சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் என தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இட ஒதுக்கீட்டைச் சரியாக நடைமுறைப்படுத்த அது அவசியம் என்றும் ’சமூக நீதிக்கு ‘ அது வழிவகுக்கும் என்றும் கூறிவருகின்றன.
இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு கடைசியாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1931 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் அதை இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழ்நாட்டிலும் இருந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் வரவேற்றார்களா என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது இந்துவென்றுஎங்களைப் பதியாதே என 1929இல் தாழ்த்தப்பட்ட மக்கள்போராடிவந்தார்கள்.அதற்காக மாநாடுகளைக் கூட்டித் தீர்மானங்களை இயற்றினார்கள். 1929ஆம் ஆண்டு சூலைமாதத்தில் சென்னையில் ஆதிதிராவிட மக்களால் நடத்தப்பட்டமாநாடு ஒன்றுக்கு பெரியார் அழைக்கப்பட்டார். அந்தமாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்தத் தீர்மானமொன்றும்இடம் பெற்றிருந்தது.
' (இந்தியாவில்)ஆறரைக்கோடி மக்களடங்கிய எங்களுடையபெரும் சமூகமானது இந்துமதத்தில் சேர்க்கப்பட்டிருப்பதன்நிமித்தம் தீண்டப்படாதவர்களாயிருப்பதாலும் இனி அடுத்துவருகின்ற 'சென்சஸ்' கணக்கில் எங்களை இந்துக்கள் என்று பதியாமலிருக்கும் படியும், சர்க்காரிலும் எங்களை இந்துக்கள்என்கின்ற பதிவிலிருந்து நீக்கிவிடும் படிக்கும் செய்யும்படிசர்க்காரையும் சபை அங்கத்தினர்களையும் இம்மாநாடுவேண்டிக்கொள்கிறது." என்பதே அந்தத் தீர்மானமாகும். அந்தத் தீர்மானத்தின் மீது பேசும்படி பெரியார் அவர்களைமாநாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டனர். அவர் பேசும்போது:
"இந்தத் தீர்மானத்தை நான் ஆதரிக்கிறேன். நான் அநேகதடவைகளில் இதைப்பற்றி எழுதியும், பேசியும்இருக்கின்றேன். சமீபத்தில் கூட, "எந்த சமயத்தில், எந்தக் கூட்டத்தில் மக்களுக்குச் சமத்துவம்அளிக்கப்படுகிறதோ அந்தக் கூட்டத்திலும் சமத்துவம்அளிக்கக் கூடாத மக்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கமுயற்சி செய்யப் போகின்றேன்", என்று எழுதி இருந்தேன். சமத்துவம் வேண்டுமென்கிற மனிதனுக்குச் சமத்துவம் உள்ள மதம் எல்லாம் சம்மதமாகும். சமத்துவமில்லாதமதம் எல்லாம் ஆணவமாகும். ஆதலால் இந்தக்கொடுமையான இந்து மதத்திலிருந்து பிரிந்துகொள்ளுகிறவர்களை நான் மிகுதியும் பாராட்டுகிறேன்" என்று குறிப்பிட்டார். (பெரியாரின் எழுத்தும் பேச்சும் , பெரியார் திராவிடர் கழகம் , 2008 தொகுதி 9 பக்கம் 53 (குடி அரசு 21. 07, 1929))
சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்கள்மேற்கொண்ட போராட்டங்களை வழிமொழிந்து பெரியார் அறிக்கையொன்றை 1930ஆம் ஆண்டு வெளியிட்டார். ’ ஜாதி மதப் பெயர் கொடுக்காதீர்கள்! முக்கியமான வேண்டுகோள்’என்ற தலைப்பில் குடிஅரசு இதழில் (9.11.1930) வெளியானஅந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது இது:
"இவ்வருஷக் கோடியில் சர்க்காரால் ஜனங்களுடையஎண்ணிக்கையை எடுக்கும் "சென்சஸ்" வேலைநடைபெறும். அதில் கணக்கெடுப்பவர்கள் தங்களிடம்வந்து விசாரிக்கையில் நீங்கள் ஜாதி மதத்தைப் பற்றி கேட்கப்படுவீர்கள். அப்போது முறையே இந்தியன் என்றும்பகுத்தறிவுக்காரன் என்றும் மாத்திரம் தான்சொல்லவேண்டுமே ஒழிய எவ்வித மதத்தின் பேராவதுஜாதியின் பேராவது சொல்லக்கூடாது என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
ஏனெனில், ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க இந்தியாவில் எல்லாப் பிரமுகர்களும் ஒரேமுகமாய் நின்று வேலைசெய்யும் போது நாம் மறுபடியும் அதைச் சொல்லிக்கொண்டிருப்பது மூடத்தனமும் கவலையும்சுயமரியாதையும் அற்ற தன்மையுமாகும்.
