Monday, May 27, 2013

ரவிக்குமார் கவிதை



காடாக சம்பு
கரையோரம் அடர்ந்திருக்கும்.

கை கோர்த்து ரகசியமாய்
'முதலைப் பூண்டு' நீந்திவர
நடு நடுவே நீர் சிரிக்கும்.

ஊறவைத்த மூங்கில்
துளிர்த்திருக்கும்.
ஓரத்தில்-
மீன்கொத்தி குறி பார்க்கும்.

சிலசமயம்
கெண்டைக்கால் பெரிய
விரால் மீன்கள் துள்ளி விழும்.

காலையிலும் மாலையிலும்
சிவன் கோயில் கலசங்கள்
முகம் பார்க்கும் ஊர்க்குளத்தில்

மாடு குளிப்பாட்டலாம்
பீத்துணி அலசலாம் .
சூத்தும் கழுவலாம்.

நாங்கள் மட்டும்தான்
தண்ணி மொள்ளக்கூடாது.


( 1986 ஆம் ஆண்டு நான் எழுதிய கவிதை . 1987 இல் 'பயணம் ' என்ற சிற்றிதழில் வெளியானது )

No comments:

Post a Comment