Showing posts with label manarkeni. Show all posts
Showing posts with label manarkeni. Show all posts

Sunday, September 29, 2013

நிகரி சமத்துவ ஆசிரியர் விருது வழங்கும் விழா




நிகரி சமத்துவ ஆசிரியர் விருது வழங்கும் விழா 24.09.2013 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை ஆ.ரவிகார்த்திகேயன் வரவேற்றார்.சிறப்பான ஆய்வு இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் மணற்கேணி பல்வேறு ஆய்வரங்கங்களை இதற்கு முன் நடத்தியிருக்கிறது. ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விதமாகத் தற்போது எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டார்.
அடுத்து நோக்கவுரை ஆற்றிய ரவிக்குமார் இந்த விருது ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பதை விளக்கினார். வகுப்பறைகளில் நிலவும் பல்வேறுவிதமான பாகுபாடுகளிலும் மிகவும் கொடுமையானதாக சாதிய பாகுபாடு உள்ளதென்று கூறிய அவர், அத்தகைய பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அதற்காக பாடுபடுகிறவர்களைக் கௌரவிப்பதற்கும்தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனையோ விருதுகள் அளிக்கப் படுகின்றன. ஒரு விருதை யார் கொடுக்கிறார்கள் என்பதைப்போலவே அது யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதும் முக்கியம். கல்விக் கூடங்களில் சமத்துவத்தை ஏற்படுத்த இதுவொரு சிறிய துவக்கம்தான், பலரும் இத்தகைய பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்”  என அவர் கேட்டுக்கொண்டார்.
அதன் பின்னர் விருதுபெற்ற ஆசிரியர் த.பாலு ஏற்புரையாற்றினார். அவர் பேசும்போது “ அரசுப் பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்கள் பள்ளிக்கு வெளியே வந்து நல்ல காரியங்களைச் செய்வதைவிடவும் பள்ளியில் ஒழுங்காகப் பாடம் சொல்லிக்கொடுத்தாலே போதும். காசுகொடுத்துப் படிக்க முடியாத ஏழைப் பிள்ளைகள்தான் அரசுப் பள்ளிகளுக்கு வருகிறார்கள். அவர்களைப் நன்றாகப் படிக்க வைத்தால்  அதுவே மிகச்சிறந்த சேவை. ரவிக்குமார் எந்த தளத்தில் செயல்பட்டாலும் அங்கே அடித்தளத்து மக்களுக்காக , யாரும் கண்டுகொள்ளாத மக்கள் தொகுதிக்காக, ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கிறார் என்பது முக்கியம். எனவேதான் அவர் கல்வித் தளத்தைத் தேர்ந்தெடுத்து அதில் பாகுபாடுகளுக்கு எதிராகச் செயல்படும் பள்ளி ஆசிரியருக்கும், கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் நிகரி என்கிற விருதைத் தனது சொந்த பங்களிப்பில் வழங்குகிறார்.

விருதுகள் என்றாலே ஒத்த கருத்துகளுக்கு இடமில்லாமல் பெரும்பாலும் சர்ச்சைகள் எழுவது உண்டு. பாரத் ரத்னா விருதை அளித்ததில்கூட எம்.ஜி.ஆருக்குப் பிறகுதான் அண்ணல் அம்பேதகருக்கு வழங்கினார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அத்தகைய விருதுகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியல் விருப்பு வெறுப்புகள் நமக்குத் தெரிகிறது.ஆனால் ரவிக்குமார் ஒரு அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தும் கட்சி அரசியல் அடையாளம் ஏதுமில்லாமல் இந்த நிகழ்வை நடத்துகிறார். 

என்னிடம் நற்கூறுகள் ஏதேனும் இருக்கிறதென்றால் அவை பலராலும் ஏற்படுத்தப்பட்டவை. குறிப்பாக பழமலையும் கல்யாணியும், கோச்சடை, ரகமத்துல்லா கான், லோகியா போன்ற பேராசிரியர்களும் ஏற்படுத்திய தாகம்தான் அதற்குக் காரணம்.குறிப்பிட்ட சிந்தனைப் போக்கும், இயக்கச் சூழலும் களச் செயல்பாடுகளும் சேர்ந்து உருவாக்கிய கூட்டு மனம்தான் நான். நிறைய செவிலித் தாய்களால் உருவாக்கப்பட்ட எனக்கு அளிக்கப்படும் விருது அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்படும் விருதுதுதான். இந்த விருதை அவர்கள் அனைவரின் சார்பில் நோபல் பரிசாக நினைத்து ஏற்றுக்கொள்கிறேன்.” என்றார். அடுத்து பேராசிரியர் அ.ராமசாமி ஏற்புரை நிகழ்த்தினார்.
வாழ்த்துரை ஆற்றிய பேராசிரியர் கல்யாணி “ வகுப்பறையில் பல்வேறு பாகுபாடுகள் இருக்கின்றன. இந்த விருது வழங்கப்படுவது குறித்து கலந்துபேசுவதற்காக என்னை சந்திக்க வந்த ரவிக்குமார் ஆங்கிலத்தில் இருந்த அறிக்கை ஒன்றை என்னிடம் தந்துவிட்டுப் போனார். முதலில் அதை நான் படிக்கவில்லை. பிறகு ஒருநாள் எடுத்துப் பார்த்தேன். தேசிய ஆலோசனைக் கவுன்சில் வழங்கிய அறிக்கை அது. அதைப் படித்தபோதுதான் எத்தனைவிதமான பாகுபாடுகள் இருக்கின்றன, அவற்றைக் களைவதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பது எனக்குத் தெரிந்தது. அந்த அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். இந்த விருதை அளிக்க முடிவு செய்ததற்காக மணற்கேணி பத்திரிகையின் ஆசிரியர் ரவிக்குமாரைப் பாராட்டவேண்டும். எனக்கு தலித் பிரச்சனை குறித்து இந்த அளவுக்கு புரிதல் ஏற்பட அவரும் ஒரு காரணம். எந்தவொரு விஷயத்தையும் மனதில் தைப்பதுபோல அவர் சொல்லுவார். இந்த நிகரி விருதுக்கான நினைவுப் பரிசை வடிவமைத்தவர் அவரது மகன் அதீதன். மிகச் சிறப்பாக அதைச் செய்திருக்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன்.”   
”இந்த சமத்துவ ஆசிரியர் விருதைப் பெற்றிருக்கும் பாலு பள்ளி மாணவராக இருந்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கமானவர். அப்போதே நல்ல பேச்சாளர். சமச்சீர் கல்வியை அவர்  சார்ந்திருந்த ஆசிரியர் சங்கம் ஏற்காதபோது தனது சொந்த முயற்சியில் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக துண்டறிக்கை வெளியிட்டு வினியோகித்தவர். பேராசிரியர் ராமசாமி தலித் பிரச்சனையில் நல்ல தெளிவான பார்வை கொண்டவர். அரசு அதிகாரிகளுக்கு எஸ்.சி/ எஸ்.டி பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் 2001 ஆம் ஆண்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டது. நான், ரவிக்குமார் போன்றவர்களெல்லாம் பயிற்சி கொடுத்தோம். திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி கொடுத்தபோது ராமசாமி அவர்களும் வந்து அதிகாரிகளுக்கு வகுப்பெடுத்தார்.”
”இங்கே சிறப்புரையாற்ற வந்திருக்கும் வசந்திதேவி அவர்கள்தான் நான் மனித உரிமைப் பணிகளில் ஈடுபடக் காரணம் என்று சொல்லலாம். கடலூர் சிறையில் இருந்த தமிழிந்தியன் என்ற கைதி எனக்கொரு கடிதம் எழுதினார்.அதை அறிந்த வசந்திதேவி அவர்கள்தான் என்னை உயர்நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று அங்கு இலவச சட்ட உதவி மையத்தின் செயலாளராக இருந்த திரு ராஜா அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்பிறகுதான் மனித உரிமை தொடர்பான பிரச்சனைகளை நான் கையிலெடுத்தேன்.”   
”தலித்துகள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம்.அவற்றை எதிர்த்து அவர்கள் சாதி அடிப்படையில் திரள்வதற்கு நியாயமிருக்கிறது. ஆனால் பி.சி யோ அல்லது எம்.பி.சியோ அப்படி சாதி அடிப்படையில் திரளுவதற்கு எந்த நியாயமும் இப்போது இல்லை. முன்பு இருந்திருக்கலாம், இப்போது இல்லை என்பதுதான் எனது வலுவான கருத்து. சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் பற்றி ஆசிரியர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. இந்த விழாவுக்குப் பிறகாவது அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் முயற்சிக்கவேண்டும்” என்று கல்யாணி குறிப்பிட்டார்.
விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றிய முனைவர் வசந்திதேவி சுமார் ஒரு மணி நேரம் பேசினார். கல்வித்துறையில் நிலவும் பல்வேறுவிதமான சீர்கேடுகளையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். ”வர்க்க அடிப்படையிலான போராட்டம் வர்ண அடிப்படையிலான போராட்டம் என இனிமேல் பிரித்துப் பார்க்கக்கூடாது.இரண்டும் ஒன்றுதான் என அணுகவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மனது வைத்திருந்தால் இந்நேரம் அந்தப் பள்ளிகள்தான் தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த பள்ளிகளாக இருந்திருக்கவேண்டும்.ஆதிக்க சாதியினர் தலித் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுத் தருவதில் அக்கறைகாட்டவில்லை என நாம் குற்றம் சாட்டுகிறோம். அது உண்மைதான். ஆனால் தலித் ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள்? தமிழ்நாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான ஆசிரியர்களில் கணிசமானவர்கள் தலித் ஆசிரியர்களில்லையா? அவர்கள் தமது கடமையை சரியாகச் செய்யவேண்டும் என்று நாம் கேட்கவேண்டும்.” என அவர் வலியுறுத்தினார்.
”சில தலித் சிந்தனையாளர்கள் தலித் குழந்தைகள் ஆங்கிலத்தில் படிப்பது நல்லது என்கிறார்கள்.அது திசைதிருப்பும் கருத்து. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கற்பதில் எந்தத் தவறும் இல்லை.ஆனால் தாய்மொழிதான் பயிற்றுமொழியாக இருக்கவேண்டும். உலகின் பெரும்பாலான நாடுகளில் அப்படித்தான் இருக்கிறது.தலித் பிள்ளைகள் அத்தனைபேரும் ஆங்கிலத்தில் படித்து கர்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்குப் போக முடியுமா? அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளைத் திறப்பது ஆபத்தாகத்தான் முடியும். டென்னிஸ் த மெனேஸ் என்ற கார்ட்டூன் கதையில் டென்னிஸ் சொல்வான் ’நீ வெற்றிபெற வேண்டுமென்றால் விளையாட்டின் விதியை நீ தீர்மானிக்கவேண்டும்’. அதுபோலத்தான் தங்களுக்கு சாதகமான விதத்தில் கல்வியின் விதிகளை ஆளும் சாதியினரும் வர்க்கத்தினரும் வகுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற கல்வியைப் படியுங்கள் என்கிறார்கள்.”
“நாம் சமூக நீதி என்றாலே இட ஒதுக்கீடு என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அரசு வேலைவாய்ப்புகளில்தான் இட ஒதுக்கீடு.தனியார் துறையில் அது இல்லை. இப்போது அரசுத் துறைகளில் எங்கே வேலைவாய்ப்பு இருக்கிறது? தனியார் துறையில்தான் இருக்கிறது. இட ஒதுக்கீடு இருக்கும் இடத்தில் வேலை வாய்ப்பு இல்லை, வேலை வாய்ப்பு இருக்குமிடத்தில் இட ஒதுக்கீடு இல்லை.தனியார் துறைதான் இன்று அனைத்து சலுகைகளும் கொடுத்து ஊட்டி வளர்க்கப்படுகிறது.அங்கே உயர் சாதிக்கும் உயர் வர்க்கத்துக்கும்தான் இடம் கொடுப்பார்களே தவிர தலித் பிள்ளைகளுக்கு எங்கே வேலை கொடுப்பார்கள்?”
“ இன்று நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் கொள்கைகள் யாருடைய நன்மைக்கு உருவாக்கப்படுகின்றன? இந்த நாட்டிலிருக்கும் கோடீஸ்வரர்களுக்காக உருவாக்கப்படுகின்றன. இந்த நாட்டின் இயற்கை வளங்களெல்லாம் கொள்ளையடிக்கப்படுகின்றன. இவையெல்லாம் மாற்றப்படவேண்டுமென்றால் கல்வியால்தான் முடியும். அந்தக் கல்வியை நாம் பெறவேண்டும். 1964 இல் கோத்தாரி கமிஷன் உருவாக்கப்பட்டது. இந்த நாட்டில் எந்தத் துறையில் புரட்சி ஏற்படவேண்டுமென்றாலும் அதற்கு கல்வியிலே முதலில் புரட்சி ஏற்படவேண்டும் என்று அந்தக் கமிஷன் சொன்னது. அந்தக் கல்விப் புரட்சி உண்டாவதற்கு பொதுப் பள்ளி முறை, அருகமை பள்ளி முறை வந்தாகவேண்டும். அதுமட்டுமல்ல பள்ளிகள் யாவும் அரசாங்கத்தால்தான் நடத்தப்படவேண்டும். இதைக் கொண்டுவருவதற்கு நாம் போராடவேண்டும். அப்போதுதான் சாதியற்ற சமுதாயம் உருவாகும்” என்று வசந்திதேவி பேசினார்.
விழாவில் பேராசிரியர்கள் பழமலை,ரஹமத்துல்லா கான், முன்னாள் விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், எழுத்தாளர் இமையம், உள்ளிட்ட சுமார் 300 பேர்  கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உமாபதி, ரவிகார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர். 

