நூல்களை அவர் எழுதாமலே போய்விட்டார். பாண்டியனின் இடத்தை நிரப்பக்கூடிய இன்னொருவர் இல்லை என்பதை நினைக்கும்போது அவரால் உண்டான வெற்றிடம் பெருகுகிறது. அறிஞர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களுக்கு எனது அஞ்சலி. 

1 comment:

  1. சில உயர்ந்த மனிதர்களை இறந்த பின்னரே உலகம் அடையாளம் காட்டுகின்றது?!.

    ReplyDelete