Friday, October 22, 2010

தஞ்சைப் பெரிய கோயில் : ஆயிரம் ஆண்டு ரகசியம் - ரவிக்குமார்








  ‘பெரிய கோயில்‘ என அறியப்படும் தஞ்சை சிவன் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆவதை சிறப்பிக்கும் விதமாகத் தமிழக அரசு விழா ஒன்றை நடத்தி முடித்தியிருக்கிறது. இந்தக் கோயிலைக் கட்டியது யார் என்ற வரலாறு தமிழக மக்களுக்கு வெகுகாலம்வரைத் தெரியாமல் இருந்தது. ‘‘ கிருமிகண்ட சோழன் என்னும் கரிகாலனால் இக்கோயில் கட்டப்பெற்றது என்றும் அவனுக்கிருந்த குட்டநோய் இங்குள்ள சிவகங்கையில் நீராடியதால் நீங்கியது என்றும் பிரகதீஸ்வரர் மகாத்மியம் என்னும் வடமொழிப் புராணமும் , தஞ்சைபுரி மகாத்மியம் என்னும் மராட்டியமொழி நூலும் கூறுகின்றன.ஜி.யு.போப் காடுவெட்டிச் சோழன் என்பான் கட்டினான் என எழுதுகிறார்.’’ .. ‘‘ 1886 ஆம் ஆண்டில் சென்னை அரசாங்கம் ஹூல்ஷ் என்ற ஜெர்மன் அறிஞரைக் கல்வெட்டு ஆய்வாளராக நியமித்தது. இவர் பெரியகோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்து இதனைக் கட்டியவன் மாமன்னன் ராஜராஜனே என முதன்முதலாகக் கூறினார்.’’ (இராஜராஜேச்சரம், பக்கம் 24). இந்தக் கோயிலில் கிடைத்த கல்வெட்டுகளின் மூலமாக இது எந்த ஆண்டில் குடமுழுக்கு செய்யப்பட்டதென்ற விவரமும் தெரியவந்துள்ளது. ‘தென் இந்தியக் கல்வெட்டுகள் & பாகம் இரண்டு’ என்ற நூலில் காணப்படும் அந்தச் செய்தியை பா. வெங்கட்ராமன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆட்சி ஆண்டின் இருநூற்று எழுபத்தைந்தாவது நாளில் குடமுழுக்கு செய்யப்பட்டது என்பதை அந்தக் கல்வெட்டில் ‘‘ யாண்டு இருபத்தைஞ்சாவது, நாள் இருநூற்றெழுபத்தைஞ்சுநாள், உடையார் ஸ்ரீராஜராஜதேவர் ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார் ஸ்ரீ விமானத்துச் செம்பின் ஸ்தூபிதடியில் வைக்கக்குடுத்த செப்புக் குடம் ஒன்று..’ எனப் பொறித்துள்ளனர். ( Rajarajesvaram பக்கம் 76&77)
அருண்மொழியாக அறியப்பட்டு முடிசூட்டியதற்குப்பின் ராஜராஜன் எனப் பெயர்சூட்டிக்கொண்ட முதலாம் ராஜராஜன்  (985 & 1014) இருபத்தேழு ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தான். அதன்பிறகு 1012இல் ராஜேந்திரனுக்கு முடிசூட்டிவிட்டு இரண்டாண்டுகாலம் உயிர்வாழ்ந்து 1014இல் மறைந்தான். ‘தன் பெயராகிய ராஜராஜன் என்பது என்றும் நின்று நிலவவேண்டும்’ என்று எண்ணம் உடையவனாய்த் தலை நகராகிய தஞ்சாவூரில் மாபெரும் கோயில் ஒன்றை எழுப்பித்து அதற்கு ‘இராஜராஜேச்சுரம்’ என்று பெயரிட்டு நாள் வழிபாட்டிற்கும் விழாக்களுக்கும் நிவந்தங்கள் வழங்கிச் சிறப்பித்தான்’ (பிற்காலச் சோழர் சரித்திரம் & பக்கம் 123). காஞ்சிமாநகரில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பெற்ற கயிலாசநாதர் கோயிலின் பேரழகில் ராஜராஜன் பெரிதும் மயங்கி அக்கோயிலைக் ‘ கச்சிப்பேட்டுப் பெரியதளி‘ என்று போற்றி மகிழ்ந்ததாகவும் அக்கோயில் அவனது உள்ளத்தில் ஓர் எழுச்சியைத் தூண்டியதென்றும் அதன் விளைவாகவே தஞ்சையில் பெரிய கோயில் கட்டப்பட்டதென்றும் குடவாயில் பாலசுப்ரமணியன் கூறுகிறார்.( இராஜராஜேச்சரம் பக்கம் 22 ) ஆனால் அவர் தனது கூற்றுக்கு ஆதாரமாக எதையும் காட்டவில்லை.
