Monday, May 20, 2013

மே 21 : கலாச்சார பன்மைத்துவத்துக்கான சர்வதேச நாள் .

 மே 21 :  கலாச்சார பன்மைத்துவத்துக்கான சர்வதேச நாள்
 
அதைக் கொண்டாடும் விதமாக இஸ்ரேல்,சீனா,அமெரிக்கா,ஜமைக்கா,மொஸாம்பிக்  ஆகிய ஐந்து நாடுகளை , கலாச்சாரங்களைச் சேர்ந்த ஐந்து கவிர்களின் கவிதைகளை இங்கே மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். பிற கலாச்சாரங்களைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்திக்கொள்ள இலக்கியமே சிறந்த துணை. இந்த நாளில் நீங்களும் இதுபோல ஏதேனும் செய்யுங்கள். பிற கலாச்சாரங்கள் குறித்த 'ஸ்டீரியோடைப்புகளிலிருந்து' விடுபடுவோம். புரிதலை வளர்த்துக்கொள்வோம்.
 
ரவிக்குமார்


1. யெஹுதா அமிக்கய் 

வேலைக்குச் செல்லும்போது
வெள்ளைக் காகிதத்தில்
சுருட்டி எடுத்துச் செல்லும்
சாண்ட்விச்சைப்போல இருக்கிறது
என் அப்பாவின் நினைவு

தனது தொப்பிக்குள்ளிருந்து சீட்டுக்களையும்
முயல்களையும் எடுக்கும் ஒரு
மந்திரவாதியைப்போல
தனது சிறிய உடலிலிருந்து அன்பை
உருவி எடுப்பார் அவர்

அவரது கரங்கள் என்னும் நதிகள்
நற்செயல்களால்
நிரம்பிப் பாய்ந்துகொண்டிருக்கின்றன


யெஹுதா அமிக்கய் ( 1924-- 2000) இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஒரு யூதர் .
ஹீப்ரு மொழியில் அவர் படைத்த அற்புதமான கவிதைகள் அவருக்கு உலக அளவில் கவனத்தை ஏற்படுத்தின . பலமுறை அவரது பெயர் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது . அவரது கவிதைகள் தினசரி வாழ்வின் அபத்தத்தைப் பேசும் அதே நேரத்தில் ஆழமான தத்துவ நோக்கையும் வெளிப்படுத்துகின்றன.

 2. ஹா ஜின்

துக்கத்தைப் பற்றிப் பேசுவது எங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தது
எங்களது பத்திரிகைகள் கடிதங்கள் நிரம்பியிருந்தன
இழப்புகளால், துயரங்களால், புகார்களால் .
துக்கமே இல்லாவிட்டாலும்கூட
நாங்கள் ஒப்பாரியை நிறுத்துவதில்லை
துன்புறும் முகத்தின் வசீகரத்தை எண்ணி
ஏங்குவதையும் நிறுத்தமுடியவில்லை

துக்கத்தை வெளிப்படுத்தும்போது
எவ்வித முன்னறிவிப்புமின்றி ஏராளமான விஷயங்கள்
நம்மீது கவியும் :
வீணான உழைப்பு , இழந்த நேசம் , பறிபோன வீடுகள் ,
முறிந்த மணவாழ்க்கை , அந்நியமாகிப்போன நண்பர்கள்
உடனடித் தேவைகளால் நைந்துபோன லட்சியங்கள் .
கேவலாகப் பீரிடுவதற்கென்று
தொண்டைகளில் வார்த்தைகள் அணிவகுத்து நிற்கும் .
வாழ்வில் வற்றாமல் பாயும் ஒரே ஜீவநதியாய் இருந்தது
துக்கம்

நாட்டை இழந்தபின் மொழியை இழந்தபின்
நாங்கள் துக்கத்தைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டோம்
புன்னகைகள் எங்கள் முகங்களைப் பிரகாசப்படுத்தின
நாங்கள் அளவில்லாமல் சிரித்தோம் எங்கள் சீர்கேட்டைப்  பார்த்து
எல்லாம் அழகாகத் தெரிகின்றன
ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் பெய்யும்
ஆலங்கட்டி மழையும்கூட

      - ஹா ஜின் (1956-  )சீனாவில் இருக்கும் லியாவோனிங் மாகாணத்தில் பிறந்தவர்.
 கல்வி பயிலுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்த
கலாச்சாரப் புரட்சிக் காலகட்டத்தில் பிறந்த இவர் ராணுவத்தில் சேர்ந்து
அங்குதான் கல்வி பயின்றார். டாக்டர் பட்ட ஆய்வுக்காக அமெரிக்காவுக்குச்  சென்றவர்
தியானேன்மென்  சதுக்கப் படுகொலைகளுக்குப் பிறகு
அமெரிக்காவிலேயே தங்கிவிட முடிவுசெய்து தற்போது அங்கு வசிக்கிறார்.
ஆங்கிலத்தில் எழுதும் சீன எழுத்தாளர்.
3. மாயா ஏஞ்சலூ