Monday, May 27, 2013

மணற்கேணி குறித்து ஈழக் கவிஞர் அனார்




அன்பின் ரவிக்குமார்,

மணற்கேணி படித்து முடித்தேன். பூஃகோவின் நேர்காணல் மிகுந்த முக்கியத்துவமான விடயங்களைக் கொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தின் பொருத்தப்பாடுகளை மேலும் உணர்த்துகிறது. 

இலங்கை அரசியல் நிலவரங்கள் தொடர்பான கட்டுரைகள் அனைத்தும் வேறொரு தளத்தில் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்விதமான அக்கறைகள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்ற உங்கள் கணணோட்டங்கள் அவசியமானவைதானே...? விக்னேஸ்வரன் அவர்களின் உரை முஸ்லீம் மக்களின் இன்றை நிலையை தொட்டுச் செல்கிறது. அதில் குறிப்பிடப்டும் மருதமுனை எனது அடுத்த ஊராகும்.

மணற்கேணி தனது ஒருகையில் தொன்மையான அடையாளங்களையும், நவீன அரசியல் இலக்கியம் என்ற வகைப்பாடுகளை மறுகையிலுமாக வைத்திருக்கிறது. 

உங்களுடைய தர்மபுரி கவிதைகள் மனதின் அறத்தை சுட்டி நிற்கின்றன.

இவ்விதமான காலத்தின் பிரதிபலிப்புகளோடு சமூக அக்கறைகளோடு உங்கள் அகத்தின்  பிரதி பலிப்பை உங்கள் கவிதைகள்போல மணற்கேணியும் பிரதிபலிக்கின்றது.

வாழ்த்துக்களும் அன்பும்.


அனார்

(மணற்கேணி 17 ஆவது இதழ் குறித்து ஈழக் கவிஞர் அனார் எழுதிய மடல் )
 

Sunday, April 21, 2013

மணற்கேணி ஆய்விதழ் குறித்து தினமணி ஆசிரியர்

21.04.2013 தினமணி நாளேட்டில் அதன் ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் ' கலாரசிகன்' என்ற பெயரில் எழுதியிருக்கும் பத்தியில் மணற்கேணி ஆய்விதழ் குறித்து எழுதியிருக்கிறார். அவருக்கு நன்றி.
இங்கே அதைப் படியுங்கள்: 


"நண்பர் ஒருவரின் மேஜையில் ரவிக்குமார்  நடத்தும் "மணற்கேணி' இருமாத இதழின் நவம்பர் - டிசம்பர் 2012 இதழ் இருந்தது.  இப்படி ஓர் அற்புதமான இலக்கிய ஆய்வு இதழை நண்பர் ரவிக்குமார் நடத்தி வருவதற்காகவே அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும்.

புதுவையில் "மணற்கேணி' சார்பில் நடத்திய, "தமிழும் சமஸ்கிருதமும்' என்கிற ஆய்வரங்கச் சொற்பொழிவுகள் கட்டுரைகளாகத் தரப்பட்டிருக்கின்றன. அ. மணவாளன், இரா. கோதண்டராமன், பெ. மாதையன், இரா. அறவேந்தன், பக்தவத்சல பாரதி ஆகியோரின் சிந்தனையைத் தூண்டும் வாதங்கள் வருங்கால ஆய்வுகளுக்கே கூடத் தரவுகளாக அமையும் தன்மையன.