தஞ்சைப் பெரியகோயில் 793 அடி நீளமும், 397 அடி அகலமும் உடையது. அதில் அமைந்துள்ள நடுவிமானம் 216 அடி உயரம் உள்ளது. அதன் உச்சியில் உள்ள கல் சுமார் எண்பது டன் எடையுள்ளதெனவும், விமானத்தின் மேல் அமைக்கப்பெற்ற செப்புக்குடம் 3083 பலம் எடை உடையது என்றும், அதன் மேல் போடப்பட்டுள்ள பொன் தகடு 2926 1/2 கழஞ்சு கொண்டதென்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். (பிற்காலச் சோழர் வரலாறு பக் 124). குடவாயில் பாலசுப்ரமணியனோ கோயில் விமானத்தின்மேல் உள்ள சாரக்கல் 80 டன் எடையுள்ளது என்பதை மறுக்கிறார். ‘‘ ஸ்ரீ விமானத்தின்மேலுள்ள பந்து போன்ற சிகரக்கல் ஒரே கல் என்றும் அது 80 டன் எடையுடையதென்றும் , தஞ்சைக்குக் வடகிழக்கேயுள்ள சாரப்பள்ளம் என்னும் ஊரிலிருந்து மண்ணால் சாய்வுதளம் ஏற்படுத்தி அதன்வழி இக்கல் யானைகளின் துணையுடன் இழுத்துவரப்பெற்று ஏற்றப்பெற்றதென்றும் சுவையாகக் கூறுவர்.இது உண்மைக்குப் புறம்பான ஒரு கூற்றேயாகும். ஸ்ரீ விமானத்தின்மேலுள்ள சிகரம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பெற்றதாகும். 80 டன் எடை என்பதும் தவறு.’’ என்கிறார் அவர். (இராஜராஜேச்சரம். பக்கம் 477).அந்தக் கல் சுருள் சாய்வுதள அமைப்பின்மூலம் உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கவேண்டும் என அவர் கூறுகிறார். தற்போது பெரிய கோயிலுக்குத் தென்புறம் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுவரை நீண்ட மேடாகக் காட்சியளிப்பது அப்படிச் சுருள் சாய்வுதளம் அமைக்கப்பட்டதற்கான மண் தான் என்பது அவரது கருத்து.
இந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகள் எப்போது துவக்கப்பட்டன என்பதுபற்றி ஆய்வாளர்களிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இது ராஜராஜனின் பத்தொன்பதாவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டிருக்கலாம் என வெங்கட்ராமன் கூறுகிறார். ‘‘ முடிசூட்டிக்கொள்வதற்குமுன்பு வரை அருண்மொழிதேவன் என அறியப்பட்டிருந்த ராஜராஜனுக்கு அவனது பத்தொன்பதாவது ஆட்சியாண்டில்தான் ‘ராஜராஜதேவன்‘ என்ற பட்டப்பெயர் அளிக்கப்பட்டது. அதன்பிறகே அவன் இந்தக் கோயிலைக் கட்ட ஆரம்பித்திருக்கவேண்டும்’‘ என்கிறார் வெங்கட்ராமன் ( Rajarajesvaram பக்கம் 77). இதுவும்கூட அவரது யூகம்தானேதவிர ஆதாரபூர்வமான செய்தியல்ல.
தஞ்சைக் கோயில் ‘ வாஸ்துபுருசமண்டல’ முறைப்படி கட்டப்பட்டிருக்கிறதென்பது ஆர். நாகசாமியின் நம்பிக்கை. இக்கோயிலின் பிரகாரம் 120 மீட்டர் அகலமும் 240 மீடர் நீளமும் கொண்டதாக இருக்கிறது. உபபீடத்துக்கு மேலே இருக்கும் பிரதான விமானத்தின் அடித்தளம் 30 மீட்டர் உள்ளது. இந்த அளவுகள் அதை மெய்ப்பிக்கின்றன என்கிறார் நாகசாமி. (ஞிவீsநீஷீuக்ஷீsமீs ஷீஸீ ஷிவீஸ்ணீ , பக்கம் 173)  
தஞ்சைப் பெரியகோயில் சிவபெருமானுக்காக மட்டுமல்ல ராஜராஜனுக்கும் சேர்த்தே கட்டப்பட்டது என்ற கருத்தை பர்ட்டன் ஸ்டெய்ன் வலியுறுத்துகிறார். தஞ்சைக் கோயிலுக்குத் தனது பெயரையே ராஜராஜன் சூட்டியுள்ளான். அக்கோயிலை அவன் தனது நினைவுக் கோயிலாக ‘பள்ளிப்படையாக’வே கட்டினான் என்பது சோழர்கால வரலாற்றைப் பற்றி ஆராய்ந்த பர்ட்டன் ஸ்டெய்னின் கருத்தாகும்:
‘‘ராஜராஜனின் இறுதிக்காலத்தில்தான் தஞ்சையில் பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. அதன் மூலப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் அவனுடையவையேயாகும். ஒருசில கல்வெட்டுகளே முதலாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கனுடையவை. இராசராசனின் கல்வெட்டுகள் யாவும் அவனது இருபத்தி ஒன்பதாம் ஆட்சி ஆண்டை- அதாவது அவனது கடைசி வருடத்தைச் சேர்ந்தவை. அந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் பார்த்தால் - அதாவது, பெரிய கோயிலைக் கட்டியது, அதற்குப் பணியாட்களை நியமித்தது, நிவந்தங்கள் அளித்தது, கல்வெட்டுகளை செதுக்கியது & அவை மிகவும் குறுகிய காலத்தில் அதுவும் மிகவும் அவசரமாகச் செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது’’ எனக் குறிப்பிடும் பர்ட்டன் ஸ்டெய்ன், அந்தக் கோயில் சைவக்குரவர்களால் பாடல் பெறவில்லை என்பதையும், அதன் ஸ்தலபுராணம் அதற்கு எந்தவொரு புனிதத்தையும் கற்பிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். ( (Peasant state and Society in Medieval South India ð‚è‹ 331 & 334)
