Friday, July 25, 2014

தாராசுரம்: தமிழ் பௌத்த வரலாற்றுக்கான திறவுகோல் - ரவிக்குமார்


சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலுக்கு அண்மையில் நான் சென்றிருந்தேன்.  கம்பீரமாக எழுந்து நிற்கும் வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் விசாலமான பிரகாரத்தைத் தாண்டி அந்தக் கோயிலின் சிறப்பாகக் கருதப்படும் ராஜகம்பீர மண்டபம் இருக்கிறது.  குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் ரதத்தைப்போன்ற அமைப்புடன் அந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.  அந்த மண்டபத்தில் இருக்கும் தூண்களில் மிகவும் நுட்பமாக அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.  கோயில் கருவறையைச் சுற்றியுள்ள புறச்சுவரில் அறுபத்து மூன்று நாயன்மார்களுடைய வரலாறுகளை அறிவிக்கும் சிற்பங்கள் அழகிய முறையில் செதுக்கப்பட்டுள்ளன.  திருச்சுற்று மாளிகையின் வடபுறத்தில் சிவாச்சாரியர்கள் 108 பேர்களுடைய சிலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.  அவை மட்டுமின்றி நடன வகைகளையும், விளையாட்டுகளையும், போர்க்காட்சிகளையும் சித்தரிக்கின்ற அழகிய சிற்பங்களும் அங்கே காணப்படுகின்றன.  ராஜ கம்பீர மண்டபத்தின் கீழே செதுக்கப்பட்டிருக்கும் குதிரைக்கும் தேர்ச் சக்கரத்துக்கும் இடையில் அந்த மண்டபத்தின் பீடத்தில் ஒரு புத்தர் சிலை உள்ளது.  வெளியிலிருந்து பார்க்கும்போது அது தெரிவதில்லை.  தேர்ச் சக்கரத்திற்குக் கீழே குனிந்து பார்த்தால்தான் அது பார்வைக்குத் தென்படுகிறது.அதுமட்டுமின்றி கருவறையின் புறச் சுவரில் இடதுபுறமாக இன்னொரு புத்தர் சிலையும் இருக்கிறது.அந்தச் சிலையின் அருகில் கோயில் மொன்றும் செதுக்கப்பட்டிருக்கிறது.நாயன்மார்கள், சிவாச்சாரியார்கள் ஆகியோரது சிலைகள் நிறைந்து சைவ சமயத்தின் மேலாதிக்கம் மிளிரக் காட்சியளிக்கும் அந்தக் கோயிலில் புத்தர் சிலை ஏன் செதுக்கப்பட்டிருக்கிறது என்பது எனக்குப் புதிராக இருந்தது.  

2.

'தாராக வண்டந் தொடுத்தணிந்தார்
தமக்கிடம்  போதத் தமனியத்தாற்
சீராச ராசீச் சரஞ்சமைத்த
தெய்வப் பெருமாளை வாழ்த்தினவே'

என்று தக்கயாகப் பரணியில் போற்றப்படுகின்ற இரண்டாம் ராசராசனால் எடுப்பிக்கப்பட்ட கோயில்தான் தாராசுரத்தில் அமைந்திருக்கும் ஐராவதேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் சிவன்  கோயில் ஆகும்.  இந்தக் கோயில் குறித்து தி.வை. சதாசிவ பண்டாரத்தார் தனது பிற்காலச் சோழர் வரலாறு (அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1974) என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் : 'தான் வசித்து வந்த இராசராசபுரம் என்னும் பெருநகரின் வடகீழ்ப் பகுதியில் இராசராசேச்சுரம் என்ற சிவாலாயம் ஒன்று எடுப்பித்து அதில் இராசராசேச்சுரமுடையாரை எழுந்தருளுவித்து  வழிபாடு புரிந்தனன்.  ஆசிரியர் ஒட்டக்கூத்தர், தக்கன் யாகம் அழிக்கப்பட்டப் பிறகு உமா தேவியாருக்கு போர்க்களம் காட்டி அங்கு இறந்தவர்கள் எல்லோர்க்கும் அருள் புரியும் பொருட்டு இராசராசபுரி ஈசர் எழுந்தருளினார் என்று தம் தக்கயாகப் பரணியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.  கண்டோர் கண்களைப் பிணிக்கும் சிற்பத் திறம் வாய்ந்து முற்காலத்தில் பெருமையுடன் நிலவிய அம்மாடக் கோயில் இக்காலத்தில் தன் சிறப்பனைத்தும் இழந்து அழிவுற்ற நிலையில் உளது.'( பக்: 365 & 366)  1974ம் ஆண்டில் சாதாசிவ பண்டாரத்தார் எழுதியபோது அந்தக் கோயில் அவ்வாறு கவனிப்பாரற்ற நிலையில்தான் இருந்துள்ளது.  ஆனால், இப்போது அது தனது பழைய பொலிவோடு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. யுனெஸ்கோ அமைப்பால் ‘ உலக மரபுச் சின்னங்களில் ஒன்றாக ‘ அறிவிக்கப்பட்டு பிற்காலச் சோழர்களின் கட்டடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது .

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகில் திருநாகேஸ்வரம், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், சிவபுரம் ஆகிய சிறப்பு வாய்ந்த ஊர்கள் சூழ இருப்பதுதான் தாராசுரம்.  இந்த ஊரின் உண்மையான பெயர் தெரியவில்லை.  அங்கு இரண்டாம் ராசராசன் கோயிலைக் கட்டியதால் அவனது பெயரால் அவ்வூர் ராஜராஜ ஈஸ்வரம் என்று அழைக்கப்பட்டது.  அதை மூன்றாம் ராசராசனின் கல்வெட்டு ஒன்றின் மூலம் நாம் அறிய முடிகிறது.  பின்னர் பாண்டிய மன்னர்களின் ஆக்கிரமிப்பின்போது ராஜராஜ ஈஸ்வரம் என்ற பெயர் சுருக்கப்பட்டு ராராசுரம் என்று அழைக்கப்பட்டது.  அங்கிருக்கும் சிவபெருமான் ராராசுரமுடையார் என்று அறியப்பட்டார்.  அதன்பின்னர் அந்த ஊரின் பெயர் ராராபுரம் என மாற்றி அழைக்கப்பட்டதென்று வீரபாண்டியனின் கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிகிறோம்.  கி.பி 1408ல் மீண்டும் அந்த ஊருக்கு ராராசுரம் என்ற பெயர் சூட்டப்பட்டது.  ஆனால் அது தாராசுரம் என எப்போதிருந்து அழைக்கப்படுகிறது என்ற வரலாறு எவருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. 

இந்தக் கோயிலில் 30 கல்வெட்டுகள் உள்ளன என்று இது குறித்து ஆராய்ந்த பி.ஆர். ஸ்ரீனிவாசன் குறிப்பிடுகின்றார்( ஞிணீக்ஷீணீsuக்ஷீணீனீ, ணிதிணிளி,றிணீக்ஷீவீs, 1987). இந்தக் கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதென்று வரலாற்றாசிரியர்கள் நினைத்திருந்தனர்.  அவன் காலத்தில் வெட்டப்பட்ட திருபுவனம் கோயில் கல்வெட்டில் அவ்வாறு குறிப்பு உள்ளது.  ஆனால், கோயிலின் கிழக்கு பிரகாரச் சுவரில் இரண்டாம் ராசராசன் கல்வெட்டு உள்ளது.  இந்தக் கோயிலில் அமைந்திருக்கும் ராச கம்பீர மண்டபத்தில் காணப்படும் கல்வெட்டிலும் இரண்டாம் ராச ராசன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதென்ற குறிப்பே காணப்படுகிறது. 

இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி.1150 இறந்த பிறகு அவன் புதல்வனாகிய இரண்டாம் ராசராசன் சக்கரவர்த்தியாக மூடிசூட்டிக்கொண்டான். அவனது தந்தை ராஜகேசரி என்ற பட்டம் உடையவனாக இருந்தான்.  இவன் பரகேசரி என்ற பட்டப்பெயரோடு சோழ நாட்டை ஆட்சி செலுத்தினான்."இரண்டாம் ராசராசனின் கல்வெட்டுகள் கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர் ஜில்லாக்களிலும் காணப்படுவதால் வேங்கி நாடு, கொங்குநாடு, கங்க நாடு ஆகியவை இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன என்பது திண்ணம்.  ஆகவே இவன் தந்தை குலோத்துங்க சோழனது ஆளுகைக்-கு உட்பட்டிருந்த நாடுகளெல்லாம் சோழ ராஜ்ஜியத்திலிருந்து விலகாமல் இவன் ஆட்சியின் கீழும் அமைதியாக இருந்துவந்தன எனலாம்." என்கிறார் சதாசிவப் பண்டாரத்தார் (பக்.360). 

இவனுடைய ஆட்சிக்காலத்தில் மலையமலை பக்கத்தில் காவிரி ஆறு அடைப்புண்டு கிழக்கு நோக்கித் தண்ணீர் வராமல் தடைபட்டதாகவும் அதனை அறிந்த இரண்டாம் ராசராசன் அந்த மலையை நடுவில் வெட்டுவித்துக் காவிரி ஆற்றிற்கு வழி கண்டு சோழ நாட்டுக்குத் தொடர்ந்து தண்ணீர் வர ஏற்பாடு செய்தான் என்றும் தக்கயாகப் பரணியை அடிப்படையாகக் கொண்டு சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிடுகின்றார்( பக்: 367).  இவனது ஆட்சிக் காலத்தின் முற்பகுதியில் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகராய் இருந்தது.  அதன்பிறகு அவன் பழையாறை நகரைத் தலைநகராக ஆக்கிக்கொண்டான்.  அதன் பின்னர் அந்த ஊர் ராஜராஜபுரி என்று சிறப்போடு அழைக்கப்பட்டது.  

தாராசுரத்தில் இருக்கும் ஐராவதேஸ்வரர் கோயிலில் துவாரபாலகர் சிலைகள் காணப்படுகின்றன.  அந்தச் சிலைகள் மேற்கு சாளுக்கிய நாட்டின் தலைநகராக இருந்த கல்யாணபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாக  கீழ் கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்கள் எதுவும் இல்லாமல் அமைதியாக ஆட்சி செய்த இரண்டாம் ராசராசன் அந்த சிலைகளைக் கொண்டுவந்திருக்க வாய்ப்பில்லை.  அவை முதலாம் ராஜாதிராஜனின் காலத்தில் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
3.

சோழர்கால கோயில்களின் கட்டடக்கலை குறித்து ஆராய்ந்த சுரேஷ்பிள்ளை தனது நூலில் (ஷிtuபீஹ் ஷீயீ ஜிமீனீஜீறீமீ கிக்ஷீt, 1976) தாராசுரம் கோயில் குறித்து விரிவாக ஆராய்ந்திருக்கிறார். அக்கோயிலில் பௌத்த கட்டடக்கலையின் தடயங்கள்காணப்படுவதாக அவர் கூறுகிறார்.              ‘‘திருவலஞ்சுழி கோயிலும் தாராசுரம் கோயிலும் பௌத்தத்தின் இருவேறு பிரிவுகளை‘‘ பிரதிநிதித்துவப்படுத்துவதாக சுரேஷ்பிள்ளை குறிப்பிடுகின்றார்.  திருவலஞ்சுழி கோயில் மாகாயானப் பிரிவையும், தாராசுரம் கோயில் ஹீனயானப் பிரிவையும் சேர்ந்தவை என்று அவர் கூறுகிறார்.  பழையாறையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்கள் அந்தப் பகுதியில் இருந்த பௌத்த ஆலயங்களையெல்லாம் மாற்றி சிவாலயங்களாக உருவாக்கினார்கள் என்று கூறும் சுரேஷ்பிள்ளை அவ்வாறு மாற்றப்பட்ட கோயில்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். நாயன்மார்களால் பாடல் பெற்றிருந்தால் அது இந்துக் கோயில், இல்லாவிட்டால் அது பௌத்தத்தோடு அல்லது சமணத்தோடு தொடர்பு கொண்டதாயிருக்கும் என்று அவர் விவரிக்கிறார். 

பௌத்தத்தை ஆதரித்து வந்த மன்னர்களுக்குப் பிறகு சைவ வைணவத்தை நோக்கி சோழ மன்னர்களின் ஆதரவு திரும்பிவிட்டது.  ஆனால் முந்தைய ஆட்சிக்காலத்தில் அரச ஆதரவைப் பெற்றிருந்த பௌத்த கலைமரபால் பேணி வளர்க்கப்பட்ட கைவினைஞர்களிடம் இந்த மாற்றம் எந்த ஒரு பெரிய மாறுதலையும் ஏற்படுத்திவிடவில்லை.   சோழர்காலச் சிற்பிகள் பௌத்த கலை மரபின் கூறுகளைக் கைவிடாமலேயே தொடர்ந்தும் சிற்பங்களை செதுக்கி வந்தனர்.  கோயில்களை உருவாக்கினர். 

