ஐநா மனித உரிமைக் கவுன்சில் குறித்து பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில்ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வை ஈழப் பிரச்சனையின் நல்ல பக்கவிளைவுகளில் ஒன்றாகக் கூறலாம். ( இன்னொரு பக்க விளைவு மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம்) அதனால், ஒவ்வொரு முறையும் ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடக்கும்போது அதைப்பற்றிய பேச்சு ஊடகங்களிலும் இடம்பெற்று மறைவதைப் பார்க்கிறோம்.
ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைப் பிரச்சனை தொடர்பான விவாதங்களில் மட்டுமே நமது ஆர்வம் இருக்கிறது. அங்கே நம்முடன் தொடர்புடைய மேலும் பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றைப்பற்றி நாம் அலட்டிக்கொள்வதில்லை.
பாஜக ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகு மீண்டும் மதச்சார்பின்மை குறித்து நாம் ஆவேசமாகப் பேசிவருகிறோம். சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றியும் விவாதிக்கிறோம். அதற்கு மிகவும் உதவக்கூடிய விவாதங்கள் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் நடந்து வருகின்றன. மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் அறிக்கை ஒன்றை (A/HRC/28/77 ) அங்கே விவாதிக்கவுள்ளனர். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான நடைமுறைகளை ஆராய்வதற்காக 2014 நவம்பர் மாதத்தில் கூடிய ‘ சிறுபான்மையினருக்கான அமைப்பின் ஏழாவது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் பரிந்துரைகளும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அந்த அறிக்கை முன்வைத்திருக்கும் பரிந்துரைகளில் 37 ஆவதாக இடம்பெற்றிருப்பதை மட்டும் கீழே தருகிறேன்:
" Public and private media bodies and sources should ensure minority representation and be accessible in different minority languages. Media bodies and sources must guarantee that they do not contribute to or allow hate speech and incitement to hatred or crimes of violence. Independent media monitoring bodies, including representatives of minorities, should be established to monitor media, social media and online output and, where necessary, raise concerns relating to incitement to violence with appropriate national authorities. "
( ”அரசு மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் சிறுபான்மையினருக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதோடு சிறுபான்மையினர் தமது மொழிகளில் அவற்றை எளிதில் அணுகுவதற்கும் வழிவகுக்கவேண்டும். ஊடக நிறுவனங்களோ அவற்றுக்கு செய்தி வழங்குபவர்களோ வெறுப்புப் பிரச்சாரத்தை, வெறுப்பைத்தூண்டுவதை, வன்முறையைமேற்கொள்வதோ அல்லது அதற்கு இடமளிப்பதோகூடாது. சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் கொண்ட சுதந்திரமான ஊடக மேற்பார்வை அமைப்புகள் உருவாக்கப்பட்டு அவற்றின்மூலம் இணையம், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களைக் கண்காணிக்கவேண்டும். வன்முறை தூண்டப்படுவதாக தெரிந்தால் அவை உரிய அதிகாரம் கொண்டவர்களின் கவனத்துக்கு அதைக் கொண்டுசெல்லவேண்டும்.” )
ஒப்பீட்டளவில் மதவாதத்துக்கு எதிரான ஊடக விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இருக்கிறது. சில ஊடக நிறுவனங்களும் இதில் பொறுப்போடு செயல்படுகின்றன. சிறுபான்மையினரைக் கொள்கை அளவில் ஆதரிக்கும் திராவிட இயக்க சார்பு கொண்டவர்களால்தான் பெரும்பாலான காட்சி ஊடகங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகின்றன. அவர்கள் ஐநா மனித உரிமைக் கவுன்சில் ஆவணத்தில் கண்டுள்ள மேற்கண்ட பரிந்துரையை நிறைவேற்ற முன்வருவார்களா? ஊடக நண்பர்கள் இதுகுறித்து ஏதேனும் செய்ய முடியுமா?
ரவிக்குமார்
ஆசிரியர், மணற்கேணி
( மணற்கேணி 27 தலையங்கம்)
No comments:
Post a Comment