பழைய வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சோழபுரம் என்ற ஊரில் இருக்கும் சிவன் கோயில் ஒன்று இப்படி பள்ளிப்படையாகவும் விளங்குவதைச் சுட்டிக்காட்டி அதைப் போலவே தஞ்சைப் பெரிய கோயிலும் பள்ளிப்படையாகக் கட்டப்பட்டது என்கிறார் பர்ட்டன் ஸ்டெய்ன். ஆனால் இதை ஆர். நாகசாமி மறுக்கிறார். ‘‘ சோழபுரத்தில் இருவேறு கோயில்கள் இருந்தனவென்றே தெரிகிறது. ‘ ஈஸ்வராலயமும் அதிட்டக்ரஹமும்’ என அதைக் குறிப்பிட்டுள்ளனர். இறந்தவர்களுக்கென கோயில்கள் கட்டப்பட்டதும் அவை பள்ளிப்படைகள் என அழைக்கப்பட்டதும் உண்மைதான். இறந்தவர்களின் எச்சங்கள் புதைக்கப்பட்ட இடத்தின்மீது அதைக் கட்டுவார்கள். அந்த இடம் ‘ பள்ளிப்பாடுட்ட இடம்’ என அழைக்கப்படும். பள்ளிப்படைகளை இறந்தவர்களின் வாரிசுகளே கட்டுவார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். தஞ்சைப் பெரியகோயிலை எடுத்துக்கொண்டால் அது ராஜராஜன் உயிரோடு இருந்தபோதே கட்டப்பட்டதாகும். அதன் கும்பாபிஷேகமும் அவன் உயிரோடு இருந்தபோதே நடந்துள்ளது. கங்கைகொண்டசோழபுரமும் அப்படிக் கட்டப்பட்டதுதான். தஞ்சைப் பெரியகோயில் குறித்த கல்வெட்டுகள் ராஜராஜன் பிறந்த சதய நட்சத்திரத்தில் ஒவ்வொருமாதமும் விழா நடத்தவேண்டுமென்று கூறியுள்ளன. பிறந்த நட்சத்திரத்தில் நடத்தச் சொல்லியிருக்கிறதே தவிர இறந்த திதியில் அல்ல. பள்ளிப்படையாக இருந்திருந்தால் திதியில்தான் நடத்தச் சொல்லியிருப்பார்கள்’’ என்கிறார் நாகசாமி. (Discourses on Siva ð‚è‹ 170  ) அவரது கூற்று ஏற்கத்தக்கதாகவே உள்ளது.
தஞ்சைப் பெரியகோயில் குறித்து மேலும் பல முரண்பட்ட தகவல்கள் வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகின்றன. அது புதிதாகக் கட்டப்பட்ட கோயிலா? அல்லது பழைய கோயில் ஒன்றை இடித்துவிட்டு அங்கே கட்டப்பட்டதா? என்பது பற்றி சொல்லப்படும் தகவல்களை நாம் இங்கே பார்ப்போம். இது பற்றி சதாசிவப் பண்டாரத்தார் கூறுவதை இங்கு சுட்டுவது தகும். ‘‘அப்பர் அடிகளது திருவீழி மழலைத் திருத்தாண்டகத்தில் காணப்படும் ‘தஞ்சைத் தளிக்குளத்தார்’ என்னுந் தொடரால் சைவ சமய குரவர்கள் காலங்களில் தஞ்சை மாநகரில் தளிக்குளம் என்னும் கோயில் ஒன்று இருந்தது என்பது நன்கு வெளியாகின்றது. ஆகவே, அப்பெரியோர்கள் அத்திருப்பதி மீது பதிகங்கள் பாடியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. தேவாரப் பதிகங்களுள் பல அழிந்துபோயின; என்பது பலரும் அறிந்ததேயாம்.எனவே, தஞ்சை தளிக்குளத்திற்குரிய பதிகங்களும் அழிந்து போயிருத்தல் வேண்டும். எனினும் அப்பர் அடிகள், தம் திருவீழி மழலைப் பதிகத்தில் அத்திருப்பதியைக் குறிப்பிட்டிருத்தல் அது வைப்புத் தலமாக இக்காலத்தில் கருதப்பட்டு வருதல் அறியற்பாலது. அத்தகைய தஞ்சைத் தளிக்குலத்தைத்தான் இராசஇராசசோழன் பெரிய கற்றளியாக எழுப்பித்து அதற்கு ‘இராசராசேச்சுரம்’ என்னும் பெயரும் வழங்கிச் சிறப்பித்தனன் என்பது ஈண்டு உணரற்பாலதாகும். எனவே, அத்திருக் கோயிலின் தொன்மையும் பெருமையும் அறிந்துதான் இராசராசன் அதற்கு மிகச்சிறந்த முறையில் திருப்பணி புரிந்து யாவரும் வியக்கும் நிலையில் அதனை அமைத்துள்ளனன் என்பது நன்கு துணியப்படும். ஆகவே, தஞ்சை மாநகரில் வெற்றிடமாகக் கிடந்த நிலப்பரப்பில் அஃது இராசராசனால் புதியதாக அமைக்கப்பெற்ற ஒன்றன்று என்பது தெள்ளிது’’ என சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகின்றார். (பிற்காலச் சோழர் வரலாறு பக்கம் 126 - 127).
