இலங்கை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள
இனப்படுகொலை தீர்மானத்தை இந்திய அரசு வழிமொழியவேண்டும்
ஈழத் தமிழர்மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்தி இலங்கை வடக்கு மாகாண சபையில் நேற்று (10.02.2015) ஒருமனதாகத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பதினொரு பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்மானத்தில் இனப்படுகொலைக்கான ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஐநா பாதுகாப்புக் கவுன்சில் இனப்படுகொலை தொடர்பான விசாரணையை மேற்கொள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிடவேண்டும் எனவும் அந்தத் தீர்மானம் வலியுறுத்தியிருக்கிறது.
வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் இனப்படுகொலை எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விவரித்துள்ள அந்தத் தீர்மானம் 1990ஆம் ஆண்டிலிருந்து மலையகத் தமிழ்ப் பெண்கள் கட்டாயமாக கருத்தடை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதையும், 2009க்குப் பிறகு வடக்கு மாகாணத்தில் தமிழ்ப் பெண்கள் கட்டாய கருத்தடைக்கும், கருச்சிதைவுக்கும் உட்படுத்தப்பட்டதையும் பட்டியலிட்டிருக்கிறது.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவத் தாக்குதலின்போது வன்னிப் பகுதியில் மட்டும் 1,46,679 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதையும் அந்தத் தீர்மானம் ஆதாரத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறது.
இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட 6,500 ஏக்கர் நிலத்தைத் தமிழர்களிடம் திருப்பி ஒப்படைக்கவோ, இராணுவத்தைத் திரும்பப்பெறவோ மைத்ரிபாலா அரசாங்கம் உருப்படியான நடவடிக்கைகளைத் தொடங்காததை முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
2009இல் இனப்படுகொலை நடந்தபோது இராஜபக்ச அரசில் இராணுவ அமைச்சராக இருந்தவர்தான் மைத்ரிபாலா. அவர் இப்போது அதிபராகியிருக்கிறார். இனப்படுகொலையை நிறைவேற்றிய இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா இப்போது அதிபருக்கு இராணுவ ஆலோசகராக இருக்கிறார். இந்த நிலையில் இலங்கை அரசாங்கமே விசாரணை நடத்தினால் தமிழ் மக்களுக்கு நீதி எப்படி கிடைக்கும் என வடக்கு மாகாணசபைத் தீர்மானம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும். இலங்கையில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையை சமர்ப்பிக்காமல் ஒத்திப்போடுவதற்கு அமெரிக்காவின் உதவியை இலங்கை அரசு நாடியிருக்கிறது. அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காகவே இலங்கை அதிபர் மைத்ரிபாலா இம்மாதம் இந்தியாவுக்கு வருகிறார்.
இலங்கை அரசின் தமிழர் விரோத போக்குக்கு இந்திய அரசு துணைபோகக்கூடாது என வலியுறுத்துகிறோம். வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை இந்திய அரசு வழிமொழிந்து ஆதரிக்கவேண்டும். அதற்காக இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment