Tuesday, December 9, 2014

புனித நூல் என அறிவிக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டா? - ரவிக்குமார்


பகவத் கீதையைப் புனித நூலாக அறிவிக்கப்போகிறோமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சொன்னதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் கருத்துகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: 

1. இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு. இங்கே இந்து மதத்துக்கு ஆதரவாகப் பேசும் பகவத்கீதையை தேசியப் புனித நூலாக அறிவித்தால் மற்ற மதத்தினரும் அதே போலக் கோரிக்கையை முன்வைக்கலாம். அதனால் மதரீதியான பகை வளரும். 

2. பகவத் கீதை வருணாசிரமக் கொள்கையை ஆதரிக்கிறது. எனவே அதை ஏற்க முடியாது. 

மேற்சொன்ன இரண்டு வாதங்களையும் முன்வைப்பவர்கள் பகவத் கீதைக்குப் பதிலாக திருக்குறளையோ அரசியலமைப்புச் சட்டத்தையோ புனித நூலாக அறிவித்தால் ஏற்றுக்கொள்வார்கள் என்பது அவர்களின் பேச்சிலிருந்து தெரிகிறது. 

பகவத் கீதையைப்போல ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தாத , இந்து மதத்தை மட்டும் ஆதரிக்காத நூல்கள் தான் திருக்குறளும் அரசியலமைப்புச் சட்டமும். அதில் மறுப்பு இல்லை. ஆனால் எவ்வித விமர்சனத்துக்கும் அப்பாற்பட்ட புனித நூல் என்னும் தகுதியை அவற்றுக்கு வழங்கமுடியுமா? என்பதை நாம் சிந்திக்கவேண்டும். 

இதுவரை இது தொடர்பாகக் கருத்து கூறியவர்கள் எவரும் ' புனித நூல் ' என அறிவிக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டா என்ற கேள்வியை எழுப்பியதாகத் தெரியவில்லை. 

இந்தியாவின் தேசியக் கொடி, தேசிய சின்னம் ஆகியவை அரசியலமைப்புச் சட்டத்தால் முடிவு செய்யப்பட்டவை. 1950 ஆம் ஆண்டு குடியரசு நாளில் அறிவிக்கப்பட்டவை. தேசிய கீதம் அரசியலமைப்புச் சட்ட அவையால் ஏற்கப்பட்டது. தேசிய சின்னங்களை வேண்டுமானால் மத்திய அரசு அறிவிக்கலாமே தவிர தேசியப் புனித நூல் (National Scripture) என அறிவிக்க அதற்கு அதிகாரம் எங்கும் வழங்கப்படவில்லை. அப்படியான அறிவிப்பைச் செய்வதற்கு இப்போதிருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. 

வாடிகனில் புனிதர் பட்டம் வழங்குவதைப்போல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசு செய்ய முடியாது. புனித நூல் என ஒன்றை அறிவிக்கும் முயற்சி இந்தியாவை மதம் சார்ந்த நாடாக மாற்றுவதற்கான தந்திரமாகும். எதுவொன்றையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக்குவது சுதந்திர வெளியைக் குறுகச்செய்யும் பாசிச நடவடிக்கையே என்பதைப் புரிந்துகொள்வோம். 

எனவே, பகவத் கீதையை மட்டுமல்ல வேறு எந்தவொரு நூலையுமே புனித நூலாக அறிவிக்கக்கூடாது ! அதற்கு உங்களுக்கு அதிகாரமில்லை என வலியுறுத்துவோம்!

1 comment: