Wednesday, July 16, 2014

தஞ்சைப் பெரிய கோயில்: சில குறிப்புகள்‘ சரள மந்தார சண்பக வகுள சந்தன நந்தன வனத்தின் / இருள்வரி மொழுப்பின் இஞ்சி சூழ்த் தஞ்சை இராசராசேச்சரம்’ என கருவூர்த்வேரால் போற்றப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலைக்கட்டி ஆயிரம் ஆண்டுகளாகிவிட்டன. அதற்காகத் தமிழக அரசு விழா ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது. அந்த விழாவின் விளைவுகளில் ஒன்றாகப் பெரியகோயிலின் கருவறைத் திருச்சுற்றுப்பாதைச் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் ராஜராஜன் காலத்து ஓவியங்களின் தொகுப்புத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலமாக வெளிவந்திருக்கிறது.

  கருங்கற் சுவரின்மேல் சுண்ணாம்புக் காரையைப் பூசி அதன்மீது ஓவியங்களைத் தீட்டச் செய்திருக்கிறான் ராஜராஜன். பின்னர் தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கர் காலத்தில் அந்த ஓவியங்களின்மீது சுண்ணாம்புக்காரைப் பூசப்பட்டு அதன்மீது புதிதாக ஓவியங்கள் வரையப்பட்டன. அதனால் சோழர்கால ஓவியங்கள் மறைந்துபோயின. காலப்போக்கில் நாயக்கர்காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களின் காரைப்பூச்சுப் பெயர்ந்து வந்ததால் சோழர்கால ஓவியம் ஆங்காங்கே புலப்படலாயிற்று. அதன்பிறகு தொல்லியல் துறையினர் வேதியியல் நிபுணர்களைக்கொண்டு நாயக்கர்கால ஓவியங்களை அகற்றி சோழர்கால ஓவியங்களை வெளிப்படுத்தினார்கள். இன்னும் கிழக்குப் பகுதியில் இருபக்கச் சுவர்களிலும் , தென்மேற்குப்புறச் சுவரிலும் இருக்கும் நாயக்கர்கால ஓவியங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இதுவரை கண்டறியப்பட்டிருக்கும் ஓவியங்கள் இப்போது இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  
  
எழுதப்பட்ட பிரதி ஒன்றை அழித்து அந்த இடத்தில்  இன்னொன்றை எழுதுகிறமுறையை ‘ பாலிம்செஸ்ட்’ என்பார்கள். அப்படி எழுதப்பட்ட புதிய பிரதி மங்கிப்போய் பழைய பிரதி தென்படும். இங்கு புலப்படுத்தப்பட்டிருக்கும் ‘ பாலிம்செஸ்ட் ஓவியங்கள்’ ராஜராஜன் காலத்துக் கற்பனைகளின் சாட்சியங்களாய் இருகின்றன. இந்த ஓவியங்கள் கருவறையைச் சுற்றி வரையப்பட்டிருப்பதால் அதைப் பலரும் பார்க்க இயலாத நிலை. அப்படி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்குத் தமிழ்ப் பல்கலைகழகம் வெளியிட்டிருக்கும் இந்த நூல் ஒரு பரிசு. இதில் இடம்பெற்றுள்ள ஓவியங்களைத் தெளிவாக நாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக ஓவியர் சந்ருவைக் கொண்டு அந்த ஓவியங்களைக் கோட்டொவியங்களாக வரையச் செய்து அவற்றையும் அருகருகே வெளியிட்டிருக்கிறார்கள். சந்ருவின் கோட்டோவியங்கள் நம் கையில் உருப்பெருக்கிக் கண்ணாடி ஒன்றைக் கொடுத்ததுபோல் உணரச்செய்கின்றன.

இந்த நூலை வெளியிட்டதுபோலவே சோழர் வரலாற்றையும், பெரியகோயில் பற்றிய வரலாற்றையும் ஆராய்ந்திருக்கிற நூல்கள் சிலவற்றைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழில் வெளியிடவேண்டும். உலகத்தமிழ் மாநாடு குறித்த முரண்பட்ட நிலைப்பாட்டை மேற்கொண்ட காரணத்தால் நொபுரு கரஷிமா இப்போது அரச ஆதரவை இழந்தவராக உள்ளார்.  இதனால் அவர் தமிழக வரலாற்றுக்குச் செய்துள்ள பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டு விடக்கூடாது. அவரது எழுத்துகள் முழுவதுமாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படவேண்டும். பர்ட்டன் ஸ்டெய்ன், நொபுரு கரஷிமா, சம்பகலக்ஷ்மி, வித்யா தெஹேஜியா, பா.வெங்கட்ராமன், நாகஸ்வாமி, ஒய்.சுப்பராயலு என மொழிபெயர்க்கப்படவேண்டியவர்களின் பட்டியல் நீள்கிறது. ‘ அதிகாரத்தின் கொடைகள்’ என்ற தலைப்பில் தஞ்சைப் பெரியகோயில் குறித்து முக்கியமானதொரு ஆய்வைச் செய்திருக்கும் ஜேம்ஸ் ஹெய்ட்ஸ்மனின் நூலும், கோயில் கட்டடக்கலை குறித்த சுரேஷ்பிள்ளையின் நூலும் உடனடியாக மொழிபெயர்க்கப்படவேண்டியவை.

பெரியகோயிலில் சாந்தார அறையின் மேற்தளத்தில் ஆடற்கலை கூறும் நூற்றியெட்டு கரணங்களை சிலைகளாக வடிப்பதற்குத் திட்டமிட்டு எண்பத்தோரு கரணங்கள் சிலைகளாக வடிக்கப்பட்டு மீதமுள்ள சிலைகள் வடிக்கப்படாமல் அவற்றுக்கான கற்கள் 
மட்டும் பதிக்கப்பட்டுள்ளன. இந்தக் குறையை நேர்செய்யும் விதமாக தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அரங்கொன்றை அமைத்து நூற்றியெட்டுக் கரணங்களையும் சிலைகளாக வடிப்பதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.      
  
கோயில் கருவறைகளில் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினர்தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்படாத நிலை இன்றும் தொடர்கிறது. இத்தகைய கட்டுப்பாடுகள் காரணமாகவே தொல்லியல் துறைசார்ந்த பல ஆய்வுகள் ஒருசிலருடைய விருப்புவெறுப்புகளின் வெளிப்பாடுகளாக அமைந்துபோயிருக்கின்றன.தமிழக வரலாறு தொடர்பான தொல்லியல் சான்றுகளை இந்தப் பின்னணியில் மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய தருணம் இது. நாயக வழிபாட்டு மனோபாவம் அனைத்துத் தளங்களையும் ஊடுருவிச் சீரழித்துக்கொண்டிருக்கும் இன்றையச் சூழலில் தமிழக வரலாற்றின் 'அத்தாரிட்டி’களாகச் சில ‘வழிபாட்டுருக்கள்’ மேலெழுந்து வருவதைப் பார்க்கிறோம். அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் புனித அங்கீகாரம் வழங்கும் ஆன்மீக அதிகார மையங்களின் தேவை இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பதையே இது காட்டுகிறது. இது தனிமனிதர்கள் அடையும் லாபநஷ்டங்கள் தொடர்பான பிரச்சனையல்ல. வரலாற்றுப் பிரக்ஞை குறித்த சிக்கல். இதை இப்போதே தடுத்து நிறுத்தவேண்டியது அவசியம். இல்லாவிட்டால் சமயச் சார்பற்ற விதத்தில் தமிழக வரலாற்றை எழுதவேண்டுமென்ற கனவு, பகல் கனவாகவே முடிந்துவிடும்.

01.10.2010

No comments:

Post a Comment