அம்பை எழுதியிருக்கும் "மரத்தடியில் திருவள்ளுவர்' என்கிற சிறுகதை, தமிழும் தமிழனும் இன்று எப்படி இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. படித்து முடித்து விட்டு, அடுத்த பக்கத்தைத் திருப்புவதற்கு பதிலாக, மீண்டும் ஒருமுறை படிக்கத் தோன்றியது.
அரை நூற்றாண்டு காலத் தொல்லியல் ஆய்வைப் பற்றிய சிறப்புப் பகுதியில் படிக்க வேண்டிய 33 நூல்களையும், தொல்லியல் துறை தொடர்பாகச் செய்ய வேண்டிய 50 பரிந்துரைகளையும் தொகுத்து வழங்கி இருப்பது பயனுள்ள முயற்சி.
ஐயாயிரம் ரூபாய் கொடுத்து "மணற்கேணி'யின் புரவலராகலாம்; மூவாயிரம் கொடுத்து "மணற்கேணி' குழாமில் சேரலாம்; ஆயிரம் கொடுத்து "ஊருணி' திட்டத்தின் மூலம் யாருக்காவது "மணற்கேணி' பரிசளிக்கலாம். முன்னூற்று அறுபது கொடுத்து ஆண்டு சந்தாதாரர் ஆகலாம். என்ன செய்வது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆனால், தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, தனக்கெனத் தனித்துவமானதொரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு இலக்கியப் பணியாற்றிவரும் "மணற்கேணி' தொடர்ந்து வெளிவர உதவாமல் இருந்து விடாதீர்கள். தொடர்புக்கு9443033305 அல்லது manarkeni@gmail.com."
 http://dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/04/21/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/article1554066.ece

Monday, November 26, 2012

' தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் ( 1961 - 2011 ) ஆய்வரங்கின் புகைப்படங்கள்


ரவிக்குமாரின் அறிமுகவுரை 
நடன காசிநாதன்
முனைவர் தயாளன் 
முனைவர் வேதாசலம் 
முனைவர் கா.ராஜன் 
முனைவர் வீ.செல்வகுமார் 
பேராசிரியர் விஜய வேணுகோபால் 
பார்வையாளர்கள் 
பகல் உணவு 

முனைவர் கா.ராஜனுக்கு சி.ஆர்.செல்வகுமார் நினைவுப் பரிசு வழங்குதல்
நடன காசிநாதனுக்கு இராம கி நினைவுப் பரிசளித்தல் 
முனைவர் வேதாசலத்துக்கு ஆ.ரவிகார்த்திகேயன் 
முனைவர் தயாளனுடன் அவரது மகள் மற்றும் EFEO தலைவி வலேரி 
பங்கேற்பாளர்கள் பதிவு செய்துகொள்ளுதல் 

Saturday, November 24, 2012

அம்பை எழுதியிருக்கும் சிறுகதை



மணற்கேணி 15 இல் அம்பை எழுதியிருக்கும் ' மரத்தடியில் திருவள்ளுவர் ' என்ற சிறுகதை இடம்பெற்றுள்ளது. மெல்லிய நகைச்சுவை இழையோடும் கூர்மையான சமூக விமர்சனம் கொண்ட மொழியில் சொல்லப்பட்டிருக்கும் இந்தச்  சிறுகதை ' வீட்டின் மூலையில் ஓர் சமையலறை ' என்ற அம்பையின் முதல் தொகுப்பில் இடம்பெற்றிருந்த சில கதைகளின் அங்கதம் ததும்பும் சமூக விமர்சனத்தை உங்களுக்கு நினைவுபடுத்தும். 

டிசம்பர் 1 இல் இதழ் வெளிவருகிறது. 

120 பக்கங்கள் . தனி இதழ் 60/- ஆண்டுக் கட்டணம் 360/- 
அயல்நாடுகளுக்கு 25 அமெரிக்க டாலர்  

மணற்கேணி 15




Thursday, October 18, 2012

' தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் - 1961 - 2011 '





அன்புடையீர் வணக்கம் 

தமிழ் நாடு தொல்லியல் துறை துவக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன ( 1961 - 2011). அந்தத் துறையாலும் அத்  துறையில் ஆர்வம் கொண்ட அறிஞர்களின் தனிப்பட்ட முயற்சிகளாலும் தமிழகத்தில் பல்வேறு அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன, ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுப் படியெடுக்கப்பட்டு அவற்றில் பல  பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பணிகளின் விளைவாகத் தமிழின் தொன்மை உலகறியச் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக வரலாறு குறித்த ஆய்வுகளுக்கு இவை பெருமளவில் பங்களிப்பைச்  செய்திருக்கின்றன. 

இந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் அறியப்பட்டிருந்தாலும்  போதுமான நிறுவன ஆதரவுகளைப் பெறுவதிலும் புதிய ஆய்வாளர்களை ஈர்ப்பதிலும் பல்வேறு சிக்கல்களை இத் துறை சார்ந்த அறிஞர்கள் சந்தித்து  வருகின்றனர். 
 
தொல்லியல் துறையில் நிகழ்ந்துவரும் ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் பிற துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத காரணத்தால் இந்தத் துறைகளுக்கிடையில் பரஸ்பர கொடுக்கல் வாங்கல் நிகழவில்லை. இதனால் ஒருங்கிணைந்த விதத்தில் தமிழ் இலக்கியம், வரலாறு , பண்பாடு முதலானவற்றை ஆராய்வதில் பின்னடைவு காணப்படுகிறது. புதிய ஆய்வாளர்கள தொல்லியல் துறை நோக்கி வராமல் போவதற்கு அது ஒரு காரணமாக இருக்கிறது. 

இந்த நிலையை மாற்றி தமிழகத் தொல்லியல் , கல்வெட்டியல் துறைகளில் நடைபெற்று வரும் ஆய்வுகளை மேலும் பரந்த தளத்துக்கு எடுத்துச் செல்வதில் மணற்கேணி எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறது. இத் துறையைச் சேர்ந்த அறிஞர்களான  திரு. நடன. காசிநாதன், பேராசிரியர் விஜய வேணுகோபால் , பேராசிரியர் கா.ராஜன், பேராசிரியர் சு.ராஜவேலு உள்ளிட்டப் பலரது கட்டுரைகளை மணற்கேணி வெளியிட்டிருக்கிறது. பொருந்தல், கொடுமணல் அகழ்வாய்வுகள் குறித்தும் பதிவுகளைச் செய்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக 
'  தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் - 1961 - 2011 ' என்னும் தலைப்பில்  ஆய்வரங்கு ஒன்றை மணற்கேணி நடத்தத் திட்டமிட்டிருக்கிறது . 24.11.2012  சனிக்கிழமை அன்று  பாண்டிச்சேரியில் இந்த ஆய்வரங்கு நடைபெறும். 

இந்த ஆய்வரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர்  தங்களது ஒப்புதலை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது எனது அலைபேசியில் ( எண் 9443033305 ) தொடர்புகொண்டோ தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 

அன்புடன் 
ரவிக்குமார் 
ஆசிரியர் , மணற்கேணி 


காலை துவங்கி மாலை வரையில் இரு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த ஆய்வரங்கில் கலந்துகொண்டு  ஆய்வுரை  வழங்கிச்  சிறப்பிக்குமாறு அழைக்கப்பட இருப்பவர்கள் : 

திரு.ஐராவதம் மகாதேவன்  , திரு.ஒய் .சுப்பராயலு , திரு.இரா.நாகசாமி , திரு.எஸ்.ராசு   , திரு.விஜய வேணுகோபால் , திரு.நடன.காசிநாதன் , திரு.கா.ராஜன் , திரு.தயாளன் , திரு.சு.ராஜவேலு ,திரு. எஸ் . சாந்தலிங்கம் , திரு. கலைக்கோவன் 

Saturday, September 29, 2012

தமிழ் அகராதிகளில் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்: பேராசிரியர் மாதையன்