 பெரிய கோயில் கட்டப்படுவதற்குமுன் தஞ்சையில் தளிக்குளத்தார் கோயில் என்ற சிவாலயம் இருந்ததாகக் குறிப்பிடும் குடவாயில் பாலசுப்ரமணியன் அது பெரியகோயில் கட்டப்பட்ட பிறகும் இருந்ததென்கிறார்: ‘‘ பல்லவர்களின் பேரரசு வலிமையுடையதாகத் திகழ்ந்தபோது தஞ்சை நகரில் திகழ்ந்த சிவாலயங்கள் இரண்டாகும். ஒன்று திருநாவுக்கரசரால் குறிப்பிடப்பெறும் தளிக்குளத்து மகாதேவர் ஆலயமாகும். பிரம்ம குட்டம் என்னும் ஆலயம் மற்றொன்றாகும். இவ்விரு திருக்கோயில்களும் ஸ்ரீ ராஜராஜேச்சரம் எடுக்கப்பெற்றபோது தஞ்சை நகரில் வழிபாட்டில் திகழ்ந்தன என்பதை இராஜராஜேச்சரத்துக் கல்வெட்டுகள் வாயிலாக அறிய இயலுகிறது’’ என்கிறார் அவர். ( இராஜராஜேச்சரம் பக்கம் 17 மற்றும் 18) கல்வெட்டியல் அறிஞர் ஒய். சுப்பராயலுவும் இதேவிதமான கருத்தையே தெரிவிக்கிறார். ‘‘ பழைய கோயில் தற்போதுள்ள சிவகங்கைப் பூங்கா பகுதியில் இருந்திருக்கலாம். பெரிய கோயில் கட்டப்பட்டதற்குப் பிறகு அது பராமரிப்பு இல்லாமல் போயிருக்கலாம். பெரியகோயிலின் முன்புறம் பிற்காலத்தில் இடிந்து பின்னர் செப்பனிடப்பட்டுள்ளது. அப்போது சிதைந்த நிலையில் இருந்த தளிக்குளத்துக்கோயிலின் கற்களை அதற்குப் பயன்படுத்தியுள்ளனர் எனத் தோன்றுகிறது. செப்பனிடப்பட்ட மணடபத்தில் துண்டு துண்டாகக் காணப்படும் கல்வெட்டுகள் தளிக்குளத்துக் கோயிலைச் சேர்ந்தவையாக இருக்கலாம்’’ என்று அவர் என்னிடம் தெரிவித்தார். ( தொலைபேசி உரையாடல் 21.09.2010)
 பழைய கோயில் ஒன்றை இடித்து அந்த இடத்தில்தான் பெரியகோயில் கட்டப்பட்டது என்ற சதாசிவப் பண்டாரத்தாரின் கூற்று இவ்வாறு மறுக்கப்பட்டாலும் கலை வரலாற்றறிஞர் சுரேஷ் பிள்ளை கூறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பெரியகோயிலில் காணப்படும் புத்தரது தொடர்சிற்பக் காட்சிகளை முன்வைத்து அங்கு புத்தர் கோயில் இருந்து அது இடிக்கப்பட்டது என்கிறார் அவர். அந்தச் சிற்பங்கள் ‘‘இராசராசனின் சமயப்பொறைக்கு உதாரணங்களென’‘ சதாசிவ பண்டாரத்தார் கூறுவது ஏற்புடையதல்ல. ராஜராஜன் பௌத்தத்தையும் ஆதரித்து வந்திருக்கிறான். அவனது காலத்தில் பௌத்தம் சிறப்புடன் மக்களிடம் பரவியிருந்தது. நாகப்பட்டினத்தில் கடாரத்து அரசனாகிய சூளாமணிவர்மனால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு அவன் மகன் மாறவிஜயோத்துங்கவர்மனால் கட்டி முடிக்கப்பட்ட புத்த விகாரைக்கென பள்ளிச் சந்தமாக ஆனைமங்கலம் என்னும் ஊரை ராஜராஜன் அளித்த விவரம் ஆனைமங்கலச் செப்பேட்டுச் சாசனத்தில் காணப்படுகிறது. இது ராஜராஜனின் இருபத்தியோராம் ஆட்சியாண்டில் அதாவது கி.பி. 1006ல் நடந்ததாகும். அதன் பின்னரே தஞ்சையில் பெரியகோயில் கட்டப்படுகிறது. ஆனால் அதைவைத்து தஞ்சைக் கோயிலின் சுவற்றில் காணப்படும் புத்தரது தொடர்சிற்பங்கள் சமயப்பொறைக்கான சான்றுகள் என்று நாம் முடிவுசெய்துவிட முடியாது.