அதுபோலவே இந்தியர்களில் யாராவது தன்னை இந்து என்று மதத்தின் பெயரைச் சொல்லுவதும் சுத்த முட்டாள்தனமாகும்.” ( பெரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி 11 பக்கம் 242 ( குடி அரசு 09.11.1930))
என அதில் வலியுறுத்தியிருந்தார்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவெங்கிலும் அதே கருத்துபலராலும் வலியுறுத்தப்பட்டது. அதையும் பெரியாரின் வார்த்தைகளிலேயே காண்போம்:
அடுத்து வருகிற சென்சஸ் கணக்கில் (ஜனக் கணிதத்தில்) இந்துக்கள் என்பவர்கள் ஜாதிக் கணக்கைக் கொடுக்கக்கூடாது என்பதாக லாகூர் ஜட்பட் தோடக்மண்டலத்தாரும் மேலும் அநேகர்களும் தீவிர முயற்சியெடுத்து வருகிறார்களென்பது யாவர்க்குந் தெரியும். மற்றும் இந்தியாவிலுள்ள சீர்திருத்தவாதிகளென்பவர்களிலும் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்கள் முதல் தாழ்ந்த ஜாதியார் என்று பிற மக்களால் சொல்லப்படும் ஆதிதிராவிடர்கள் என்கின்றவர்கள் முதலிய எல்லோராலும் அநேகமாக மேடைகளில் பத்திரிகைகளில் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன.
இதைப் பற்றி நமது ‘குடி அரசிலும்’ அநேக அறிஞர்களால் கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதோடு சுயமரியாதை மகாநாடு, பார்ப்பனரல்லாதார் மகாநாடு, சீர்திருத்த மகாநாடு முதலிய மகாநாடுகளில் இதைப்பற்றி பல தீர்மானங்கள் செய்யப்பட்டு அதை அநுசரித்தே அநேக கனவான்கள் ஜாதிக் குறிப்பைக் காட்டும் பட்டம் முதலியவைகளையும் விட்டிருப்பது யாவருக்கும் தெரியும். ஆகவே ஜாதிப் பிரிவும் வித்தியாசங்களும் இருக்கக்கூடாதென்பது இந்தியாவின் ஒருமுகப்பட்ட அபிப்ராயமென்பதும் கோரிக்கையென்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். “ ( பெரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி 11, பக்கம் 257 ( குடி அரசு 16.11.1930) )
சாதிவாரிக் கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயேஎதிர்ப்புக்கு ஆளான இந்த வரலாற்றை மறந்துவிட்டு இப்போது அதை வலியுறுத்துவது சாதியை வைத்து அரசியல் செய்பவர்களுக்குத்தான் பயன்படுமே தவிர ஜனநாயகத்துக்குப்பயன்படாது. அதிலும் குறிப்பாக அது எண்ணிக்கை பலம் கொண்ட சாதியினரின் சர்வாதிகாரத்துக்கே வழிவகுக்கும்.
எல்லோரும் சொல்கிறார்கள் எனவே நாமும் சொல்லிவிட்டுப் போவோம் என இதைப் பார்க்கக்கூடாது. சாதி தொடர்பாக முன்வைக்கப்படும் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அது சாதி வெறியைக் குறைக்க உதவுமா? சாதி அமைப்பைப் பலவீனப்படுத்துமா? சாதி ஒழிப்புக்கு உதவியாக இருக்குமா? என்பதை ஆராய்ந்தே அதை ஆதரிக்கவேண்டும். அதுதான் அம்பேத்கரின் அணுகுமுறை, பெரியாரின் அணுகுமுறை. அவர்களைப் பின்பற்றுவோரின் அஅணுகுமுறையும் அதுவாகத்தான் இருக்கும்.
No comments:
Post a Comment