  
30 Sep 2012 05:09:11 AM IST

 
புதுச்சேரி, செப். 28: தமிழுக்கான சொற்பொருள் அகராதிகளை உருவாக்கும்போது, பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பேராசிரியர் மாதையன் வலியுறுத்தினார்.
 மணற்கேணி இதழ் சார்பில் "தமிழும் சமஸ்கிருதமும்' எனும் தலைப்பில் ஆய்வரங்கம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேராசிரியர் மாதையன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
 தமிழில் தொல்காப்பியம் தரமான ஓர் காப்பியம். அதில் ஒரு குறைகூட காணமுடியாது. எத்தனை ஆண்டுகள் தவமிருந்தாலும் இதுபோல் ஒரு காப்பியத்தை எழுத முடியாது.
 சங்ககால இலக்கியங்களுக்கு சொற்பொருள் அகராதிகளைத் தற்போது உருவாக்கும்போது சிலர், பொருள் பிழைகளுடன் உருவாக்குகின்றனர். தமிழ் அகராதிகளில் பிழைகள் ஏற்படுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
 இதுபோன்ற தமிழுக்கான ஆய்வரங்கங்கள் நடத்த, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் மேலும் பலரை ஊக்குவிக்க வேண்டும்.
 இது தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். தமிழ் ஆய்வுக்காக மத்திய அரசு அளிக்கும் நிதி முழுவதுமாகச் செலவிடப்படாதபோது, அது வடமொழி இலக்கிய ஆய்வுகளுக்கு மாற்றப்படுகிறது.
 எனவே தமிழ்மொழி ஆய்வுக்கான நிதியை முழுவதுமாகச் செலவிட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பேராசிரியர் மணவாளன்:
 சமஸ்கிருதம் ஒரு பண்பாட்டு மொழி. அது பேச்சு வழக்கில் உள்ள மொழி கிடையாது. எனவே சமஸ்கிருதத்தைக் கண்டு யாரும் அஞ்சத் தேவையில்லை. கி.மு.4-ம் நூற்றாண்டில் ராமாயணம், மகாபாரதம் முதலியவை தோன்றின. இந்த ராமாயணம் வட இந்தியாவில் இருப்பதுபோல், தென்னிந்தியாவில் இல்லை.
 இதிலேயே சில வேறுபாடுகள் உள்ளன. ராமாயண சமஸ்கிருத நடையிலும், மகாபாரத சமஸ்கிருத நடையிலுமே வேறுபாடுகள் உள்ளன.  அனைத்து துறைகளிலும் தமிழைப் பயன்படுத்தும்படி மாற்ற வேண்டும் என்றார் அவர்.
பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி:
 தமிழையும், சமஸ்கிருதத்தையும் ஆராயம்போது ஒரு மொழி மட்டுமே தெரிந்தவர் ஆராயக் கூடாது. இரு மொழிகளையும் நன்கு தெரிந்தவர் ஆராயும் போதுதான் அப்பணி சிறப்பானதாக இருக்கும்.
 பல தமிழ் சொற்கள் சமஸ்கிருத சொற்களாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக நீலமாக இருக்கும் விண்(வானம்) வழிபாடுதான் விஷ்ணு வழிபாடாக மாறியதாக நான் கருதிகிறது.
  விண் என்ற சொல்லில் இருந்துதான் விஷ்ணு என்ற சொல் வந்துள்ளது. இதுதொடர்பாக, வளரும் இளம் தலைமுறையினர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 இந்த ஆய்வரங்கத்தை மணற்கேணி ஆசிரியர் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் ஒருங்கிணைத்தார். இதில் பல்வேறு பேராசிரியர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.  ஆய்வரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆய்வுப் பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Chennai&artid=668706&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=தமிழ்%20அகராதிகளில்%20பிழைகள்%20ஏற்படுவதைத்%20தவிர்க்க%20வேண்டும்:%20பேராசிரியர்%20மாதையன்

“Tamil contributed to Sanskrit too”


Published: September 30, 2012 00:00 IST | Updated: September 30, 2012 05:05 IST


Staff Reporter
Language talkOne of the speakers at the Tamil and Sanskrit conference here on Saturday— Photo: T. Singaravelou
Language talkOne of the speakers at the Tamil and Sanskrit conference here on Saturday— Photo: T. Singaravelou
Speaking against the popular belief that only the language Tamil borrowed usages and terms from Sanskrit, writer Indira Parthasarathy said there are many words in Sanskrit that were taken from Tamil.
Even the word ‘Vishnu’ comes from the Tamil word ‘Vin,’ he said speaking at the Tamil and Sanskrit conference here on Saturday.
Delivering the keynote address at the function, Tamil writer A.A. Manavalan said Sanskrit is a static language and has not changed through the years.
Even the Bhagavat Gita was added to the Mahabharatha at a later stage, he said.
It is possible that even Panini was influenced by Tholkappian’s Tamil, he said.
The Tamil and Sanskrit conference was organised by Manarkeni and featured 13 scholars including C.T. Indra, K. Rajavelu and others who presented papers through the day.
More In: TAMIL NADU | NATIONAL
Printable version | Sep 30, 2012 11:20:59 AM | http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tamil-contributed-to-sanskrit-too/article3951028.ece

Tuesday, September 25, 2012

‘சமஸ்கிருதம் திராவிட மொழியா?' - இந்திராபார்த்தசாரதி




                           

சில ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் நிமாடே என்ற மராத்தியப் பேராசிரியரோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார், ‘சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி,தட்சிணபிராகிருத்த்தோடு அதிக தொடர்பு கொண்ட மொழி மராத்தி. இந்தியவில் இருப்பவர்களில் பெரும்பான்மையோர் திராவிடர்கள்' என்று. அண்மையில் மாக்டொனால்ட் எழுதிய ‘சமஸ்கிருத மொழியின் வரலாற்றை'ப் படிக்கும்போது, நிமாடே கூறியது என் நினைவுக்கு வந்தது.

மாக்டொனால்ட் கூறுகிறார்:'  சமஸ்கிருதம், வேத காலத்தில் மொழி அறிஞர்களால் உருவாக்கப்பாட்டது. சமூக மரபுச் சட்டங்களை மக்கள் பின்பற்றுவதற்காகப் பாட்டுருவத்தில் உருவான செயற்கை மொழி சமஸ்கிருதம். ‘

அப்படியானால், அக்காலத்து மக்கள் எந்த மொழியில் பேசியிருப்பார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

சமஸ்கிருதம், இந்தோ-ஜெர்மானியக் குழுவைச் சார்ந்தது என்று கூறுகிறார்கள். ஆனால் ரிக் வேத காலத்திலேயே, சமஸ்கிருதத்துக்கும், ஜெர்மானிய மொழிகளுக்கும் அடிப்படை
வேறுபாடுகள் தோன்றிவிட்டன.'வேத காலத்திய மொழி(சம்ஸ்கிருதம்) இந்தியாவில் அப்பொழுது பேசப்பட்டிருக்கக் கூடிய மொழிகளோடு( ‘திராவிட மொழிகள்'?) இரண்டறக்
கலந்து பல புதிய வடிவங்களைப் பெற்று, இப்பண்பாட்டுக் கலப்பின் ஒரு குறியீட்டு மொழியாகி விட்டது' என்று பி.டி.சீனுவாச அய்யங்கார் ‘புராதன இந்தியாவில் வாழ்க்கை' என்ற ஆய்வு நூலில் கூறியுள்ளார். இந்தோ-ஜெர்மானிய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்துக்குமிடையே வாக்கிய அமைப்பு (Syntax) வேறுபாடுகளை ஊன்றிக் கவனிக்கும்போது இது தெளிவாக விளங்கும். வாக்கிய அமைப்பில் பெரும் பான்மையான இந்திய மொழிகள் அனைத்தும் ஒத்துக் காணப்படுகின்றன. மொழிபெயர்ப்பின் போது இது தெளிவாகப் புலப்படும்.

வளர்ச்சியுறாத குழு மொழிகளைப் பேசிய, இந்தியாவில் குடியேறிய சில ‘ஆரிய' இனங்கள்( ‘ஆரிய' என்ற  இனத்தைக் குறிக்கும் சொல்லாட்சியே பொருத்தமா என்று தெரியவில்லை. மொழி வேற்றுமைகளைக் குறிப்பதற்காக, ‘ஆரிய', ‘திராவிட' என்று சொற்களை குறிப்புச் சௌகரியத்துக்காக  உருவாக்கிக் கொள்ளலாம் என்கிறார் மாக்ஸ்முல்லர்) இந்தியாவுக்கு வந்து, நாகரிகத்தில் முதிர்ச்சியுற்ற ‘திராவிட' இனங்களோடு (மறுபடியும் சொல்லாட்சிப் பொருத்தம் பற்றிய வினா எழுகின்றது!) கலந்துவிட்ட நிலையில் ஒரு புதிய பண்பாடு தோன்றியது. இதுதான் இந்தியக் கலாசாரம். இதில் எது ‘ஆரியம்', ‘எது திராவிடம்' என்று அறுதியிட்டுக் கூறுவது இயலாத காரியம்.

ஹிந்து மதம் என்று அறியப்படும் வைதிக நெறியில் காணப்படும் கடவுளர் அனைவரும் திராவிட வழிப்பாட்டு தெய்வங்களின் வெவ்வேறு வடிவங்கள் என்ற ஒரு கருத்தும் காணப்படுகின்றது.'சவிதா', ‘பூஷா', ‘வாயு', ‘சூரியன்', ‘உஷா', ‘சோமா', ‘எமன்', ‘வருணன்', ‘ருத்ரன்', ‘அதிதி', பிரஹஸ்பதி', பிராஜபதி' போன்ற பல வேதகாலத்திய, தெய்வங்களுக்கும், இந்தோ- ஜெர்மானிய இனங்களில் காணப்படும் பழைய கடவுளர்க்கும் எந்த விதமான ஒற்றுமையும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய மண்ணில் இந்த தெய்வங்கள் உருவானதற்குப் பண்பாட்டுக் கலப்புதான் காரணம் என்று சொல்லலாம்.

‘விஷ்ணு' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இதற்குத் திருப்திகரமான வேர்ச் சொல் சமஸ்கிருதத்தில் இல்லை.' விண்' என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது ‘விட்டுணு'(‘பரிபாடல்') ‘விண்' என்றால் வானம். வானத்தின் நிறம் நீலம். விஷ்ணுவின் நிறம்
நீலம்' அல்லது'கறுப்பு'. வானம் எனும்போது அது வெளியை (‘Space')க் குறிக்கும். விஷ்ணுவின் அவதாரம் ஒன்று அகிலத்தை அளந்து எல்லையற்ற வெளியைப் போல் விரிகின்றது.( வாமனாவதாரம்> திருவிக்ரமாவதாரம். அணு>அகண்டப் பெருவெளி).
‘சிவம்' என்றால் ‘செம்மை' அதாவது ‘ருத்ரன்'(‘செம்மை'). இமயந்தொட்டுக் குமரிமட்டும்
இவ்வின கலப்பில் உருவான கடவுளரைத் தாம் நான் காண்கின்றோம்.

