Thursday, May 9, 2013

கர்நாடக முதல்வராக ஒரு தலித் வருவாரா ?

 
 
Dr பரமேஸ்வரா
 
கர்நாடக முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் தேர்ந்தெடுக்குமா என்பதுதான் இப்போதைய முதன்மையான கேள்வியாக இருக்கிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பரமேஸ்வரா முதல்வர் வேட்பாளர் எனக் கருதப்பட்டிருந்த வேளையில் அவர் தோல்வியடைந்தது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

2010 ஆம் ஆண்டு மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து கடுமையாக உழைத்து இன்று 122 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறக் காரணமாக இருந்தவர்  பரமேஸ்வரா ஆவார். படித்தவர்களிடையே பிரபலமாகத் திகழ்ந்த அவர் கிராமப்புற மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார் அவர் நடத்திய பாத யாத்திரைகளே கிராமப்புறங்களில் தொய்வடைந்துபோய்  கிடந்த காங்கிரசை எழுச்சிபெற வைத்தன . எனினும் இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த வேட்பாளர் சுதாகர் லால் என்பவரிடம் 18155 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்துள்ளார்.
மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதால் தொகுதிக்கு அடிக்கடி வராததே அவர் தோல்வி அடைய முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அவர் ஒரு முதல்வர் வேட்பாளர் எனத் தெரிந்தும்கூட தலித்துகள் பெருமளவில் அவருக்கு வாக்களிக்கவில்லை . இது தலித் மக்களின் மனநிலைக்கு ஒரு உதாரணம் . தனித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு வேட்பாளர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பிரத்யேகமானவை. நானும் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த  அனுபவத்திலிருந்து இதை என்னால் சொல்ல முடியும் .ஒப்பீட்டளவில் பார்த்தால்  தலித் மக்கள் தனித் தொகுதி உறுப்பினரை மதிப்புக் குறைவாகவே நடத்துகின்றனர். பிற சாதியினரிடம் அடங்கிக் கிடக்கும் அவர்கள் தம் சாதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ; எம்.பி களை அலட்சியப்படுத்துவதன்மூலம் தமது ஈகோவை ஆறுதல்படுத்திக் கொள்கிறார்கள்  எனத் தோன்றுகிறது. அவர்களுக்கு பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் வித்தியாசம் தெரிவதில்லை. எந்தப் பிரச்னையை எவரிடம் சொல்லவேண்டும் என்பதும் புரிவதில்லை.ஒரு சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர் தமது சமுதாயத்துக்காக என்ன செய்கிறார்கள் என்று பார்ப்படதைவிடவும் எப்போதும் அவர் தமது ஊர்களைச் சுற்றியே இருக்கவேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். அப்படி இருப்பதன்மூலம் தமது பகுதிகளுக்கான பிரச்சனைகள்  தீரும் என அவர்கள் கருதுவதாகவும் தெரியவில்லை. தமது சிறு சிறு பிரச்சனைகளுக்கும் அவர் இருந்து பஞ்சாயத்து செய்யவேண்டும் என்பதாகவே அவர்களது மனநிலை இருக்கிறது. தனித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் பிற சாதிகளைச் சேர்ந்தவர்களாலும் மதிக்கப்படுவதில்லை, தலித் மக்களாலும் மதிக்கப்படுவதில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். தமக்கான பிரதிநிதி எப்படி இருக்கவேண்டும் என்ற அரசியல் தெளிவற்றவர்களாக தலித்துகள் உள்ளனர். தனித் தொகுதிகளிலிருந்து சரியான தலித் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட முடியாததற்கு தலித் அல்லாதவர்கள் மட்டுமே காரணம் அல்ல. தலித்துகளும் அதற்கு பொறுப்பாவார்கள் . அரசியல் புரிதல்கொண்டவர்கள் தலித்துகளின் பிரதிநிதிகளாக வந்துவிடக்கூடாது என்று தலித் அல்லாதவர்கள் எண்ணுவதில் வியப்பில்லை . ஆனால் அதே எண்ணம் தலித் மக்களிடமும் இருப்பதுதான் வேதனை தருகிறது. இந்த யதார்த்தம்தான் திறமை மிக்கவராக இருந்தும் , முதல்வர் ஆவதற்கு வாய்ப்பிருந்தும் பரமேஸ்வரா தோல்வியடையக் காரணம்.

கர்நாடக மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் தலித்துகள். மகராஷ்டிராவில் தலித் பேந்தர் இயக்கம் தோன்றியபோதே அதனால் தாக்கம் பெற்று தலித் அரசியல் இயக்கம் உருவான மாநிலம் அது. தலித் இலக்கியத்திலும் முன்னணி பங்கு வகித்த மாநிலம் கர்நாடகா. ஆனால் இன்னும் தலித் மக்கள் அரசியல் விழிப்புணர்வு அடையாத நிலையே அங்கு இருக்கிறது. அதனால்தான் ஒரு தலித் முதல்வர் வரக்கூடிய வாய்ப்பு இன்று கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

தற்போது முதல்வர் பதவிக்கான போட்டியில் சித்தாராமையாவும் மல்லிகார்ஜுன கார்கேவும் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிற்படுத்தப்பட்ட  வகுப்பைச் சேர்ந்த சித்தாராமையா ஆறு ஆண்டுகளுக்கு முன்புதான் காங்கிரசில் சேர்ந்தார். மதச் சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து காங்கிரசைக் கடுமையாக எதிர்த்தவர் அவர் . காங்கிரசுக்கு வந்ததும் அவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. கடந்தமுறை அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் .
மல்லிகார்ஜுன கார்கே


மல்லிகார்ஜுன கார்கே நீண்ட அனுபவம் கொண்ட காங்கிரஸ்காரர். ஒன்பது முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். போட்டியிட்ட பத்து முறையும் வெற்றிபெற்ற சாதனையாளர். சட்டம் பயின்றவர். குறிப்பாக தொழிலாளர் சட்டங்களில் ஆழ்ந்த புலமை கொண்டவர். தற்போது மத்திய அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார். இதுவரை எந்த குற்றச் சாட்டுகளுக்கும் ஆளாகாதவர் . மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தாலும் அவரே முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர் என்பது பலரதும் கருத்தாக உள்ளது.

தலித் ஒருவரை கர்நாடகத்தில் முதல்வராக்குவதன்மூலம் காங்கிரஸ் கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தலித் வாக்குகளைத் திரட்ட முயற்சிக்கலாம்  என சில யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மையாகும் எனத் தெரியவில்லை. தலித் மக்கள் தமது பிரதிநிதிகள் யார் தமது தேவைகள் என்ன என்ற புரிதல் பெறாதவரை தலித் வாக்குகளைப் பெறுவதற்கு வெற்று வாக்குறுதிகளே போதும் என்றுதான் காங்கிரசும் பிற கட்சிகளும் நினைக்கும் . சோனியாவும்  ராகுலும் இதில் விதிவிலக்குகளாக இருப்பார்களா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

1 comment:

  1. The Present situation in karnataka suggests that Mr.Siddharamaiah will be selected for the CM Post.

    ReplyDelete