Thursday, February 26, 2015

14 ஆவது நிதிக்குழு பரிந்துரைகள்: தமிழ்நாட்டின் பின்தங்கிய ஆறு மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் ! - ரவிக்குமார்

14 ஆவது நிதிக்குழு அளித்த பரிந்துரைகளை திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அந்தப் பரிந்துரைகள் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை அதிகரித்திருப்பதாக அவர்களால் தம்பட்டம் அடிக்கப்படுகிறது. அந்தப் பரிந்துரைகளில் உள்ள ஆபத்தான அம்சங்களைப் பற்றி இன்னும் விரிவான அளவில் செய்திகள் வெளியாகவில்லை. இதை எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டிய காங்கிரஸ் கட்சியோ தலைவர் யார் என்பதைப் பற்றிய சர்ச்சையில் மூழ்கிக் கிடக்கிறது. தற்போது நிதிக் குழு பரிந்துரைத்திருக்கும் ஆபத்தான பரிந்துரைகளில் ஒன்றுதான் ‘பின்தங்கிய பகுதிகள் வளர்ச்சி நிதி’ என்ற திட்டத்தை ரத்து செய்வதாகும்.

2006 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட திட்டம் ’ பின்தங்கிய பகுதிகள் வளர்ச்சி நிதி (Backward Region Grant Fund - BRGF ) அதன் அடிப்படையில் நாட்டின் 27 மாநிலங்களில் 250 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்கள் என அடையாளம் காணப்பட்டு அந்தப் பகுதிகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கல்வி,சுகாதாரம்,சாலை வசதி,அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்புகளை உருவாக இந்த நிதி பயன்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு 4670கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்த உலக வங்கியின் நிபுணர் குழு இந்தத் திட்டத்தை மேலும் வலுவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்த பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தது. இதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவேண்டும் என்பது அந்தப் பரிந்துரைகளில் முக்கியமானதாகும்.

14 ஆவது நிதிக்குழு இந்தத் திட்டத்தை முற்றாக ரத்துசெய்யுமாறு பரிந்துரை செய்திருக்கிறது. இந்த நிதிக்குழுவில் ஒரு உறுப்பினராக இருந்த திரு அபிஜித் சென் இந்தப் பரிந்துரையை ஏற்காமல் தனது மாற்றுக் கருத்துகளை தனி அறிக்கையாக சமர்ப்பித்திருக்கிறார். ” இந்தத் திட்டத்தை ரத்துசெய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிதிக் குழு ஆய்வு எதையும் செய்யவில்லை. இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைந்துவரும் மாநிலங்களில் பீகார்தான் முதன்மையானது. பீகார் மறுசீரமைப்பு சட்டத்திலேயே அதற்கான வாக்குறுதி மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. பீகாரின் 30% மாவட்டங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைந்து வருகின்றன. அந்த மாநிலம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்” என அபிஜித் சென் தனது மாற்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அவரது மறுப்புகளை நிராகரித்துவிட்டு நிதிக்குழு தனது பரிந்துரைகளை இறுதிசெய்து அளித்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டிவிடும் நோக்கொடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தத் திட்டத்துக்கு மூடுவிழா நடத்த முடிவுசெய்திருப்பதில் வியப்பெதுவும் இல்லை. 

பீகார் அளவுக்கு இல்லையென்றாலும் தமிழ்நாட்டின் 20% மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்துவருகின்றன.கடலூர், திண்டுக்கல்,நாக்கப்பட்டினம்,சிவகங்கை, திருவண்ணாமலை,விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்கள் பின் தங்கிய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டு அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. 

மக்கள் தொகையை வைத்துப் பார்த்தால் சுமார் ஒன்றரை கோடி மக்கள் இந்த மாவட்டங்களில் வாழ்கிறார்கள். இந்த மாவட்டங்கள் எஸ்சி/எஸ்.டி மக்கள் அடர்த்தியாக வாழும் மாவட்டங்கள் என்பதும் கவனத்துக்குரியது. இந்தத் திட்டத்தை ரத்து செய்திருப்பதன்மூலம் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சுமார் 25% மக்களுக்கு நலத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. .

வளர்ச்சி என்ற பெயரில் பாஜக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளும் எதிர்த்துக் குரல் கொடுத்து தடுத்து நிறுத்தவேண்டும்.

No comments:

Post a Comment