வரலாற்றுக் காலத்துக்கு முன்பே இந்தியாவுக்குச் சில இந்தோ-ஜெர்மானிய இனங்கள் வந்திருக்கக்கூடும். அவர்களுக்கும், அப்பொழுது இந்தியாவிலிருந்த பூர்வக் குடிமக்களுக்குமிடையே ஏற்பட்ட மோதல்களினாலும் உடன்பாடுகளினாலும் உருவானதுதான் இந்தியக் கலாசாரம். இக்கலாசாரத்தில் பூர்வ இந்தியக் கலாசாரத்தின்
கூறுகள்தாம் அதிகம் தெரிகின்றன. இதை ஹிந்து மதம் என்று அழைப்பதே சொல்லாட்சிப் பிழை. இது ஒரு வகையான வாழ்க்கை நெறி.

‘ஆரியம்' என்று அழைக்கப்படுகின்ற ‘இந்தோ-ஜெர்மானியப் பண்பாடு அதிகம் இல்லை என்பதற்குக் காரணங்கள்:(1) பூர்வகுடி தெய்வங்களின்(திருமால், சிவன், முருகன், கிருஷ்ணன் போன்றோர்) மேலாண்மை. ரிக் வேத காலத்து இந்திரனை ஏன் வழிபடவேண்டும் என்று ஆயர்களைக் கிருஷ்ணன் கேட்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும்.(2)இயற்கைப் பொருள்கள் (மரம், கல், மிருகங்கள், பறவைகள், நதிகள், மலைகள் ஆகியவை) வழிபடும் தெய்வங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. மாக்டொனால்ட் கூறுகிறார்:' இந்தியாவில் மட்டும் நயாக்ரா நீர்வீழ்ச்சி இருந்திருந்தால், அது ஒரு சுற்றுலா இடமாக அல்லாமல் ஒரு மாபெரும் வழிபாட்டு ஸ்தலமாக ஆகியிருக்கும்!

இந்தக் கலாசாரப் பின்னணியில் பார்க்கும் போது, சமஸ்கிருதம், இந்தோ-ஜெர்மானிய மொழிகளின் பிரிவில் அடங்கிய ஒரு மொழியா என்பது ஒரு நியாயமானக் கேள்வியாகப் படுகிறது.



Sunday, July 22, 2012

மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ்

 


வணக்கம்
மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ் தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழாக வெளியாகிறது.
சிறப்புப் பகுதியில் கி.நாச்சிமுத்து,கோ.விசயவேணுகோபால், செ.வை.சண்முகம், வா.செ.குழந்தைசாமி,இரா.கோதண்டராமன், வீ.அரசு,பெ.மாதையன்,இந்திரா பார்த்தசாரதி , செ.ரவீந்திரன் உள்ளிட்ட பதினேழு பேர் அது குறித்து எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
ஷார்ல் போதலேரின் கவிதைகள்
பாகிஸ்தான் எழுத்தாளர் சபின் சாவேரி ஜிலானி , தேன்மொழி, ரவிக்குமார், ஆகியோரின் சிறுகதைகள்
பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் குறித்து விசயவேணுகோபால், எடக்கல் , சமணர் மலை கல்வெட்டுகள் குறித்து ராசவேலு கட்டுரைகள்
சங்க காலத்தில் கல்வி குறித்த க.ப.அறவாணனின் கட்டுரை
இ.அண்ணாமலை அவர்களின் நேர்காணல்

புகழ்பெற்ற பெண்ணியக் கோட்பாட்டாளர் லூஸி இரிகாரே வின் ' நமது உதடுகள் ஒன்றாகப் பேசும்போது ' என்ற கட்டுரை
ஈழம் தொடர்பான இரண்டு நூல்கள் குறித்து எம்.எஸ்.எஸ் .பாண்டியன் , துவாரகன் ஆகியோரின் கட்டுரைகள்
120 பக்கங்கள் விலை 60 ரூபாய் .

பிரதி வேண்டுவோர் manarkeni@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

Thursday, June 7, 2012

செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் இன்று




செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் இன்று
கலந்தாய்வரங்கம் 
10.06.2012
ஞாயிறு காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை 
கருத்தரங்கக் கூடம் , பாண்டிச்சேரிப் பல்கலைக் கழக விருந்தினர் மாளிகை 
பாண்டிச்சேரி 

 வணக்கம் 
எதிர்வரும்  10.06.2012 ஞாயிறு அன்று காலை பத்து மணி முதல் மாலை ஐந்து வரை '' செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் இன்று '' என்ற தலைப்பில் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்திருக்கிறேன். மணற்கேணி இதழ் 11 இல் வெளியான கட்டுரைகளில் செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் தொடர்பாக பேராசிரியர்  இ.அண்ணாமலை மற்றும்  , ஷெல்டன் போல்லாக் ஆகியோர் முன்வைத்திருக்கும்   கருத்துகளை மேலும் விவாதிக்கவும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த் துறைகளில் நடைபெற்றுவரும் தமிழ்ச் செவ்வியல் இலக்கிய ஆய்வுகளை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறியவும், முந்தைய தலைமுறைத் தமிழ் அறிஞர்களின் அறிவு வளங்களை இன்றையத் தலைமுறை ஆய்வாளர்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்கான வழிவகைகளைக் கண்டறியவும் தான் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. . 
இதில் பேராசிரியர்கள் கி.நாச்சிமுத்து(டெல்லி  )  , சோ.ந.கந்தசாமி(தஞ்சை ), செ.வை.சண்முகம்(சிதம்பரம் ) , பெ.மாதையன்(சேலம் ) , து.மூர்த்தி (அலிகார் ) வீ.அரசு(சென்னை ), மதிவாணன் (திருச்சி ) ஜெயராமன்(வேலூர் ), விஜயவேணு கோபால்(புதுச்சேரி ) , ஆர்.கோதண்டராமன்(சென்னை ) , இ.சுந்தரமூர்த்தி (சென்னை ) ஆ.கார்த்திகேயன் (தஞ்சை ) ,உதயசூரியன்(தஞ்சை ) , கா.ராஜன்(புதுவை ), பெருமாள் முருகன்( நாமக்கல் ) ,ஜெய்கணேஷ்(சென்னை ) புதுச்சேரியைச்  சேர்ந்த  ,பக்தவத்சல பாரதி , இரா.சம்பத், பழனிவேலு, கே.ஏ.குணசேகரன், திருநாகலிங்கம், க.பஞ்சாங்கம், அறிவுநம்பி,சி.காந்தி(திருச்சி ),குணசேகரன்(கும்பகோணம் ) பொ.வேல்சாமி (நாமக்கல் )  உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் மற்றும் சென்னை, புதுவை பகுதிகளைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் பங்கேற்கின்றனர்.  நிகழ்ச்சி முழுவதையும் வீடியோ செய்து அதை இணையத்தில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தில்  முன்வைக்கப்படும் கருத்துகளைத் தொகுத்து கல்லூரிகள் /பல்கலைக்கழகங்களில் இருக்கும் தமிழ்த் துறைத் தலைவர்களோடு விவாதிக்கலாமென முடிவுசெய்யப்பட்டுள்ளது. 
செவ்வியல் இலக்கிய ஆய்வு மாணவர்கள் பயன்பெறவேண்டும் என்பதே இதன் முதன்மையான நோக்கமாகும். 
மணற்கேணி இதழ் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சிக்குத் தங்களின் ஆதரவை நாடுகிறேன். இந்த நிகழ்வில் தாங்களும்  கலந்துகொள்ள இயலுமெனில் மகிழ்வேன். தங்களது நண்பர்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவியுங்கள். 
அன்புடன் 
ரவிக்குமார் 
ஆசிரியர் ,மணற்கேணி 

Saturday, March 31, 2012

‘‘எதிரியை நேசிப்பது தேவதைகளின் பணி, மனிதர்களுடையதல்ல’’








தலையங்கம்:




‘‘ நான் பழிவாங்குவதைப் பற்றியும் பேசவில்லை மன்னிப்பதைப் பற்றியும் பேசவில்லை : ஒரே பழிவாங்கல், ஒரே மன்னித்தல் , மறப்பது மட்டும்தான்’’ என்றார் ஜோர்ஜ் லூய் போர்ஹே. மறதி என்பது மன்னிப்பின் ஒரு வடிவமாக இருக்கலாம் ஆனால் அது எப்படி பழிவாங்கலாக இருக்க முடியும் ? ‘பாதிக்கப்பட்டவர்களின் போராட்டங்கள் யாவும் ஒரு வகையில் மறதிக்கு எதிரான ஞாபகங்களின் போராட்டங்களாகவே‘ இருக்கும்போது நாம் எப்படி மறதியைப் பழிவாங்கலின் வடிவமாகக் கொள்ளமுடியும் ? போர்ஹே அடுத்த வரியிலேயே இப்படிச் சொன்னார் : ‘‘உங்கள் எதிரியை ஆசீர்வதித்தல் என்பது நன்னடத்தையை எடுத்துக்காட்டுவதாக இருக்கலாம் அதில் சிரமம் எதுவும் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் எதிரியை நேசிப்பது தேவதைகளின் பணி, மனிதர்களுடையதல்ல’’. மிகப்பெரிய அழித்தொழிப்பை எதிர்கொண்டு இன்னும் அதிலிருந்து மீண்டுவர முடியாமல் தவிக்கும் ஈழத் தமிழர்கள் எதை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள் எதை மறந்தார்கள் என்று தெரியவில்லை.

எல்லாமே பண்டங்களாய் சீரழிக்கப்படும் இன்றைய உலகமயமாதல் சூழலில், வெறுப்பை ராஜதந்திர ரீதியிலான மொழிக்குள் மறைத்துக்கொண்டு அரசியல் விளையாட்டுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது சர்வதேச சமூகம். அதன் பரிவர்த்தனையில் மனித உயிர்கள் எண்களாகக்கூடக் கருதப்படுவது இல்லை. பியர் பூர்தியூ எடுத்துக் காட்டியதைப்போல ‘‘ சமூகத்திலிருந்து விலக்கப்பட்ட,  வரலாற்று நீக்கம் செய்யப்பட்ட கோட்பாடு முன் எப்போதைவிடவும் தன்னை உண்மையானதாக இன்று முன்வைத்து வருகிறது.  தாராளவாதக் கதையாடல் என்பது பல்வேறு கதையாடல்களுள் ஒன்று அல்ல.  மாறாக அது வலிமையான கதையாடல்.  மனநோய் விடுதியில் உளவியல் கதையாடல்போல.  அது வலிமையானதாகவும் வெல்லமுடியாததாகவும் இருக்கிறது.  ஏனெனில் உலகில் உள்ள அனைத்துவிதமான உறவுகளையும் அது தனக்கு சார்பாக வைத்திருக்கிறது.  பொருளாதார உறவுகளை மேலாதிக்கம் செய்கிறவர்களின் பொருளாதார விருப்பங்களை இயைபு படுத்துவதன்மூலம் இதை அது சாதிக்கிறது.  அதன்மூலம் இந்த சக்திகளின் உறவுகளில் தனது குறியீட்டு அதிகாரத்தை அது இணைக்கிறது’’.

ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குப்பிறகு சிறிய அளவிலாவது தமிழ் மக்கள்மீதான அடக்குமுறை குறையும் என்று நினைத்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தத் தீர்மானம் உண்மையில் ஈழத் தமிழர்களுக்கு உதவுமா? என்று ஆராய்ந்து பார்த்தால் நம்பிக்கையாக எதையும் சொல்லமுடியவில்லை. இலங்கை அரசு அரங்கேற்றிய கண்துடைப்பு நாடகத்தின் ஒரு அங்கமாய் இருக்கின்ற ‘‘நல்லிணக்கக் குழு ( லிலிஸிசி )  தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் பரிந்துரைகளை நிறைவேற்றவேண்டும்’’ என்பதுதான் அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தின் முக்கியமான பகுதி. இது நமக்கு எவ்வித நம்பிக்கையையும் தரவில்லை. இந்தத் தீர்மானம், ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனையை சர்வதேச கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறது. அதுமட்டுமின்றி இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருக்கின்றன எனவும் அந்தத் தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.அவ்வளவுதான்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் கூடிய ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தின்போது நிச்சயம் இலங்கை அரசின் போர்க் குற்றங்களை உலக நாடுகள் கண்டிக்கும், அவற்றை விசாரிக்க சுயேச்சையான விசாரனைக்குழு நியமிக்கப்படும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தனர். அப்படி எதுவும் நடக்கவில்லை.அன்று அமெரிக்கா அந்தக் கவுன்சிலில் உறுப்பினராக இல்லை. ஆனல் அமெரிக்காவின் ஆதரவு நாடுகள் இலங்கையை ஆதரித்தன. கியூபா இன்னும் ஒரு படி மேலே சென்று இலங்கையைப் பாராட்டவும் செய்தது.இந்தியாவின் ஆலோசனைப்படிதான் கியூபா அவ்வாறு நடந்துகொண்டது  இந்தமுறையும் அதே மாதிரிதான் நடக்கும் எனப் பலரும் எண்ணிவந்த நேரத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பனிப்போர் நாட்களின்போது அமெரிக்காவின் எதிர்முகாமைச் சேர்ந்ததாக இருந்த இந்தியா இப்போது அமெரிக்காவின் நேச நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது. எனவே அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால், தீர்மானம் வாக்கெடுப்புக்கு வருவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு வரை இந்தியா தனது நிலையைத் தெளிவுபடுத்தவில்லை. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் யாவும் ஒரே குரலில் வலியுறுத்தியதாலும், உத்தரப் பிரதேசத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தனது கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லவேண்டிய நிலையில் காங்கிரஸ் இருப்பதாலும் கடைசியில் தனது நிலையை அது மாற்றிக்கொண்டது. அப்போதும்கூட இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தில் சில திருத்தங்களைச் செய்ய இந்தியா காரணமாக இருந்திருக்கிறது.

பிம்பங்களின் யுகம் என வர்ணிக்கப்படும் இன்றைய சூழலில் அழிவும் துயரமும்கூட பிம்பங்களாய் மாற்றப்பட்டு நுகர்பொருளாக்கப்படுகின்றன. அப்படித்தான் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் காட்சிகள் ஊடகங்களில் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன.ஆதாரங்கள் என்ற விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் இந்தக் காட்சிகள் இன்னொரு பக்கம் நம்மை இந்த வன்முறைக்குத் தகவமைக்கவும் செய்கின்றன.எனவே, இதுபற்றிய விழிப்புணர்வு தமிழ் மக்களுக்குத் தேவை.

இன்றைய உலகச்சூழலில் ‘மன்னித்தல்‘ என்ற சொல் பெற்றிருக்கும் அரசியல் பரிமாணத்தை ழாக் தெரிதா தனது உரை ஒன்றில் சுட்டிக்காட்டுகிறார் ( சிஷீsனீஷீஜீஷீறீவீtணீஸீவீsனீ ணீஸீபீ திஷீக்ஷீரீவீஸ்மீஸீமீss ). ‘‘மன்னித்தல் என்பது ‘குற்றமிழைத்தவர்‘ ‘ பாதிக்கப்பட்டவர்‘ என்ற இரு தனித்துவங்களைக் கையாள்கிறது.அதில் மூன்றாம் தரப்பு நுழையும்போது பொது மன்னிப்பு, நல்லிணக்கம்,செப்பனிடல் முதலானவற்றைப் பற்றிய பேச்சு ஆரம்பித்துவிடுகிறது’’ என்கிறார் தெரிதா. ஈழப்பிரச்சனையில் சர்வதேச சமூகம்தான் இப்போது மூன்றாம் தரப்பாக இருக்கிறது. நல்லிணக்கத்தை உருவாக்குவது என்ற பெயரால் சிறுபான்மையினத்தவரை அடிமையாகவே இருங்கள் என்று அது சொல்ல முயற்சிக்கிறது. இதுகுறித்தும் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்.



ரவிக்குமார் 
ஆசிரியர் , மணற்கேணி








Monday, March 19, 2012

மணற்கேணி ஆய்வரங்கம்





வணக்கம் 
மணற்கேணி இலக்கிய இருமாத இதழ் துவக்கப்பட்டு இதுவரை பத்து இதழ்கள் வெளிவந்துள்ளன. செவ்வியல் இலக்கியம், தொல்லியல், மொழியியல், வரலாறு , சமகால இலக்கியம் எனப் பல்வேறு தளங்களிலும் ஆய்வுக் கட்டுரைகளை மணற்கேணி வெளியிட்டிருக்கிறது. 
சிறுகதை, கவிதைகள், விமர்சனம் என சமகாலப் அபடைப்பிலக்கிய முயற்சிகளுக்கும் உரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 
ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கும், படைப்புகளுக்கும் முக்கியத்துவம் தந்து பல ஆக்கங்களை மணற்கேணி வெளியிட்டிருக்கிறது. 
அண்டை நாடுகளான, இலங்கை, பாகிஸ்தான் முதலானவற்றைச் சேர்ந்த படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. 
பெண்களின் படைப்புகளுக்கென 'ஆயம் ' என்ற சிறப்புப் பகுதி உருவாக்கப்பட்டு பிரத்யேகமாகத் தொடர்புகொண்டு பெறப்பட்ட படைப்புகள் வெளியிடப்பட்டுவருகின்றன. 
தமிழ்த் துறையைச் சேர்ந்தவர்களால் ஆய்விதழ் என அங்கீகரிக்கப்பட்டிருக்கும் மணற்கேணி தனது உள்ளடக்கத்தை சீராய்வு செய்து மேலும் சிறப்பாகப் பணியாற்றும் நோக்கத்தில் இந்த ஆய்வரங்கை ஏற்பாடு செய்திருக்கிறது. 
உங்களது பங்கேற்பையும் மனம் திறந்த விமர்சனங்களையும் மணற்கேணி வரவேற்கிறது. 
அன்புடன் 
ரவிக்குமார் 
ஆசிரியர், மணற்கேணி  

Tuesday, January 31, 2012

சம்மதம் - சோனியா கமால்




 சிறிய வேன் ஒன்றை மாற்றி அமைத்து உருவாக்கப்பட்டிருந்த கிளினிக் அது. ஒரு காலத்தில் வெண்ணிறமாக இருந்த அதன் சுவர்கள் இப்போது பழுப்பாக, தண்ணீர் ஒழுகிக் காணப்பட்டன. டாக்டரின் மேசையில் பாண்டோல் விளம்பரக் காலண்டர் ஒன்றும், ஒரு மேசை விளக்கும், ஒரு தொலைபேசியும் மட்டுந்தான் இருந்தன. புதைகுழி ஒன்றிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் கைகளைப்போல படுக்கையின் கால்கள் தரையிலிருந்து நீட்டிக்கொண்டிருந்தன. படுக்கை விரிப்புகளிலிருந்து மட்கிப்போன நாற்றம் அடித்தது. படுக்கைக்கு மேலே ஒரு கடிகாரம் மாட்டப்பட்டிருந்தது. டிக் டாக் டிக் டாக். நொடியைக் காட்டும் நீளமான கை பாம்பைப்போல வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. மலிஹாவும் அவளது தோழியும் ’வெய்ட்டிங் ரூமாக’ பயன்பட்டுவந்த  இடத்தில் போடப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். 
ஒருமணி நேரம் தாமதமாகத்தான் அந்த பெண் டாக்டர் வந்தார். அதற்காக எந்தவொரு வருத்தமும் அவரிடம் தெரியவில்லை. ஹென்னா போட்டு ஆரஞ்சு நிறமாக மாற்றப்பட்டிருந்த அவரது தலைமுடி ஒழுங்காக வாரப்படாமலிருந்தது. அவர் தனது கைகளை அவர்களை நோக்கி ஆட்டினார். நீளமான நகங்களைக்கொண்ட கைகள், சிவப்பு நகச்சாயம் உரிந்திருந்தது, தனது  ராச்சியத்தில் ஒரு மகாராணியைப்போல அவர் அமர்ந்திருந்தார், அந்த இருக்கைக்கு முன்னால் வருமாறு அவர்களை அழைத்தார். 
” உனக்குத் திருமணம் ஆயிடுச்சா? “ டாக்டர் கேட்டார். 
ஓ யெஸ் ! தனது விரலில் இறுக்கமாக அணிந்திருந்த திருமண மோதிரத்தை டாக்டரிடம் காட்டியபடி மலிஹா பதில் சொன்னாள். 
“ திருமணம் ஆகி எவ்வளவு நாள் ஆகுது?” 
“இரண்டு வருடங்கள் “
“உன் கணவர் எங்கே ?”
“வேலைக்குப் போயிருக்கிறார்”
“நீ இங்கே வந்திருப்பது அவருக்குத் தெரியுமா?”
” ம் “
“ உன்னோடு வந்திருப்பது உன் நாத்தனாரா?”
“ ம்ஹூம் ,இல்லை”
“ஏன் அவர் வரவில்லை?”
“எனக்கு நாத்தனார் யாரும் இல்லை”
“ அப்படீன்னா உன் மாமியார் எங்கே? உனக்கு மாமியார் இருந்துதானே ஆகணும்?”
“எனக்கு மாமியாரும் இல்லை”
“செத்துப்போய்விட்டார்” மலிஹாவின் தோழி இடைமறித்துச் சொன்னாள், “ அவர் செத்துப்போய்விட்டார்”
“ என்னுடைய ஃபீஸை முதலிலேயே கொடுத்துவிடவேண்டும் தெரியுமில்லையா? டாக்டர் கேட்டார். 
”தெரியும்”
“எவ்வளவு நேரம் ஆகும்?” மலிஹா கேட்டாள்.
“ஐந்தே நிமிடங்கள்தான்”
“ஐந்து நிமிடம்தான் என்றால் சமாளித்துவிடலாம்” மலிஹா தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
வேலை தொடங்கியது. மலிஹாவின் கால்கள் விரிக்கப்பட்டன. அவளது தலைக்கருகில் நின்றபடி அழுக்கடைந்த உபகரணங்களை தாதி எடுத்து டாகடரிடம் தந்துகொண்டிருந்தாள்.மலிஹாவின் தோழி அவலது கைகளைப் பிடித்துக்கொண்டாள்.பின்னாளில் மலிஹாவின் நகங்கள் அழுந்திய இடங்களில் சிவப்புத் தடயங்கள் இருந்ததை மலிஹா பார்த்தாள் என்றபோதிலும் அவளது தோழி அதுபற்றி ஒருநாளும் புகார் சொன்னதில்லை.   
மயக்க மருந்து எதுவும் இல்லை. அந்த இடுக்கி மலிஹாவை இரண்டாகப் பிளந்தது. சக்‌ஷன் உபகரணம் அவளுக்கு உள்ளே இருந்தவற்றையெல்லாம் உறிஞ்சி எடுத்தது. அவள் தனது சிறு பிராயத்தை நினைத்துக்கொண்டாள். முட்டியில் பட்ட சிராய்ப்பில் அயோடினை வைத்தது நினைவுக்கு வந்தது. எரிச்சல் தரும் குமட்டலெடுக்க வைக்கும் கரைசலுக்குள் நழுவவிடப்பட்ட உடம்பு முழுக்க சிராய்ப்பாக மாறிவிட்ட ஒரு பிண்டமாகத் தன்னை உணர்ந்தாள். 
மலிஹா அந்த கடிகாரத்தை வெறித்தாள். ஐந்து நிமிடம் ஆகி நெடுநேரம் கடந்திருந்தது. அவள் ஒரு விரல் ந்நிளமே இருந்த அந்த உயிரியைப்பார்த்து  ஒரு நிமிடத்தில் லட்சம் தரம் ’சாரி” சொல்லிக்கொண்டாள் .அவள் கத்துகிறாளா என்று பார்ப்பதுபோல் டாக்டர் அவளைக் கிள்ளிப் பார்த்தார். அவளது கால்களில் அறைந்தார். 
”ஷட் அப்” மலிஹாவின் கால்களுக்கிடையிலிருந்து டாக்டர் சொன்னார், “ஷட் அப்”
அதற்கு முக்கால் மணிநேரம் பிடித்தது.  ஏதாவது இன்ஃபெக்‌ஷன் ஆகிவிடுமோ அல்லது ரத்தப் பெருக்கு நிற்காமல் செத்துப்போய்விடுவோமோ என்று பயந்தபடி மலிஹா வீட்டுக்குப் புறப்பட்டாள். எது நடந்தாலும் அதை வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் மறைப்பது எப்படி என்று அஞ்சினாள். இப்படியொரு காரியத்தை எந்தவொரு நல்ல பெண்ணும் செய்யமாட்டாள். எல்லாம் முடிந்தது மலிஹா தனது விரலில் அணிந்திருந்த தனது தோழியின் திருமண மோதிரத்தை அவளிடம் திருப்பிக் கொடுத்தாள்.
 பத்து வருடங்கள் ஓடிவிட்டன. மலிஹாவின் சகோதரி .திரும்ணம் ஆனவள். ஏழு குழந்தைகள். அவளுக்குப் பிடித்தமான நம்பர் ஏழுதான். மறுபடியும் கர்ப்பமாகிவிட்டாள். அவளுக்கு ஆப்பரேஷன் செய்வதென முடிவு செய்யப்பட்டது. மலிஹாவும் அவளது அம்மாவும் அவளை ஒரு கிளினிக்குக்கு அழைத்துச் சென்றனர். பளபளப்பான பச்சைநிற வராந்தாவும் வெள்ளை மார்பிளும் பதிக்கப்பட்ட கிளினிக். ஒரு விஐபி அறையில் வசதிக்கேற்ப அட்ஜஸ்ட் செய்யும் வசதிகொண்ட ஒரு படுக்கையில் அவள் படுக்க வைக்கப்பட்டாள். 
அழகான தலைமுடியை கொண்டையாகப் போட்டிருந்த டாக்டர் வந்தார். 
” குட் மார்னிங்! பேஷ்ண்ட் இப்போ எப்படி இருக்கிறாள்?” டாக்டர் கேட்டார்.
“ஃபைன்” என்றாள் மலிஹாவின் சகோதரி. அவள் விரலில் அணிந்திருந்த வைரம் பதித்த திருமண மோதிரம் சூரிய கிரணங்களோடு போட்டிப் போட்டுக்கொண்டிருந்தது. 
” சீக்கிரம் முடியவேண்டும் என்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றாள் அம்மா. 
பதினைந்து நிமிடங்களில் எல்லாம் முடிந்தது. அனஸ்தீஸியா கொடுத்திருந்ததில் மலிஹாவின் சகோதரி கொஞ்சம் சோர்வாயிருந்தாள் ஆனால் ஒரு ரோஜாப்பூவைப் போல அவள் மணந்துகொண்டிருந்தாள். 
திருமணம் செய்யாத அம்மாக்களை சமூகம் பாடாய்ப்படுத்துகிறது ஆனால் திருமணம் செய்துகொண்டிருந்தால் அப்பர்ஷனை கருத்தடைக்கான வழிமுறையாகப் பார்க்கிறது. அதற்கு சம்மதிக்கிறது. 
( மணற்கேணி ௧௦ ஆவது இதழின் சிறப்புப் பகுதியில் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தான் எழுத்தாளர் சோனியா கமாலின்  சிறுகதை . தமிழில் :ரவிக்குமார் 

