Wednesday, May 15, 2013

அடித்தட்டுமக்களின்விடிவுக்கு அரசியலை பயன்படுத்தியவர் சுவாமி சகஜானந்தா!



ஆன்மீகவாதியாக இருந்தாலும் அடித்தட்டு மக்களின் விடிவுக்கு அரசியலை பயன்படுத்தியவரும், ஆதிதிராவிட சமூகத்தினருக்கு கல்வியை புகட்டியவருமாவார் சுவாமி சகஜானந்தா. அச்சிறப்பு வாய்ந்த சுவாமி சகஜானந்தாவிற்கு சிதம்பரத்தில் அவர் வாழ்ந்த இடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர்
ஆன்மீகவாதியாக இருந்தாலும் அடித்தட்டு மக்களின் விடிவுக்கு அரசியலை பயன்படுத்தியவரும், ஆதிதிராவிட சமூகத்தினருக்கு கல்வியை புகட்டியவருமாவார் சுவாமி சகஜானந்தா. அச்சிறப்பு வாய்ந்த சுவாமி சகஜானந்தாவிற்கு சிதம்பரத்தில் அவர் வாழ்ந்த இடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆரணிக்கு அருகே உள்ள மேல் புதுப்பாக்கம் என்ற கிராமத்தில் அண்ணாமலை-அலமேலு தம்பதியினருக்கு 1890-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி பிறந்தவர் சுவாமி சகஜானந்தா. அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் முனுசாமி. தனது கிராமத்தில் இருந்த அமெரிக்கன் ஆற்காட் புராட்டஸ்டன்ட் மிஷன் பாடசாலையில் தொடக்கக்கல்வியை பயன்ற இவர் உயர்நிலைக்கல்வியை  திண்டிவனத்தில் உள்ள பள்ளியில் பயின்றார். அங்கு அவருக்கு சிகாமணி என்ற பெயர் சூட்டப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவர்களை கிருஸ்துவ மதத்திற்கு மாற்ற பாதிரியார்கள் முயன்ற போது, அதற்கு எதி்ர்ப்பு தெரிவித்து பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஊர் திரும்பினார்.

பிழைப்பு தேடி அவரது பெற்றோர்கள் கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்கவயலுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்களோடு அங்கு சென்ற சகஜானந்தாவிற்கு ஆன்மீகத்தின் மீது நாட்டம் ஏற்பட்டது. தனது 17 வயதில் தான் சன்னியாசியாகப் போவதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு, வீட்டை வி்ட்டு வெளியேறினார். பின்னர் பல ஊர்களில் அலைந்து திரிந்து பல ஆன்மீகவாதிகளை சந்தித்து அவர்களிடம் மத சம்பந்தமான கல்வியை பெற்றார். யோகி நீலமேகசுவாமிகள், தட்சணாசுவாமிகள் ஆகிய ஆன்மீகவாதிகள் அடங்குவர். அதிலும் குறிப்பாக சென்னை வியாசர்பாடியில் இருந்த கரபாத்திர சுவாமிகளை சந்தித்ததுதான் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அவர்தான் சகஜானந்தாவை சிதம்பரத்திற்கு சென்று அங்கே நந்தனின் வாரிசுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும்படி அறிவுறுத்தினார்.
அ.முருகேசன்பிள்ளை 1910-ம் ஆண்டு சகஜானந்தாவை அழைத்துக் கொண்டு சென்று சிதம்பரத்தில் திருநாளைப் போவார் தீயில் மூழ்கிய ஓமக்களுத்தின் கரையில் ஸ்ரீஆறுமுகசுவாமியும், பின்னத்தூர் ஸ்ரீலட்சுமணன் அவர்களும் கட்டியுள்ள சிறிய சந்திரத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து சேவை செய்யுமாறு வலியுறுத்தியதாக சுவாமி சகஜானந்தாவை விவரித்திருக்கிறார். சிதம்பரத்திற்கு வந்த சுவாமி சகஜானந்தா அங்கே ஒரு மடத்தை நிறுவ விரும்பி தொடங்கினார். கல்விச்சாலை ஒன்றையும்  ஏற்படுத்த முடிவு எடுத்து 1916-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி நந்தனார் கல்விக்கழகத்தை நிறுவினார். நாட்டுக் கோட்டை செட்டியார்களின் நட்பு கிடைத்ததின் ஆதரவில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, சைவ சமய பிரசாரத்தை மேற்கொண்டார். அந்த பயணம் நந்தனார் மடத்திற்கும், கல்விச்சாலைக்கும் நிதிஉதவி பெறுவதற்கு உதவியாகவும் அமைந்தது.