 இந்தத் தொடர்சிற்பக் காட்சிகளைப் பற்றி ஆர்.சம்பகலக்ஷ்மி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அசுரர்களின் முப்புரங்களை அழித்து மற்ற மதங்களின் மாயத்தன்மையை விளக்கி அந்தத் தொடர்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன் என்கிறார் சம்பகலக்ஷ்மி. அதில் உள்ளது சமணரா அல்லது புத்தரா என்ற ஐயத்தை எழுப்பியுள்ள அவர், அந்தக் காட்சிகள் ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கிடையே நிகழ்ந்த சமய மோதல்களையும் அதில் சைவம் மேலோங்கி நின்றதையும் குறிக்கின்றன எனவும் மறைமுகமாக வைணவத்தைப் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது , விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான  மாயமோக வடிவம் அதில் செதுக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர்.(  Indian Archaeological Heritage , ð‚è‹  671) இந்தக் கருத்தை வழிமொழிந்து குடவாயில்பாலசுப்ரமணியன் விரிவாக எழுதிச் செல்கிறார்: ‘ திரிபுரம் எரித்த தேவரும் புத்தராகத் திருமாலும் ’ எனத் தலைப்பிட்டு அவர் எழுதியிருப்பதை இங்கு பார்ப்போம். ‘‘ முப்புரங்களை எரித்த இம்மூர்த்தி ( திரிபுராந்தகர்) பற்றிய புராண வரலாறு இத்திருக்கோயிலில் இரண்டு இடங்களில் தொடர்சிற்பக் காட்சிகளாகவும் , சாந்தாரத்தில் ஓவியக் காட்சியாகவும் இடம்பெற்றுள்ளன’’ எனக் குறிப்பிடும் அவர் ‘‘ ஸ்ரீ விமானத்தின் தென்புறப்படிக்கட்டின் பக்கவாட்டில் கீழ்புறம் திரிபுராந்தகர் வரலாற்றுச் சிற்பக் காட்சி இடம்பெற்றுள்ளது. போதிமரத்தடியில் புத்தராகத் திருமால் அமர்ந்திருக்கிறார். அவரருகே திரிபுர அசுரர்கள் இருவர் நின்றுகொண்டு இருக்க ஒருவன் மண்டியிட்டு அமர்ந்துள்ளான். அடுத்த காட்சியில் போதிமரத்தடியில் புத்தராக நிற்கும் திருமால் அவர்களுக்கு சிவனாரை நினையாவண்ணம் , வேறுசமயக் கோட்பாடுகளுக்கு ஆட்படுத்துகிறார். திரிபுரத்தவர் மண்டியிட்டு கைகூப்பி அவர்தம் போதனையில் மயங்கி உழல்கின்றனர். அடுத்த காட்சியாக முப்புரக் கோட்டைகளும் பறந்துவந்து தாக்குகின்றன. ஆண்களும் பெண்களும் பயந்து ஓடுகின்றனர். பசுக்கள்கூட பயந்து பாய்ந்து ஓடுகின்றன. ஒருவன் தலையில் சிவலிங்கத்தைச் சுமந்துகொண்டு ஓடுகிறான். இதனை ஒட்டியுள்ள பகுதியில் அவுணர்தம் மகளிரும் குழந்தைகளும் மற்றவரும் மகிழ்ந்து குதூகலிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாகத் திகழும் அடுத்த காட்சியில் தேவர்கள் வணங்கிநிற்க வில்லேந்திய நிலையில் சிவபெருமான் நிற்கிறார். அடுத்து, குதிரைகள் இழுக்க பெரிய தேர் ஒன்று காணப்பெறுகின்றது. பிரமன் அதனை இயக்குகிறான். ஒரு கையில் வில்லும் ஒரு கையில் அம்பும் பின்னிரு கரங்களில் ஆயுதங்களும் ஏந்திய நிலையில் சிவபெருமான் ஒய்யாரமாகத் தேரின்மீது நிற்கிறார். அருகே இரு பூதக்கணங்கள் இரு குடைகளைப் பிடித்தவாறு நிற்கின்றன.எதிரே திரிபுரங்கள் எரிந்து சாம்பலாகிக் கிடக்கின்றன. திரிபுரத்தவர் மூவரும் மூன்று சிவலிங்கங்களைத் தழுவிக்கொண்டு நிற்கின்றனர். மற்றவர்கள் கையுயர்த்தி திரிபுராந்தகரைப் போற்றுகின்றனர்.’’ ( இராஜராஜேச்சரம் பக்கம் 123& 124)