Monday, January 30, 2012

‘கூகுளைசேஷன்’’ என்ற அபாயம்







மணற்கேணி ( இதழ் எண் 10 , பிப்ரவரி 2012 ) இதழில் வெளியாகியிருக்கும் தலையங்கம் 



டெல்லி உயர்நீதிமன்றம் இப்போது ஃபேஸ்புக், கூகுள், ஆர்குட்,யு ட்யூப் உள்ளிட்ட இருபத்தொரு சமூக வலைத்தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அவற்றில் ஆட்சேபகரமான விஷயங்கள் பதிவிடப்பட்டிருந்ததாக வினய் ராய் என்பவர் செய்த  புகாரை அடுத்தே இந்த நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்திருக்கிறது.  மத உணர்வுகளைப் புண்படுத்தும் விஷயங்களை இவை பரப்புகின்றன என்று சொல்கிறார்கள் சிலர், பாலியல் உணர்வுகளைத் தூண்டி இளைய தலைமுறையைக் கெடுக்கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர் சிலர். சீனாவில் இருப்பதைப்போல இவற்றைத் தடை செய்யலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.ஆனால் இன்று நாம் கூகுள் இல்லாத ஒரு வாழ்க்கையை எண்ணிப்பார்க்கவே அஞ்சுகிற ஒரு நிலைக்கு வந்திருக்கிறோம்.

குளோபலைசேஷன் - உலகமயமாதல் -  குறித்த கவலைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும் போலிருக்கிறது ‘கூகுளைசேஷன்’ குறித்த அச்சுறுத்தல். இணையத்தோடு இணைக்கப்பட்ட எவராலும் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாக  மாறிவிட்டது, கூகுள். ’உலகளாவிய தகவல்களைச் சேகரித்து அதை எவரும் அணுகவும் பயன்படுத்தவும் ஏதுவாக ஆக்குவது’ என்பதுதான் கூகுளின் லட்சியம் என்று சொல்லப்பட்டது. இன்று நாம் எதைத் தேடவேண்டுமானாலும் செல்வது கூகுளிடம்தான். இன்னும் சில காலத்தில் உலகத்திலிருக்கும் அத்தனை மொழிகளிலும் வெளியிடப்படுகிற அத்தனை நூல்களும் கூகுளில் இருக்கும். இப்போதே அதில் ஏற்றப்பட்டிருக்கும் நூல்களின் எண்ணிக்கையைக் கேட்டால் நமக்குத் தலை சுற்றும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு நொடியும் அதில் சுமார் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ கிளிப்புகள் ஏற்றப்படுகின்றன என்கிறார்கள். கூகுளுக்கு வணிக நிறுவனங்களின் விவரங்கள் தெரியும், சமய நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் , உணவகங்கள் என எல்லா விவரங்களும் அதன்வசம் இருக்கின்றன. இன்னும் சில காலத்தில் உலகின் அத்தனை தெருக்களின் புகைப்படமும் கூகுளிடம் இருக்கும். அதாவது உலகையே கண்காணிக்ககூடிய சக்தியை அது பெற்றுவிடும். பூமியைமட்டுமல்ல பிரபஞ்சத்தையே கண்காணிக்கும் சக்தியாக அது உருவெடுத்தாலும் வியப்பதற்கில்லை.

நம் கையில் ஒரு உயர்ரக மொபைல் போன் இருந்தால், அதில் நாம் கூகுள் லொகேஷன் சர்வீஸை ஆன் செய்திருந்தால் போதும் நாம் எங்கிருக்கிறோம் எங்கு போகிறோம் என்பது அதற்குத் தெரிந்துவிடும். நீங்கள் கூகுள் மின்னஞ்சல் வசதியைப் பயன்படுத்துகிறவரா உங்களது மின்னஞ்சல் முழுவதையும் அது படித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதை விளம்பர நோக்கத்துக்காகத்தான் செய்கிறோமென அது சொன்னாலும் அதை நம்புவதற்கு எவரும் தயாராக இல்லை.   நீங்கள் யாரோடு அதிகம் தொடர்புகொள்கிறீர்கள் என்பதையும் அது வரிசைப்படுத்தி வைத்திருக்கிறது. இப்படியே போனால் நாம் சொல்லாமலேயே நமது சமையலறையில் இருப்பதையும் , நாம் உடற்பயிற்சி செய்யும்போது நமது இதயத் துடிப்பு எவ்வளவு என்பதையும், நமது சுற்றுப்புறத்தில் இருக்கும் சீதோஷ்ண நிலை என்னவென்பதையும் அது சொல்லிவிடும். 

கூகுளைப் பற்றி ஏராளமான புகார்கள் சொல்லப்படுகின்றன. அது நமது அந்தரங்கத்தில் தலையிட்டு வேவு பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்துவிட்டது. நாம் கூகுளைப் பயன்படுத்தும்போது நாம் எதைத் தேடினோம், எதைப் படித்தோம் என்ற விவரங்கள் யாவும் ‘குக்கீஸ்’எனப்படும் பகுதியில் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை கூகுள் மட்டுமல்ல யாஹூ போன்ற பிற நிறுவனங்களும்கூடப் பல மாதங்களுக்குப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்ட இந்த நிறுவனங்கள் அமெரிக்காவின் பாதுகாப்புச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே அவை திரட்டுகிற அத்தனை தகவல்களும் அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்களிடம் கையளிக்கப்படும் ஆபத்து எப்போதும் இருக்கிறது என்று சிலர் ஏற்கனவே பீதி கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள். புத்தகங்களை இணையத்தில் ஏற்றுவதன்மூலம் எழுத்தாளர்களின் காப்புரிமையை கூகுள் பறிக்கிறது என்ற பிரச்சனை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அது இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. 

கூகுள் நிறுவனம் துவக்க நிலையிலேயே வெற்றிகரமாக ஒரு காரியத்தைச் செய்தது. தான் சேகரித்த விவரங்களை அது தர வரிசைப்படுத்தியது. ‘பேஜ் ரேங்க்கிங்’ என்று குறிக்கப்படும் அந்த நடவடிக்கையால்தான் நாம் ஒரு விஷயத்தைத் தேடும்போது ஒருசில பக்கங்கள் முதலில் வருகின்றன. இந்தத் தரவரிசை செயல்பாட்டில் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற புகார் கூகுள் மீது சொல்லப்படுகிறது. இதனால் முதலில் வரும் சில பக்கங்களை மட்டும்தான் நாம் முக்கியமாகக் கருதுகிறோம், அந்தப் பக்கங்களில் உள்ள தகவல்களையே சார்ந்திருக்கிறோம். காலப்போக்கில் பல இணைய தளங்கள் இதனால் பார்ப்போர் எவருமின்றி அழிந்துபோக நேரிடும் என்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இந்தத் தகவல்களையெல்லாம் கேட்கும்போது, ’இணையம்’ என்ற  மாயவலையிலிருந்து நாம் தப்பிக்கவே முடியாதா என்ற கேள்வி எழலாம். இந்தியக் குடிமக்கள் எல்லோரும் இணைய வசதி பெற்றவர்களாகவா இருக்கிறார்கள் என்றும் சிலர் கேட்கக்கூடும். இன்று இந்தியாவில் இருக்கும் மொபைல் போன்களின் எண்ணிக்கையைப் பற்றி நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் கற்பனைகூடச் செய்திருக்கமாட்டோம். அதுபோலத்தான் இணையமும் நம்மைச் சுற்றி வளைத்துக்கொண்டிருக்கிறது. அது முழுதாக நம்மை விழுங்குவதற்கு முன்னால் அதைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம். அப்போதுதான் ’கூகுளைசேஷன்’ என்பதன் ஆபத்து நமக்குப் புரியும். 
 
                                                                                                                                               ரவிக்குமார் 
ஆசிரியர் , மணற்கேணி