Friday, July 29, 2011

’வேஷப் பிராமணரும்’ ’தமிழ் பிராமணரும்’ : எதிர்வினை 2 - தமிழறிஞர் வி.எஸ் .ராஜம்

அன்பின் ரவிக்குமார்,
திரு ராஜ் கௌதமனின் நூலை நான் படித்ததில்லை. இனிப் படிக்கவும் வாய்ப்பும் நேரமும் கிடைக்காது -- உடல் நலக் குறைவைச் சரிசெய்யவும் ஏற்கனவே மேற்கொண்ட இலக்கண ஆராய்ச்சிக்கும் நேரம் தேவை. ஆனால் இங்கே அவர் கூறியதாக எடுத்துச் சொல்லப்பட்ட கருத்து அவ்வளவு பொருந்துவதாக இல்லை என்று தோன்றியதால் இந்தப் பதிவு. இதற்குமேல் அடிக்கடிப் பங்குகொள்ள இயலாத நிலை. அன்புடன் பொறுத்துக்கொள்ளவேண்டும். பிறவற்றைத் தனிமடலில் எழுதுகிறேன்.

ராஜ் கௌதமன் கூறியுள்ள ஒரு கருத்தை இத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும், “ சங்க காலத்தில் பிராமணர்கள் தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தார்கள்.’பார்ப்பனச் சேரி’ என இவர்கள் மட்டும் வாழ்ந்த இடம் சுட்டப்பட்டது.வீட்டில் சமஸ்கிருதமும் வெளியே தமிழும் பேசினார்கள்.

இதுபற்றி என்னுள் எழுந்த கேள்விகள்:
--------------------------------------------
1. "சங்க காலம்" என்பதை ராஜ் கௌதமன் எப்படி வரையறுக்கிறார்? அதாவது அவர் கருத்துப்படி, எந்த நூற்றாண்டிலிருந்து எந்த நூற்றாண்டு வரை "சங்க காலம்"?
2. "சங்க காலம்" பற்றிக் கருத்துக்கள் சொல்ல எந்த வகை ஆவணங்களை இவர் பயன்படுத்துகிறார்? கல்வெட்டுகளா? இலக்கியமா? எந்தக் கல்வெட்டுகள்? எந்த இலக்கியங்கள்?
3. "சங்க காலத்தில் பிராமணர்கள் தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தார்கள்" என்பதற்கு இவர் காட்டும் சான்று என்ன?
4. " 'பார்ப்பனச் சேரி’ என இவர்கள் மட்டும் வாழ்ந்த இடம் சுட்டப்பட்டது." -- இந்தக் குறிப்பைச் சங்க இலக்கியங்களில் எங்கே பார்க்கலாம்?
5. "வீட்டில் சமஸ்கிருதமும் வெளியே தமிழும் பேசினார்கள்" -- இதற்குச் சங்க இலக்கியங்களில் என்ன சான்று இருக்கிறது?
இந்தக் கேள்விகளுக்குத் துல்லியமான விடைகள் கிடைத்தால் நன்றியுடன் மகிழ்வேன்.
எனக்குத் தெரிந்த அளவில்...
---------------------------------
6. "சேரி" என்ற நல்ல தமிழ்ச்சொல்லின் பொருள் பிற்காலத்தில் பிறழ்ந்து உணரப்பட்டிருக்கிறது -- 'சேரி  என்பது தாழ்த்தப்பட்டவர் வாழும் இடம்' என்று. 

7. முதன் முதலாக, தொல்காப்பியச் சொல்லதிகார இளம்பூரணர் உரையில் "பார்ப்பனச் சேரி" என்ற வழக்கு காணப்படுகிறது. (சங்க இலக்கியத்தில் இல்லை.)
இளம்பூரணர் உரை: "சேரி என்பது பலர் இருப்பதுமன். ஆயினும், ஆண்டுச் சில பார்ப்பனக் குடி உளவேல், அதனைப் பார்ப்பனச் சேரி என்பது."
இளம்பூரணர் சங்க காலத்தவர் இல்லை.
அன்புடன்,
ராஜம்

4 comments:

