Saturday, November 22, 2014

ஆணவக் கொலைகளின் காலத்தில் தலித்துகளும் தேர்தலும்- ரவிக்குமார்


தனித் தொகுதியில் இருக்கும் தலித் வாக்குகள் அவற்றில் போட்டியிடும் தலித் வேட்பாளர்களுக்கு இடையே பிரிகின்றன. அதனால் அங்கே தலித் அல்லாதவர்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கின்றன. எனவே தலித் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர் அங்கே தேர்ந்தெடுக்கப்படுவது சிரமம். 

பொதுத் தொகுதியில் தலித் ஒருவர் நிறுத்தப்பட்டால் அங்கு தலித் வாக்குகள் அவரை நோக்கி ஈர்க்கப்பட்டால் அவருக்கு தலித் அல்லாத ஜனநாயக சக்திகள் கொஞ்சம் ஆதரவு தந்தால்கூட அவர் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது. 

தற்போதிருக்கும் தேர்தல் முறையில் தனித் தொகுதியில் தலித்துகளுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய உண்மையானதொரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படவேண்டுமெனில் தலித் மக்களின் நியாயத்தை உணர்ந்த தலித் அல்லாத ஜனநாயக சக்திகளின் ஆதரவு முக்கியம். அந்த ஆதரவைப் பெறுவதற்கு இப்போதிருக்கும் கூட்டணி அரசியல் முழுமையாகக் கைகொடுக்கும் எனச் சொல்லமுடியவில்லை. 

திமுகவும் அதிமுகவும் பெரும்பான்மையாக பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளையே சார்ந்திருக்கின்றன. பொதுத் தொகுதிகளில் நிறுத்தப்படும் தமது வேட்பாளர்களுக்கு தலித் வாக்குகளைக் கொண்டுவந்து சேர்க்கும் முகவர்களாகவே தலித் கட்சிகளை அவை பார்க்கின்றன. பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்தினால் அந்தத் தொகுதியில் மட்டுமின்றி மற்ற தொகுதிகளிலும்கூட அது தலித் அல்லாத வாக்காளர்களை ஆத்திரமடையச் செய்துவிடும் என அஞ்சுகின்றன. இந்த நிலை மாறவேண்டுமெனில் சாதி உணர்வைக் கண்டு அஞ்சாத, தான் நிறுத்துகிற வேட்பாளருக்குத் தனது கட்சியின் வாக்குகளைத் திருப்பக்கூடிய ஆற்றல்கொண்ட தலைமை அந்தக் கட்சிக்கு இருக்கவேண்டும். அல்லது தலித் அல்லாத வாக்காளர்களிடையே ஜனநாயக சக்திகள் கணிசமாக இருக்கவேண்டும். 

தற்போது கூட்டணியில் இடம்பெற்று தலித் கட்சிகளின் வேட்பாளர்கள் ஓரிரு இடங்களில் வெற்றிபெறுவது பெருமளவு பரஸ்பர வெற்றிக்கான உடன்பாடாக இருக்கிறதேயன்றி தலைமையின் சொல்லுக்குக் கட்டுப்படுவதாலோ ஜனநாயக முதிர்ச்சியினாலோ அல்ல என்றுதான் தோன்றுகிறது. இந்தப் பரஸ்பர வெற்றிக்கான உடன்பாடு தலித் கட்சிகள் தலித் வாக்குகளை தமக்குப் பின்னால் திரட்டக்கூடியவரை மட்டும்தான் செல்லுபடியாகும். 

இந்த கூட்டணி நடைமுறையில் தலித் கட்சிகளுக்கு மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. தாம் இடம்பெறும் கூட்டணிக் கட்சியிலுள்ள தலித் அல்லாதவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவை தலித் பிரச்சனைக்கு அழுத்தம் தராமல் சாத்வீகமாக நடந்துகொள்ளவேண்டும். அப்படி நடந்துகொண்டால் காலப்போக்கில் அவை தலித் வாக்குகளைத் தமக்குப் பின்னால் திரட்டமுடியாத நிலை ஏற்படும். அந்த நிலையில் தலித் வாக்குகளை காசு கொடுத்தோ கவர்ச்சியின்மூலமோ வாங்கிக்கொள்ளலாம் என பெரிய கட்சிகள் எண்ணக்கூடும். அதனால் தலித் கட்சிகளுக்குக் கூட்டணி வாய்ப்பும் பேர சக்தியும் குறைந்துபோகும். 

இதற்கான தீர்வுதான் என்ன? 

1. தலித் கட்சிகள் தலித் மக்களின் உரிமைகளுக்காக சமரசமின்றிப் போராடவேண்டும்.  

2.  பொதுப் பிரச்சனைகளைக் கையிலெடுத்துப் போராடவேண்டும். அரசியல் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். ஆனால், அதற்காகக் கருத்தியல் சமரசங்களை செய்துகொள்ளக்கூடாது. 

3. தலித் மக்களின் நியாயத்தை உணர்ந்த தலித் அல்லாத ஜனநாயக சக்திகளை அடையாளம் கண்டு அவர்களோடு தோழமை கொள்ளவேண்டும். 

கோட்பாட்டளவில் சுலபமாகத் தெரியும் இந்தத் தீர்வை நடைமுறைப்படுத்துவது ஆணவக் கொலைகளின் காலத்தில் அவ்வளவு எளிதானதா ?

No comments:

Post a Comment