Thursday, December 11, 2014

மதமாற்றத் தடை சட்டம் என்னும் ஆபத்து! - ரவிக்குமார்மதமாற்றத் தடை சட்டம் வேண்டும் என பாஜக தலைவர் அமித் ஷா கூறியிருப்பதை மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் கண்டிக்கவேண்டும்

நாடு முழுவதும் மதமாற்றத்தைத் தடைசெய்து சட்டம் கொண்டுவரவேண்டும் என அமித் ஷா கூறியிருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்துத்துவ அமைப்பினர் முஸ்லிம்களைப் பலவந்தமாக இந்து மதத்துக்கு மாற்றுகிறார்கள் என்ற செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. இதை சாக்காக வைத்து மதமாற்றத்தைத் தடைசெய்யும் சட்டத்தைக் கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது என்பதைத்தான் அமித் ஷாவின் பேச்சு காட்டுகிறது. 

மதமாற்றம் இந்து மதத்துக்கு லாபம் கொடுப்பதில்லை. ஏனென்றால் வேறு மதங்களிலிருந்து எவரும் இந்து மதத்துக்கு வர விரும்புவதில்லை. அப்படி இந்து மதத்தை ஒருவர் தழுவினால் அவர் இந்து மதத்திலிருக்கும் ஏதேனும் ஒரு சாதிக்குள் வைக்கப்படவேண்டும். சாதி என்பது ஒரு மூடுண்ட அமைப்பு. ஒருவர் சாதி மாற்றம் செய்துகொள்ள வழி கிடையாது. அதனால்தான் இந்து மதத்துக்கு எவரும் வருவதில்லை. 

இந்து மதத்திலிருந்து வெளியேறி வேறு மதங்களைத் தழுவியவர்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்:

1) இந்து மதத்தின் சாதிய பிரிவினைகளை விரும்பாமல் வேறு மதங்களுக்குச் செல்கிறவர்கள். தலித்துகளும் ஆதிவாசிகளும் இதன்கீழ் வருவார்கள். தமிழ்நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது மதம் மாறிய நாடார்களையும், மீனவர்களையும் ஓரளவுக்கு வன்னியர்களையும் இதன்கீழ் வகைப்படுத்தலாம். 

2) பிற மதங்களின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றைத் தழுவுவதாகச் சொன்னாலும் அந்த மதங்களில் அதிகாரத்தைப் பெறவும் வசதி வாய்ப்புகளை அனுபவிக்கவும் அந்த மதங்களைத் தழுவியவர்கள். தமிழ்நாட்டில் கிறித்தவ மதத்துக்கு மாறிய ரெட்டியார், முதலியார், உடையார், உள்ளிட்ட சாதியினரை இதன்கீழ் அடக்கலாம். 

முதல் பிரிவினர் சமூகக் காரணங்களுக்கு மதம் மாறியவர்கள். இரண்டாவது பிரிவினரோ பொருளாதாரக் காரணங்களுக்காக மதம் மாறியவர்கள். பொருளாதார நோக்கில் மதம் மாறியவர்கள் தமது சமூக ஆதிக்க நிலையை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அதனால்தான் அந்த மதங்களுக்குள்ளும் சாதிய பாகுபாடு நிலைபெற்றுவிட்டது. 

சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவில் இடைநிலை சாதியினரும் முன்னேறிய சாதியினரும் ஒப்பீட்டளவில் கூடுதலான அரசியல் பொருளாதார வாய்ப்புகளைப் பெற்று வருவதால் மதம் மாறுவது அவர்களுக்குத் தேவையற்றதாகிவிட்டது. ஆனால் இப்போதும்கூட சமூக பாகுபாடுகளால் வதைக்கப்படும் தலித்துகளுக்கும் ஆதிவாசிகளுக்கும் மதம் மாறுவது ஒரு தப்பித்தலாக இருக்கிறது.

நிலவியல் ரீதியாக தலித்துகள் சேரி என்னும் சிறைகளிலும் ஆதிவாசிகள் வனப் பிரதேசங்களிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை சமூகவெளியில் சுதந்திரமாக நடமாடமுடியாதபடி அடைத்துவைக்கும் முயற்சியே மதமாற்றத்துக்கு விதிக்கும் தடை. 

இந்துக்களுக்கு சமூகரீதியில் தம்மை உயர்வாகக் கருதிக்கொள்வதற்கு மட்டுமின்றி மலிவான உழைப்பு சக்தியை வழங்கிடப் பொருளாதாரரீதியாகவும் தலித்துகள் தேவைப்படுகிறார்கள். அதனால்தான் இந்து மதம் என்னும் கொட்டடியிலிருந்து அவர்கள் வெளியேறிவிட முடியாதபடி வாசல் கதவை இறுக மூடிவைக்கிறார்கள். 

இந்துத்துவ முயற்சிகளை எதிர்க்கும் அதே நேரத்தில் கிறித்தவம் உள்ளிட்ட மதங்களில் நிலவும் சாதிய பாகுபாடுகளை நாம் கண்டிக்காமல் இருக்க முடியாது. உண்மையாகவே சமத்துவத்தைத் தரும் மதமாக இருந்திருந்தால் இந்நேரம் ஒட்டுமொத்த தலித்துகளும் கிறித்தவத்தைத் தழுவியிருப்பார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பே கிறித்தவ மதம் சாதிக்காரர்களால் கறைபடுத்தப்பட்ட காரணத்தால்தான் பண்டிதர் அயோத்திதாசரும் ரெட்டைமலை சீனிவாசனும் மதமாற்றத்தை தீர்வாகப் பார்க்கமுடியாத நிலை ஏற்பட்டது. இந்துத்துவவாதிகளின் எதிர்ப்பைவிட கிறித்தவத்தில் இருக்கும் சாதிய பாகுபாடே மதமாற்றத்துக்குப் பெருந்தடையாக இருக்கிறது. இதை உண்மையாகவே சமத்துவத்தை விரும்பும் கிறித்தவப் பெருமக்கள் புரிந்துகொண்டு தமது மதத்தை சாதிக் கறை அகற்றித் தூய்மைப்படுத்த முன்வரவேண்டும். 

எந்தவொரு குடிமகனும் தான் விரும்பிய மதத்தைப் பின்பற்றுவது அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமையாகும். அதை மறுக்கும் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்கக்கூடாது. 

* மதமாற்றத் தடை சட்டம் கொண்டுவரும் இந்துத்துவ முயற்சியை முறியடிப்போம்! 

* ஆசைவார்த்தைகளைக் கூறியோ வலுக்கட்டாயமாகவோ மதமாற்றம், மறுமதமாற்றம் செய்வதை எதிர்ப்போம்! 

* சிறுபான்மை மதங்களிலும் நிலைபெற்றுவிட்ட சாதியத்தை எதிர்த்துப் போராடுவோம்! 

No comments:

Post a Comment