 1. அன்பு ராஜம் அம்மா
  தங்களின் நலம் குறித்து நான் மிகவும் கவலைகொண்டிருந்தேன். உங்கள் மடலைப் பார்த்தது உங்களையே பார்த்தது போல் இருக்கிறது.
  நானும் ராஜ் கௌதமனிடம் இந்த சந்தேகங்களைத் தொலைபேசியில் கேட்டேன். சங்க இலக்கியத்தில் இருக்கிறது பாடல்களின் விவரம் தருகிறேன் என்றார். " எட்டுத் தொகை பத்துப்பாட்டு எனத் தொகுக்கப்பட்ட சங்க இலக்கியத்தில் " என அவர் ஓரிடத்தில் ( பக்கம் 44)குறிப்பிடுகிறார். அந்தப் பிரதிகளைத்தான் நூல் நெடுக மேற்கோள் காட்டுகிறார். "சங்க காலத்தில் பிராமணர்கள் தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தார்கள்" என்பதற்கு ஆதாரம் இருக்கிறது என்றே அவர் தெரிவித்தார். அதே நூலில் ( பக்கம் 315) மீண்டும் அவர் வலியுறுத்துகிறார் :" சங்க காலத்தில் பிராமணக் குடும்பங்கள் தனிச் சேரிகளிலும் ,தனியூர்களிலும் வாழ்ந்தன. நெல்விளையும் வயல்களும் நீர் வளமும் மிக்க பகுதிகளைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தன. வருணப் பார்வையோடு எந்நேரமும் பிறருடன் உறவாடின. பிராமணர்கள் தங்களுக்கென வரையறுக்கப்பட்ட ஊர் ,தெரு ,வீடு , ஆகிய எல்லைகளுக்குள் பிறரை அனுமதித்ததில்லை. சாமான்ய மக்களிடம் வெகுதூரம் எட்ட இருந்தார்கள். பிறர் தங்களை முற்றிலும் அளந்து அறிய இயலாதவாறு இடத்திலும் , கருத்தியல் கவசங்களாலும் தங்களைப் பாதுகாத்துக்கொண்டார்கள் . "
  ராஜ் கௌதமன் கூறுவனவற்றைப் பார்த்தால் அது பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்த நிலைபோலத் தெரிகிறது. அவர் என்ன ஆதாரங்களைக் காட்டுகிறார் என்பதைக் கேட்டுப் பதிவு செய்கிறேன்.
  இளங்கோவன் கருத்து நடுநிலையானதே . அத்தகைய கருத்துகளைப் பல ஆண்டுகளாக நான் பேசி வருகிறேன். அதனால் பலரது நிந்தனைக்கும் ஆளாகியிருக்கிறேன். அது தனிக் கதை.
  பார்ப்பனர் என்பது எப்போது இழி சொல்லாக்கப்பட்டது ? அதன் விவரம் தெரிந்தால் கூறுங்கள்.
  அன்புடன்
  ரவிக்குமார்

  ReplyDelete
 2. ஒரு சிறு சேர்ப்புக் குறிப்பு: "சேரி" என்ற சொல் சங்க இலக்கியமாக நான் கருதும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உண்டு. எடுத்துக்காட்டாக, "நம் சேரியில் போகா முட முதிர் பார்ப்பானை" என்ற தொடர் கலித்தொகையில் உண்டு. சங்க இலக்கியம் தெரிந்த ராஜ் கௌதமனுக்கு இந்தத் தொடர் எங்கே வருகிறது என்றும் தெரிந்திருக்கும்.

  ஆனால், "சேரி" என்பது 'சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர் குடியிருப்பு' என்பது பிற்காலத்துப் புரிதல் என்பது என் கருத்து.
  "பார்ப்பனச் சேரி" என்ற வழக்கு சங்க இலக்கியத்தில் இல்லை. அது 10-ஆம் நூற்றாண்டினராகக் கருதப்படும் இளம்பூரணர் நூலில்தான் முதல் முறையாகக் காணப்படுகிறது; அதுவும் சாதி/இன வேறுபாட்டைக் குறிப்பதற்காக இல்லை.
  துல்லியமான சான்றுகளுடன் ராஜ் கௌதமன் அவர்களின் கருத்துக்களைப் புரிந்துகொள்ள ஆவல்.
  அன்புடன்,
  ராஜம்

  ReplyDelete
 3. ராஜம் அம்மா
  திரு ராஜ் கௌதமன் அவர்களிடம் கேட்டேன். பெரும்பாணாற்றுப்படையில் இடம்பெற்றிருக்கும் கீழ்க் கண்ட வரிகளை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் பல ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