என்னைப்பற்றி நினைக்கும்போது
செத்துப்போகும் அளவுக்கு நான் சிரிக்கிறேன்
எனது வாழ்க்கையே ஒரு ‘ஜோக்‘ தான்
ஒரு நடனத்தை நடந்துகாண்பிப்பது போல
ஒரு பாடலைப் பேசிக் காண்பிப்பதுபோல
நான் மூர்ச்சையாகும்வரை சிரிக்கிறேன்
என்னைப்பற்றி எண்ணிப்பார்க்கும்போது

இந்த உலகத்தில் வாழ்ந்த அறுபது ஆண்டுகள்
நான் வேலைபார்த்த வீட்டில்
குழந்தைகூட என்னை ‘வாடி போடி‘ என்றுதான் பேசும்
‘ சொல்லுங்கள் அம்மா’ என்றுதான் நான் கேட்கவேண்டும்
பணிவில் பெருமை
உணர்ச்சிகள் தெரியக்கூடாது
நான் வயிறுவலிக்கும்வரை சிரிக்கிறேன்
என்னைப்பற்றி எண்ணிப்பார்க்கும்போது

என் மக்கள் சொல்வதைக்கேட்டு நான்
செத்துப்போகும் அளவுக்கு சிரித்திருக்கிறேன்
அவர்களின் கதைகள் பொய்களைப்போல் இருக்கும்
அவர்கள் பழங்களை விளைவித்தார்களாம் ஆனால்
தோலைத்தான் சாப்பிட்டார்களாம்
நான் கண்ணீர்வரும்வரை சிரிப்பேன்
என் மக்களைப்பற்றி நினைக்கும்போது

மாயா ஏஞ்சலூ : 1928 ஆம் ஆண்டு மிசௌரியில் பிறந்த மாயா ஏஞ்சலூ நிறவெறியின் கொடுமைகளை அனுபவித்தவர்.
தனது சொந்த முயற்சியில் இசை, நடனம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தவர்.
ஆப்ரிக்க அமெரிக்க எழுத்தாளர்களுள் முக்கியமானவராகக் கருதப்படும் அவருடைய
எழுத்துக்கள் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களாக வெளிவந்துள்ளன.
நடிகை, திரைப்பட இயக்குனர், நாவலாசிரியர், மனித உரிமைப் போராளி எனப்
பலபரிமாணங்களைக் கொண்டவர்.
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட
மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டவர்.
ழான் ழெனேவின் நாடகத்திலும், அலெக்ஸ் ஹெய்லீயின் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்திருக்கிறார்.
முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற மாயா ஏஞ்சலூ
கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது முதலில் ஹிலாரி கிளின்டனை ஆதரித்தார்.
பின்னர் ஒபாமாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்.
                                                                                          

                   


 4. அஃபூவா கூப்பர்
பகலிலிருந்து இரவைப் பிரிக்கும் எல்லைக்கோட்டில்
கீழ்வானில்
அதிகாலை எட்டி நடக்கத் தொடங்கும் நேரத்தில்
எரிநட்சத்திரங்கள்
வானத்தின் இப்புறமிருந்து அந்தப் புறமாகப்
பாய்ந்து வீழ்கின்றன
தாங்கள் பிடித்த மீன்களோடு
கரைசேரும் மீனவர்களின் கூச்சலைத்
தொடர்கின்றன
பேருந்துகளின்  இரைச்சல்
சேவல்களின் கூவல்

ஆயிரம் இதழ்கள் கொண்ட
என் தாமரைக் கிண்ணத்திலிருந்து
நான் கண்ட கனவின்
பொன் நிறத்தை ரோஜா நிறத்தை
நீ உறிஞ்சிக் குடிக்கும்போது
எனது சருமத்தை வற்புறுத்தும் உன் உதடுகளால்
நான் உறக்கத்திலிருந்து நழுவி
விழித்தெழுகிறேன்

இன்னொரு காலம் இன்னொரு இடம்
நீ ராஜாவாக அல்லது அவனது
தளபதியாக இருக்கிறாய்
காலையின் ஊதா கவிந்திருக்கிறது
நம் மேல்
நாம் நிகழ்த்துகிறோம் இந்தத்
தொன்மையான சடங்கை

