இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்பு நான்குமுறை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 1952,1963,1973,2002 ஆகிய ஆண்டுகளில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையங்கள் அமைக்கப்பட்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
வாக்காளர்களின் எண்ணிக்கையை சமச்சீராக வைப்பதற்கும், தொகுதிகளின் எல்லைகளை வரையறுப்பதற்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவுசெய்வதற்கும் இந்த மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் தனித் தொகுதிகளை சுழற்சி முறையில் தீர்மானிப்பதற்கும் இது தேவைப்படுகிறது. தொகுதிகளின் எல்லைகள் தீர்மானிக்கப்பட்டு வாக்காளர்களின் எண்ணிக்கையும் முடிவுசெய்யப்பட்ட பின்னர் எந்தெந்த தொகுதிகளில் எஸ்சி/எஸ்டி வாக்காளர்கள் அதிகம் இருக்கிறார்களோ அவை தனித் தொகுதிகள் என அறிவிக்கப்படும்.
ஒரே தொகுதி மீண்டும் மீண்டும் தனித் தொகுதியாக இருந்தால் அங்கிருக்கும் பிற சமூகத்தினர் போட்டியிட வாய்ப்பில்லாமல் போய்விடும் என்பதால் மேலிருந்து கீழ் என்ற அணுகுமுறையில் தனித் தொகுதிகள் முடிவுசெய்யப்படுகின்றன. அதனால் எஸ்சி/எஸ்டி வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள் முதலில் தனித் தொகுதிகளாக இருந்தால் அவை மாற்றப்பட்டு அதற்கு அடுத்து அதிகம் உள்ள தொகுதிகள் தனித் தொகுதிகளாக்கப்படுகின்றன.
இந்த சுழற்சி முறையில் சில நல்ல அம்சங்கள் இருந்தபோதிலும் எஸ்சி / எஸ்டி மக்களுக்குக் கெடுதல்களும் உள்ளன. இந்தியாவில் உள்ள பாராளுமன்ற சட்டமன்றத் தொகுதிகளில் எஸ்சி/எஸ்டி வாக்காளர்கள் 50% க்கும் கூடுதலாக இருப்பதென்பது மிகவும் அரிதான ஒன்றாகும். கணிசமான அளவில்
அவர்கள் இருக்கும் தொகுதிகளிலேயே அவர்களது வாக்குகளைவிட பிற சாதியினரின் வாக்குகள்தாம் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. அப்படியான சூழலில் அவர்கள் மிகவும் சிறுபான்மையினராக இருக்கும் தொகுதிகள் தனித் தொகுதிகள் ஆக்கப்பட்டால் அங்கு அவர்களது வாக்குகளுக்கு மதிப்பு மிக மிகக் குறைவாகிவிடுகிறது. அங்கெல்லாம் பிற சாதியினரின் கையாட்களே வெற்றிபெற முடியும். இது தனித் தொகுதி முறையையே கேலிக்கூத்தாக்கிவிடுகிறது.
கடந்தமுறை தொகுதி மறுவரையறை செய்யப்பட்டபோது அதற்கான குழுவில் இடம்பெற்றிருந்த பெரிய கட்சிகளின் பிரதிநிதிகள் தமக்கு ஏற்றபடி தொகுதிகளை வரையறுத்துவிட்டார்கள். தனித் தொகுதிகளைத் தீர்மானிப்பதிலும்கூட எந்தவொரு தர்க்கமும் பின்பற்றப்படவில்லை. இதில் மணிசங்கர் அய்யர் செய்த குளறுபடிகள் ஏராளம். அவரால்தான் சிதம்பரம் பாராளுமன்ற தனித்தொகுதி கடலூர், பெரம்பலூர், அரியலூர் என மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிற அவலம் ஏற்பட்டது. தலித் கட்சிகள் அதைப்பற்றிப் போதிய அக்கறை காட்டி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் இந்த நிலையை மாற்றியிருக்கலாம்.
இந்த மறுசீரமைப்பில் இன்னொரு சதித்திட்டமும் நிறைவேறியிருக்கிறது. முஸ்லிம்கள் கணிசமாக இருக்கும் தொகுதிகளைத் திட்டமிட்டு தனித் தொகுதிகளாக்கியிருக்கிறார்கள். அதன்மூலம் அங்கெல்லாம் முஸ்லிம்கள் தமக்கு சீட் கேட்கும் வாய்ப்பைக்கூட இழந்துவிட்டனர்.
2002 ஆம் ஆண்டு மறுசீரமைப்பு சட்டத்தில் திருத்தம்கொண்டுவந்த மத்திய அரசு 2026 வரை தொகுதி மறுசீரமைப்பு இல்லை எனவும் அதற்கு அடுத்ததாக வரும்
மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அடுத்த மறுசீரமைப்பு ஆணையம்
அமைக்கப்படும் எனவும் தெரிவித்துவிட்டது. அதாவது 2031 மக்கள்ததொகைக் கணக்கெடுப்புக்குப் பின்னர்தான் இனி தொகுதி
மறுவரையறை செய்யப்படும். இது மிகப்பெரிய அநீதியாகும். பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தொகுதிகள் சீரமைக்கப்பட்டால்தான் வாக்காளர்களின் எண்ணிக்கை சமச்சீராக இருக்கும். இப்போதே ஒரு பாராளுமன்றத் தொகுதியில் 10 லட்சம் வாக்காளர்கள் இன்னொரு தொகுதியில் 15 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இன்னும் இருபது ஆண்டுகளில் அது பல மடங்காகப் பெருகும். தொகுதிக்குத் தொகுதி வித்தியாசமும் அதிகரிக்கும். அது பிரதிநிதித்துவத்தில் ஏற்றத்தாழ்வை அதிகரிக்கச் செய்யும்.
காங்கிரஸ் அரசின் மக்களநலத் திட்டங்களையும் சட்டங்களையும் மாற்றுவதில் முனைப்புகாட்டும் பாஜக அரசு தற்போதிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதியஆணையத்தை அமைக்குமா? அதற்காக அரசியல் கட்சிகள் குரல் கொடுப்பார்களா? தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி அப்போதாவது சரிசெய்யப்படுமா?
No comments:
Post a Comment