Tuesday, December 2, 2014

இலங்கைத் தேர்தலும் தமிழர் வாக்கும்: தமிழக இந்திய அரசுகளின் முன் உள்ள கடமை! -ரவிக்குமார்


இலங்கையில் ஜனவரி 2015 இல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சவும் அவருக்கு எதிராக மைத்ரிபாலாவும் களம் இறங்கியுள்ளனர். ராஜபக்சவுக்கு எதிராகப் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மைத்ரிபாலா தன்னை ஒரு ஜனநாயகவாதியைப்போல காட்டிக்கொள்கிறார். தற்போது உள்ள அதிபர் முறையை முடிவுக்குக்கொண்டு வருவேன் என வாக்குறுதி வழங்குகிறார். ஆனால் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் கூட்டாட்சி முறையைக் கொண்டுவர முடியாது என்று கறாராகக் கூறியுள்ளார். 

ராஜபக்சவும் மைத்ரிபாலாவும் சிங்களப் பெரும்பான்மையின் வாக்குகளைக் குறிவைத்தே பிரச்சாரம் செய்கின்றனர். இனவெறியில் ராஜபக்சவுக்கு சளைத்தவரல்ல மைத்ரிபாலா. அதனால்தான் அவரை பௌத்த பிக்குகளின் கட்சியும் ஆதரிக்கிறது. 

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலையை இன்னும் அறிவிக்கவில்லை. இதனிடையில் ராஜபக்சவுக்கு ஆதரவு தருமாறு வடக்கு மாகாண உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் மிரட்டப்படுவதாக தமிழ்நெட் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. 

அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டுபேருமே சிங்கள வாக்குகள் கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார்கள், தமிழர்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கப்படக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். 

வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் தமிழர்களின் வாக்குகள் முக்கிய பங்காற்றும் என்றபோதிலும் இரண்டு வேட்பாளர்களும் சிங்கள கடும்போக்குவாதிகளாக இருப்பதால் தமிழர்களின் வாக்குகளுக்குப் பேர சக்தி இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இதேபோன்றதொரு இக்கட்டான சூழலில்தான் கடந்த முறை தேர்தலைத் தமிழர்கள் புறக்கணித்தனர். ராஜபக்ச வெற்றிபெற அந்தப் புறக்கணிப்பே காரணமாகிவிட்டது என்ற விமர்சனங்கள் பின்னர் எழுந்ததை நாம் அறிவோம். இப்போதும் தேர்தல் புறக்கணிப்பு செய்தால் சிங்கள இனவெறி வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும். கடந்த முறை தேர்தல் நடந்தபோது தமிழர்களுக்கு நம்பிக்கையளிக்க புலிகள் இருந்தனர். இன்று அந்தப் பாதுகாப்பும் இல்லை. 

இந்தச் சூழலில் தமிழர்களின் வாக்குக்கு பேர சக்தியை அளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும். மைய அரசை வலியுறுத்தி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை உத்தரவாதம் செய்யவேண்டும். இன்னொரு நாட்டின் தேர்தலில் இந்தியா தலையிட முடியாது. ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழர்களுக்காகப் பரிந்துபேச இந்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. தமிழக மக்களும் கட்சிகளும் தமிழக அரசும் அதற்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும். 

No comments:

Post a Comment