ஆயிரம் இதழ்கள் கொண்ட என்
தாமரைக் கிண்ணத்தில் நீ மூழ்கும்போது
எனது சருமத்தை வற்புறுத்தும் உன் உதடுகளால்
துயிலிலிருந்து நழுவி எழுகிறேன் நான்

பொன் நிறம் ரோஜா நிறம்
அடர் நீலம் ஊதா நிறம்
நீலப்பச்சை ரத்தச் சிவப்பு
மூச்சும் காற்றுமாக
நெருப்பும் மின்னலுமாக
இடியும் புயலுமாக
தாளமும் ஒப்பாரியுமாக
பாயும் நட்சத்திரங்கள்
குமுறும் அலைகள்
வாழ்வாக மரணமாக
பல லட்சம் கருஞ்சிவப்புச் சந்திரன்கள்
வெடிக்கின்றன
ஆ..ஹ்

அரசனின் படையில் தளபதியாக இல்லாவிட்டால்
அரசியின் நடனக்குழுவில் தலைவனாகவாவது இருஅஃபூவா கூப்பர்: ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த படைப்பாளியான இவர் எழுத்தாளர், கவிஞர், வரலாற்றறிஞர்.
 கனடாவில் கறுப்பின மக்கள் அடிமைப்படுத்தப்பட்ட வரலாற்றை ஆய்வுசெய்து
இவர் எழுதிய நூல் விற்பனையில் சாதனை படைத்தது மட்டுமின்றி ஃப்ரெஞ்ச்சிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
இவரது கவிதைகள் ஐந்து தொகுப்புகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன.
கறுப்பின மக்களின் இசை வடிவங்களில் தேர்ச்சிகொண்ட இவர் தனது கவிதைகளை
மேடையில் நிகழ்த்தவும் செய்கிறார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் சிமோன் ஃப்ரேசர் பல்கலைக் கழகத்தில்
பெண்ணியல் ஆய்வுகளுக்கான துறைக்குத் தலைவராக இருக்கிறார்.

5. ஜோர்ஜ் ரெபலோ


வா, சகோதரனே சொல் உன் வாழ்க்கையை
வா, எதிரி உன் உடலில் விட்டுச்சென்ற
எதிர்ப்பின் தடயங்களை எனக்குக் காட்டு
வா, என்னிடம் கூறு ‘இதோ
என் கைகள் நசுக்கப்பட்டன
ஏனென்றால் அவற்றுக்குச் சொந்தமான
மண்ணை அவை காத்து நின்றன.’
இதோ என் உடல் சித்ரவதை செய்யப்பட்டது
ஏனென்றால் அது ஆக்கிரமிப்பாளர்களுக்கு
அடிபணிய மறுத்தது.
இதோ என் வாய் காயப்படுத்தப்பட்டது
ஏனெனில் அது என் மக்களின்
சுதந்திரத்தைப் பாடத் துணிந்தது.
வா சகோதரனே சொல் உன் வாழ்க்கையை
கலகத்தின் கனவுகளை எனக்குக் கூறு
உன் தந்தையரும் அவர் முன்னோரும்
மௌனமாகக் கண்ட
கனவைக்
காதலுக்காக உண்டாக்கப்பட்ட நிழல்கள்றற இரவுகளில் கண்ட கனவை
வா என்னிடம் கூறு
அந்தக் கனவுகள்
யுத்தமாக மாறியதை
நாயகர்கள் பிறந்ததை
நிலம் மீட்கப்பட்டதை
அச்சமின்றி
தமது மகன்களைப் போராட அனுப்பிவைத்த
தாய்மார்களை
வா என்னிடம் கூறு சகோதரனே
பிறகு நான் எளிய சொற்களைக் கட்டுவேன்
குழந்தைகளும் புரிந்துகொள்ளும் சொற்கள்
காற்றைப் போல
எந்தவொரு வீட்டினுள்ளும் நுழையக்கூடிய சொற்கள்
நமது மக்களின் ஆன்மாக்களின் மீது
கொதிக்கும் தழலென விழுகின்ற சொற்கள்

நமது மண்ணில்
தோட்டாக்கள் மலரத் தொடங்குகின்றன


ஜோர்ஜ் ரெபலோ(1940&) மொஸாம்பிக் நாட்டைச் சேர்ந்தவர்.
அதன் விடுதலைக்காகப் போராடிய கொரில்லாக் குழுவில் செய்திப் பிரிவின் செயலாளராக இருந்தவர்.
மொஸாம்பிக் புரட்சி என்ற இலக்கிய இதழின் ஆசிரியர்.
மொஸாம்பிக் புரட்சியின் கவிஞர் எனப் பாராட்டப்படுபவர்.

No comments:

Post a Comment