  ''செழுங்கன் றியாத்த சிறுதாட் பந்தர்ப்
  பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
  மனையுறை கோழியடு ஞமலி துன்னாது
  வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் . . . .300

  மறைகாப் பாள ருறைபதிச் சேப்பிற்
  பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ்
  சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல்
  வளைக்கை மகடூஉ வயினறிந் தட்ட
  சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தஞ்
  சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்
  துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
  கஞ்சக நறுமுறி யளை இப் பைந்துணர்
  நெடுமரக் கொக்கின் னறுவடி விதிர்த்த
  தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர் . . . .310௦''
  -ரவிக்குமார்

  ReplyDelete
 4. அன்பின் ரவிக்குமார்,
  இந்த ஆற்றுப்படை இலக்கியப் பகுதிகள் எனக்கு நன்கு தெரிந்தவையே. பிறர் எல்லாருக்கும் எடுத்துக் காட்டியமைக்கு மிகவும் நன்றி!

  "மறைகாப் பாள ருறைபதி" -- ஆற்றுப்படை இலக்கியத்தில் இந்த வரியும் இதைத் தொடர்ந்த வரிகளும் என்ன செய்தியைத் தெரிவிக்கின்றன என்று சற்றுப் பொறுமையாகப் பார்க்கவும்.

  மறைகாப் பாள ருறைபதிச் சேப்பிற்
  பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ்
  சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல்
  வளைக்கை மகடூஉ வயினறிந் தட்ட
  சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தஞ்
  சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்
  துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
  கஞ்சக நறுமுறி யளை இப் பைந்துணர்
  நெடுமரக் கொக்கின் னறுவடி விதிர்த்த
  தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர் . . . .310௦''
  பலவகை இடங்களைப் பற்றிச் சொல்லும் புலவர் "இந்த மாதிரி இடத்தை நீங்கள் அணுகுவீர்கள். அங்கே இந்த மாதிரி உணவைப் பெறுவீர்கள்" என்று மட்டுமே பாணரை ஆற்றுப்படுத்துகிறார். சாதி பற்றிப் பேசவில்லை.
  "... ... ... தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர் " என்று சொன்னார் அந்தப் புலவர். "மறை காப்பாளர் உறை பதி"க்குப் போகாதே என்றா சொன்னார்? அங்கே போனால் இந்த மாதிரி உணவு கிடைக்கும் என்று சொன்னார், இல்லையா? இதில் எங்கே சாதி/இன/மத வேறுபாடு அல்லது காழ்ப்புணர்ச்சி இருக்கு?
  இது மட்டுமன்று. சிறுபாணாற்றுப்படையும் நமக்குச் சில செய்திகள் தருகிறது.

  ஆற்றுப்படைப் புலவர்கள் சொன்னதிலிருந்து தெரிவது: சிறு/பெரும் பாணர்கள் தங்களைப் புரக்கும் மக்களைத் தேடிப் போகும்போது வழியில் தட்டுப்படும் இடங்களும் அந்த இடங்களில் வாழ்ந்த மக்களின் விருந்தோம்பல் முறையும். இதில் எங்கே சாதி/இன/மத வேறுபாடு அல்லது காழ்ப்புணர்ச்சி இருக்கு?
  இன்னொரு கோணத்தில் பார்த்தால் ... குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ... என்று பகுதிகள் அமைத்து, அந்தந்த நிலத்துக்கு உரிய தலைமக்கள், பொது மக்கள் என்று பிரித்தது சரியா?
  விகற்பமாகவே / காழ்ப்புணர்ச்சியுடனேயே எதையும் பார்க்கவேண்டும் என்றால் ... பார்க்கிறவர்கள் பார்க்கட்டும். அது என் தமிழ் ஆய்வுக்குத் தடையாகாது!
  மேலும் சில கருத்துக்கள் சொல்ல விருப்பம். இப்போ இங்கே இரவு 12.11. அடுத்த இரண்டு நாட்கள் வீட்டு வேலை பார்க்கவேண்டும். அதன் பிறகு இணையத்துக்கு வருகிறேன்.
  நல்ல முறையில் தமிழாய்வு தொடரட்டும்!
  "பார்ப்பனச் சேரி" பற்றித் திரு ராஜ் கௌதமன் அவர்களின் கருத்தைத் தெரிந்துகொள்ள ஆவல்.
  மேலும் பல ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
  எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள ஆவல்.

  அன்புடன்,
  ராஜம்

  ReplyDelete