தஞ்சைப் பெரியகோயிலில் செதுக்கப்பட்டிருக்கும் தொடர்சிற்பங்கள் திரிபுரம் எரித்த காட்சியைச் சித்திரிக்கின்றன என்பது சைவ நம்பிக்கையின்படியும் ஏற்கத்தக்கதாயில்லை. முப்புரம் என்பதை மூன்று கோட்டைகள் என்று புராணங்கள் வர்ணிக்கின்றன, ஆனால் அது தவறு என்கிறார் திருமூலர். திருமந்திரத்தில் அவர் பாடியிருப்பதை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாயிருக்கும்:
‘‘ அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் சென்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவன மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே’’

திரிபுரம் என்பவை ஆணவம் , கன்மம், மாயை என்ற மூன்று மலங்கள்தான் என திருமந்திரம் கூறும் நிலையில் இந்தத் தொடர் சிற்பங்களில் கோட்டை வடிவிலான முப்புரங்கள்தான் செதுக்கப்பட்டிருக்கின்றன எனக் கூறுவது நமது ஆசையை அதன்மேல் ஏற்றிச் சொல்லும் காரியமாகவே படுகிறது.
இந்தத் தொடர்சிற்பக் காட்சிகள் குறித்து சுரேஷ்பிள்ளை கூறியிருப்பதை இப்போது பார்ப்போம். ‘‘தஞ்சைப் பெரிய கோயிலில் கருவறைக்குச் செல்லும் வழியில் தெற்கிலும் வடக்கிலுமாக மூன்று தொடர்சிற்பங்கள் (panels) செதுக்கப்பட்டுள்ளன. முதல் சிற்பத்தில் ஒரு மரத்தின் அடியில் புத்தர் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வலது புறத்தில் அரச வம்சத்தவர்கள் நிற்க இடது புறத்தில் தேவகணங்கள் நிற்கின்றன. இது ராஜராஜீஸ்வரம் கட்டப்படுவதற்கு முன்பிருந்த நிலையை உணர்த்துவதாக சுரேஷ் பிள்ளைக் குறிப்பிடுகின்றார். புத்தரின் நிலை ஓங்கியிருந்ததையும் அரச வம்சத்தோர் அவரது பாதுகாவலாய் இருந்ததையும் அந்தச் சிற்பம் குறிக்கிறது.
அடுத்த சிற்பத்தில் அரசனும் அரசியும் புத்தரின் முன் மண்டியிட்டுத் தொழுத நிலையில் உள்ளனர். புத்தர் நின்ற கோலத்தில் காணப்படுகிறார். தேவகணங்களும் புத்தர் முன் தொழுது நிற்கின்றனர். புத்தரின் முன்னால் காணப்படும் மரமும் வேறுவிதமான மரமாக உள்ளது. புத்தர் வேறிடத்துக்குச் செல்ல யத்தனிப்பதுபோலக் காணப்படுகிறது. புத்தருக்கு வேறு இடத்தில் ஆலயம் எழுப்பவேண்டி இடமாற்றம் செய்வதாக அதனை விளக்குகிறார் சுரேஷ்பிள்ளை.
மூன்றாவது சிற்பத்தில் காணப்படும் காட்சி மிகவும் முக்கியமானதெனக்கூறும் சுரேஷ் பிள்ளை, அங்கிருந்த கோயிலை மாற்றி வேறொன்றைக் கட்டுகிற காட்சி அதில் சித்திரிக்கப்பட்டுள்ளதென்கிறார். ஆகாயத்திலிருந்து கோயிலொன்று இறங்கி வருவதாகவும், அதைக்கண்டு பலரும் ஆனந்தக் கூத்தாடுவதாகவும், சிலர் லிங்கம் ஒன்றைச் சுமந்து வருவதாகவும் அதில் செதுக்கப்பட்டுள்ளது.
புத்தருக்குப் பதிலாக இங்கு லிங்கம் கொண்டு வரப்படுகிறது. புத்தர் கோயிலொன்று இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் சிவன் கோயில் நிர்மாணிக்கப்பட்டதையே குறியீடாக இங்கு செதுக்கி வைத்துள்ளனர்’’ என்று சுரேஷ் பிள்ளை விளக்கம் அளிக்கிறார். அதாவது புத்தர் கோயில் ஒன்றை இடித்துவிட்டே அங்கு பெரியகோயிலை ராஜராஜன் கட்டினான். அதைத்தான் குறியீட்டுக் காட்சிகளாக சிற்பிகள் செதுக்கியுள்ளனர் என்பது சுரேஷ் பிள்ளையின் முடிபு ஆகும். இந்தக் கூற்று எந்த அளவுக்கு உண்மையென்பது தெரியவில்லை. பௌத்தக் கோயிலை இடிக்கும் அளவுக்கு சமயக் காழ்ப்பு கொண்டவனாக ராஜராஜன் இருந்தானா என்பதை நாம் ஆராயவேண்டும். ‘‘ பல்லவ, பாண்டிய, சோழ மன்னர்கள் இந்துமதத் தெய்வங்களுக்கு மாபெரும் கோயில்களைக் கட்டினார்கள் என்றபோதிலும் சமணர்கள், ஆசீவகர்கள், பௌத்தர்கள் உள்ளிட்ட பிற சமயத்தவரையும் அவர்கள் ஆதரித்தே வந்தனர்’’ என ஆனீ மோனியஸ் கூறுவதைப் பார்க்கும்போது( Imagining a place for Buddhism  ð‚è‹ 3&4)  பௌத்தக்கோயில் ஒன்றை ராஜராஜன் இடித்திருப்பான் என நம்பமுடியவில்லை. அதுமட்டுமின்றி முன்பே குறிப்பிட்டதுபோல அவன் பௌத்தத்தை ஆதரிப்பவனாகவும் விளங்கியிருக்கிறான். ‘‘ தமிழ்நாட்டு துறைமுகப்பட்டினமான நாகப்பட்டினத்தோடு ஜாவா மற்றும் சுமத்ரா நாட்டின் அரசர்கள் கொண்டிருந்த நல்லுறவு ’’ பற்றி மோனியஸும் குறிப்பிடுகிறார்.( Imagining a place for Buddhism   பக்கம் 108). இந்தத் தகவல்களைக்கொண்டு பார்க்கும்போது பௌத்தக் கோயில் ஒன்றை இடித்துவிட்டு அந்த இடத்தில்தான் பெரிய கோயில் கட்டப்பட்டது எனச் சொல்லும் கூற்று வலுவிழந்து போய்விடுகிறது. எவ்வறெனினும் இந்த விஷயம் மேலாய்வுக்குத் தகுதியான ஒன்றாகும்.
ராஜராஜனும், முதலாம் ராஜேந்திரனும் வழிபடுவதற்காகக் கோயில்களைக் கட்டினார்களா அல்லது தங்களின் நினைவாகக் கட்டினார்களா என்பது ஒருபுறமிருக்க, இப்படிப் பெரிய கோயில்களைக் கட்டுகிற வழக்கம் சோழ மரபில் அவர்களோடு முடிவுக்கு வந்தது. முதலாம் ராஜேந்திரனுக்குப் பிறகு (1012 & 1044) முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்கு வரும்வரை (1070 & 1120) சோழர் அரசு சிறப்புகுன்றியே இருந்தது. குலோத்துங்கன் பதவியேற்பதற்கு முன்னர் சோழநாடு உள்நாட்டுக் குழப்பங்களாலும், குறுநில மன்னர்களின் கலகங்களாலும் அல்லலுற்றது. இதை கலிங்கத்துப்பரணி இப்படியாக விவரிக்கிறது.
‘‘மறையவர் வேள்விக்குன்றி மனுநெறி யனைத்து மாறித்
துறைகளோ ராறுமாறிச் சுருதியு முழக்க மோய்ந்தே’’ (245)
சாதிகளொன்றோ டொன்று தலைதடுமாறி யாரும்
ஓதிய நெறியினில்லா தொழுக்கமு மறந்து போயே (246)

சோழநாடு இவ்வாறு அல்லலுற்றிருந்தபோது சைவமும் வைணவமும் எந்த நிலையில் இருந்தன? அப்போது பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்பட்டனவா? சோழ மன்னர்களால் பௌத்த சமண மடாலயங்களுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலங்கள் மீண்டும் வரிவிதிப்புக்கு உள்ளாக்கப்பட்டது எப்போது துவங்கியது? & இப்படிப் பல்வேறு கேள்விகள் இன்னும் விடை தெரியாமல் உள்ளன. தமிழ்நாட்டில் பல இடங்களில் பௌத்த கோயில்கள் இடிக்கப்பட்டு அங்கெல்லாம் சைவ வைணவக் கோயில்கள் கட்டப்பட்டன என்று சுரேஷ் பிள்ளை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டியிருக்கிறார். அவரது கருத்துகள் இப்போதும்கூட தொல்லியல் மற்றும் கலை வரலாற்று அறிஞர்களால் முக்கியத்துவத்தோடு விவாதிக்கப்படவில்லை. தஞ்சைப் பெரிய கோயிலுக்குக் குடமுழுக்குச் செய்யப்பட்ட ஆயிரமாவது ஆண்டைக் கொண்டாடுகிற இந்த நேரத்திலாவது அத்தகைய விவாதங்கள் துவக்கப்படவேண்டும்.

பயன்பட்ட நூல்கள்:
1. டி.வி.சதாசிவப் பண்டாரத்தார்- பிற்காலச் சோழர் வரலாறு, 1974 , அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
2. குடவாயில் பாலசுப்ரமணியன் - இராஜராஜேச்சரம், 2010, தஞ்சாவூர்
3. Burton Stein- Peasant State and Society in Medieval South India ,1980, OUP
4. B. Venkatraman - Rajarajeswaram- the pinnacle of Chola Art, 1985 Mudgala Trust
5. R. Nagaswamy- Iconography and Significance of the Brihadisvara Temple, Tanjavur in Discourses on Siva - Michael W Meister (Ed) Bombay, 1984
6. R.Champakalakshmi- Thanjavur , The Ceremonial City of the Cholas, Indian Archaeological Heritage
7. Pillai, Suresh B. (1976).Introduction to the Study of Temple Art. Thanjavur: Equator and Meridian.

( இக்கட்டுரை எழுத உதவியாக சில நூல்களைத் தந்து உதவிய பத்திரிகையாளர் டி.எஸ்.சுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி)

நன்றி : மணற்கேணி ,இதழ் 2 , செப் -அக் 2010

5 comments:

  1. இதை பற்றி நானும் படித்துள்ளேன் என்னிடம்டி.வி.சதாசிவப் பண்டாரத்தார்- பிற்காலச் சோழர் சரித்தரம் குடவாயில் பாலசுப்ரமணியன் இராஜராஜேச்சரம், நடணகாசிநதான் இராஜராஜேச்சரம் ரகாவைங்கர் சோழர் சரிதம்

    ReplyDelete
  2. before buddhar started his religion, were any other religions
    excisting in india? if so, whether such religions were having their own temples or not?
    why saiva and vaishnava religions were not having any temple?
    i heard tirupathy and srirangam temples are very old; even in mhabaratham also these temples were mentioned. is it true?

    ReplyDelete
    Replies
    1. Indian history starts from Invasion of Darius I into Punjab. At that time there were only MAHAJANAPADHAS and not kingdoms and Jainism did not recognize Brahmins as separate caste. Hence Religion as understood today was non existent. However Buddhism extensively deals with Brahmins and it's main objective was to convert Unarya Brahmins as Aryas probably meaning Purohits as developed during Jainism should be converted as intellectuals. Up to fourth century BC nothing is known about South India and Jains reached Srilanka and from there reached extreme South Tamilnadu. We find only from fourth century BC onwards there was mention about South India in Buddhist literature as mention about Banavasi and Mahishamandala in Buddhist treatises. Thus the concept of religion remained the same even before two thousand years in North majority were indifferent and it was only urban phenomena. However there has been some connection between coastal Karnataka and middle East Kashmir and even Celts. The surname used by Kashmiri Pundits Kaul connected wi
      th Naga is echoed in Kollur Kollipavai Kulasekara meaning doning forehead by snake Chutunagas and reference to Naga in Sangam classics Avva a Persian term used in Karnataka as well in Sangam classics and so on. Further Western Kshatrapas
      Satakarnis Kadambas all followed Persian Administration. The term VELL in Tamil literature refers to white people from Elamite as well as Druids who were worshipper of spirits and trees sorcery point out to systematic religion in Karnataka. The growth of temples and Himalayas emerged only in Karnataka. Lastly Buddhism unlike Jainism was never a Religion of India but originated in Tibetan plateau and arrived in plains.

      Delete
    2. Indian history starts from Invasion of Darius I into Punjab. At that time there were only MAHAJANAPADHAS and not kingdoms and Jainism did not recognize Brahmins as separate caste. Hence Religion as understood today was non existent. However Buddhism extensively deals with Brahmins and it's main objective was to convert Unarya Brahmins as Aryas probably meaning Purohits as developed during Jainism should be converted as intellectuals. Up to fourth century BC nothing is known about South India and Jains reached Srilanka and from there reached extreme South Tamilnadu. We find only from fourth century BC onwards there was mention about South India in Buddhist literature as mention about Banavasi and Mahishamandala in Buddhist treatises. Thus the concept of religion remained the same even before two thousand years in North majority were indifferent and it was only urban phenomena. However there has been some connection between coastal Karnataka and middle East Kashmir and even Celts. The surname used by Kashmiri Pundits Kaul connected wi
      th Naga is echoed in Kollur Kollipavai Kulasekara meaning doning forehead by snake Chutunagas and reference to Naga in Sangam classics Avva a Persian term used in Karnataka as well in Sangam classics and so on. Further Western Kshatrapas
      Satakarnis Kadambas all followed Persian Administration. The term VELL in Tamil literature refers to white people from Elamite as well as Druids who were worshipper of spirits and trees sorcery point out to systematic religion in Karnataka. The growth of temples and Himalayas emerged only in Karnataka. Lastly Buddhism unlike Jainism was never a Religion of India but originated in Tibetan plateau and arrived in plains.

      Delete
  3. மிகச் சிறப்பான கட்டுரை... சோழர் குறித்தான... தஞ்சைக் கோவில் குறித்தான தகவல்களை தேடிப் படித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் இந்தக் கட்டுரை மூலம் நிறைய அறிய முடிந்தது.

    ReplyDelete