சுவாமி சகஜானந்தா தொடங்கிய நந்தனார் கல்விச்சாலை கூரைக்கொட்டகையில்  முதலில் 25 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்டது. 1918-ம் ஆண்டு பள்ளிக்கூட்டம் கட்டுவதற்கு அபோதைய சென்னை மாகான உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சதாசிவ ஐயரால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு ராஜகோபாலாச்சாரியார் பள்ளிக்காக 32 ஏக்கர் நஞ்சை நிலத்தை அளித்தார். 1926 மற்றும் 1934 ஆகிய ஆண்டுகளில் காந்தியடிகள் நந்தனார் பள்ளிக்கு வந்து பார்வையிட்ட பின்னர் அப்பள்ளி பிரபலமானது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி புகட்டுவதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது.

முதன் முதலில் சுவாமி சகஜானந்தாவிற்கு தமிழகஅரசு மணி மண்டபம் கட்ட வேண்டும் என குரல் கொடுத்த காட்டுமன்னார்கோயில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் தெரிவித்தது: புரட்சியாளர் அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை கேட்டு போராடிய காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் சுவாமி சகஜானந்தா. தாழ்த்தப்பட்ட மக்கள் சாதிய கொடுமையிலிருந்து விடுபட பெளத்தத்தை வழியாக காட்டினார். ஆன்மீகவாதியாக இருந்தாலும் அடித்தட்டு மக்களின் விடிவிற்கு அரசியலை பயன்படுத்தியவர் சுவாமி சகாஜனந்தா.

சுவாமி சகஜானந்தா 1926-ம் ஆண்டு சென்னை மாகான சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1932ம் ஆண்டு வரை மேலவை உறுப்பினராக பதவி வகித்த அவர் 1936 முதல் 1947 வரை மீண்டும் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு சேவையாற்றினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1947-ல் சட்டப்பேரவை உறுப்பினரானார். 1959-ம் ஆண்டு மே 1-ம் தேதி அவர் இயற்கை எய்தும் வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். சட்டமேலவையிலும், சட்டப்பேரவையிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக சகஜானந்தா பாடுபட்டார். சுவாமி சகஜானந்தாவால் உருவாக்கப்பட்ட நந்தனார் பள்ளிகள் இன்று தமிழகஅரசு ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
சுவாமி சகஜானந்தா ஒரு ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல் தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்தார். சமஸ்கிருதத்திலும் அவருக்கு நல்ல பயிற்சி இருந்தது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பயங்கரம் சீனுவாசாச்சாரியிடம் சமஸ்கிருதத்தை பயின்றார். வ.உ.சி எழுதிய நூல்களுக்கு சுவாமி சகஜானந்தா சிறப்புப்பாயிரம் அளித்துள்ளார். இது அவரது தமிழ்ப் புலமையை எடுத்துக்காட்டுகிறது என்கிறார் துரை.ரவிக்குமார்.

தற்போது தமிழக சட்டப்பேரவையில் சட்டப்பேரவை உறுப்பினர்  செ.கு. தமிழரசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், ஆர்.ராமமூர்த்தி ஆகியோர் விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று விதி எண் 110-ன் கீழ் சிதம்பரத்தில் சுவாமி சுகஜானந்தாவிற்கு அவர் வாழ்ந்த இடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பினால் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment