மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து 6 உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது சட்டப்பேரவையில் கட்சிகளுக்கு இருக்கும் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அமையும்.
ஆளும் கட்சியான அதிமுகவுக்கு அதிக இடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர்களை நியமனம் செய்யும்போது பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் பிரதிநிதித்துவத்தை கவனத்தில்கொள்ள வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகளை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.
தற்போது மக்களவையில் மட்டும்தான் இடஒதுக்கீடு உள்ளது. மாநிலங்களவையில் கிடையாது. இதன் காரணமாக மாநிலங்களவையில் பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகள் உரிய அளவில் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதில்லை. இப்போதைய மாநிலங்களவையில் 10 விழுக்காடு மட்டுமே பெண்கள் உள்ளனர். தலித்துகளின் பிரதிநிதித்துவம் 7 விழுக்காடுகூட கிடையாது. தமிழ்நாட்டில் மொத்தம் மாநிலங்களவை உறுப்பினர்கள் 18 பேர் உள்ளனர். அதில் இருவர் மட்டுமே தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதிலும் ஓர் இடம் இப்போது காலியாகிவிட்டது. அதைப்போல மக்களவையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 22.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருப்பது சமூக நீதியில் அரசியல் கட்சிகள் அக்கறையின்றி இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. சமூகநீதிக் கொள்கைக்குப் பேர்போன தமிழகத்திலும் இத்தகைய ஏற்றத்தாழ்வான நிலை காணப்படுவது கவலைக்குரியதாகும்.
எனவே, தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களை நியமனம் செய்யும்போது சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையில் பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்குமாறு தமிழக அரசியல் கட்சிகள் அந்நியமனத்தைச் செய்திட வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
மாநிலங்களவையிலும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மேலவைகளிலும் இடஒதுக்கீட்டு உரிமைகளை விரிவுபடுத்துவதன் மூலமே சமூகநீதியைக் காத்திட முடியும். அதற்காகக் குரல் எழுப்புமாறு அனைத்து சனநாயகக் கட்சிகளையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறைகூவி அழைக்கிறது.