Tuesday, December 2, 2014

அருந்ததியின மக்களின் உள் ஒதுக்கீட்டை ஆதரிப்போம்!


இட ஒதுக்கீடு என்பது தலித் மக்களின் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்துவிடாது. கடந்த 67 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முழுமையாக எந்தத் துறையிலும் நிறைவுசெய்யப்பட்டதில்லை. பின்னடைவுக் காலிப் பணியிடங்களை நிரப்புவதாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய மாநில அரசுகள் அறிவிப்புச் செய்தாலும் அது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. 

தலித்துகளிலும்கூட குடிபெயர்ந்தோருக்கு இட ஒதுக்கீடு இல்லை, கிறித்தவ மதத்தைத் தழுவியோருக்கு இட ஒதுக்கீடு இல்லை. இதற்கெல்லாம் போராடவேண்டிய நாம் இருக்கின்ற ஒருசில பதவிகளுக்காக சொந்த சகோதரர்களுக்கு இடையே பகைமையை வளர்க்கக்கூடாது. 

எஸ்சி பிரிவில் இருக்கும் எண்ணிக்கை பலம் குறைந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீட்டின் பயனை கல்வி, வேலைவாய்ப்புகளிலும் அரசியல் தளத்திலும் உரிய அளவில் பெற முடியவில்லை. இப்போது அருந்ததியின மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உள் ஒதுக்கீடு சற்றே அவர்களுக்கு ஆறுதலை அளித்துவருகிறது. இதை எஸ்சி பிரிவிலிருக்கும் மற்றவர்கள் வரவேற்று ஆதரிக்கவேண்டும். அரசியல் தளத்திலும் அவர்களது பங்கேற்பை ஊக்குவிக்கவேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும் சட்டமன்ற பாராளுமன்றத் தேர்தல்களிலும் அருந்ததியின மக்கள் உரிய அளவில் பங்கேற்கும் விதமாக அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குமாறு அரசியல் கட்சிகளை வலியுறுத்தவேண்டும். அதைவிடுத்து அவர்களது உரிமைக்கான கோரிக்கையைப் போட்டியாகப் பார்க்கக்கூடாது. 

தற்போது இட ஒதுக்கீடு இல்லாத பிற பகுதிகளுக்கும் அதை விரிவுபடுத்துவதற்குப் போராடவேண்டிய தலித் சகோதரர்கள் தமக்குள் போட்டி போட்டுக்கொண்டு பகைமையை வளர்ப்பது சாதி ஒழிப்பு என்ற லட்சியத்துக்கு ஊறு விளைவிப்பதாகவே முடியும். 

No comments:

Post a Comment