‘‘தாராசுரம் கோவிலில் கருவறைக்கு மேலிருக்கும் விமானத்தில் ஸ்தூபி போன்ற வடிவம் நான்கு மூலைகளிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.  பௌத்த ஸ்தூபிகளின் சிறிய வடிவங்களைப்போல அவை அமைக்கப்பட்டிருக்கின்றன’’ என்று குறிப்பிடும் சுரேஷ்பிள்ளை தாராசுரம் கோயிலை நுணுகி ஆராய்ந்தால் அது உண்மையான தமிழ் பௌத்த வரலாற்றைப் புலப்படுத்துவதாக இருக்கும் என்கிறார்.  கருவறையின் புறச்சுவரில் இருக்கும் ஒரு மாடத்தில் சிவன் பார்வதி சிலைகள் உள்ளன.  அச்சிலைகளின் இருபுறமும் மன்னர்கள் அல்லது கந்தர்வர்கள் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.  அந்த மாடத்தின் மேல்பகுதியில் கபோதமும்,  கூடும், யாளி வரிசையும் பொருத்தமில்லாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன.  கூடு பகுதியில் தர்ம சக்கரம் வரிசையாக செதுக்கப்பட்டிருக்கிறது.  இத்தகைய சிற்ப அமைப்பு அந்த மாடத்தில் அதற்கு முன்பு புத்தரின் சிலை இருந்திருக்கவேண்டும் என்ற யூகத்துக்கு வழிவகுக்கிறது என்கிறார் சுரேஷ்பிள்ளை.

தாராசுரம் கோயிலின் கட்டட அமைப்பு குறித்தும் சிற்பங்கள் குறித்தும் ஆராய்ந்து அவற்றின் மூலம் வெளிப்படும் பௌத்த கலை மரபின் அடையாளங்களை எடுத்துக் கூறியிருக்கும் சுரேஷ்பிள்ளை ராஜகம்பீர மண்டபத்தின் பீடத்தில் செதுக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலை குறித்தோ அல்லது புறச் சுவரில் காணப்படும் புத்தர் சிலை குறித்தோ தமது நூலில் ஓரிடத்திலும் குறிப்பிடாதது வியப்பளிக்கிறது.  அந்தச் சிலைகள் அவரது பார்வைக்கு வராமல் போனது எப்படி என்று தெரியவில்லை.  ஆனால் அந்தச் சிலைகள் நீண்டகாலமாகவே அங்குதான் இருந்து வந்துள்ளன.  தாராசுரம் கோயிலைப்பற்றி பிரஞ்சு மொழியில் இரண்டு பாகங்களைக் கொண்ட நூல் ஒன்றை எழுதியிருக்கும் பிரான்சுவா எர்னோ (ஞிணீக்ஷீணீsuக்ஷீணீனீ - திக்ஷீணீஸீநீஷீவீsமீ லி பிமீக்ஷீஸீணீuறீt, ணிதிணிளி, றிணீக்ஷீவீs 1987 மிமி க்ஷிஷீறீ.) அம்மையார் ராஜகம்பீர மணடபத்தின் பீடத்தில் இருக்கும் புத்தர் சிலை குறித்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.  அந்தச் சிலையின் புகைப்படத்தை வெளியிட்டு பத்மாசன முறையில் புத்தர் அமர்ந்திருப்பதாகவும் அவரது கரம் ஞானமுத்திரையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

4.

தாராசுரம் கோயிலில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை 1984ஆம் ஆண்டில் அகழ்வாய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது.  கோயிலின் நுழைவாயிலுக்கும் ராஜகம்பீர மண்டபத்திற்கும் இடையில் உள்ள பிரகாரத்தில் அந்த அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  தற்போது ஒளரங்காபாத்தில் பணிபுரியும் திரு. தயாளன் தலைமையில் தொல்லியல் துறையைச் சேர்ந்த குழுவினர் அந்த ஆய்வை மேற்கொண்டதாக அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த முனைவர் ராஜவேலு தெரிவித்தார்-.  தராசுரம் கோவிலில் காணப்படும் புத்தர் சிலைகளைப் பற்றியும் அந்தக் கோயில் பௌத்த கலைமரபின் கூறுகளைக் கொண்டிருப்பதாக சுரேஷ்பிள்ளை எழுதியிருப்பதைப் பற்றியும் நான் அவரிடம் தெரிவித்தபோது தாங்கள் மேற்கொண்ட அகழ்வாய்வு பற்றி அவர் சொன்னார்.  அந்த அகழ்வாய்வின்போது ஏற்கனவே அங்கு இருந்த கட்டிடம் ஒன்றின் அஸ்திவார அமைப்பைத் தாங்கள் கண்டதாகவும் அது பூம்புகார் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கட்டிட அமைப்பை ஒத்ததாக இருந்ததென்றும் சொன்னார். ஆனால் ஆய்வு முடிந்ததும் அந்தப் பகுதி மூடப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.  நான் திரு. தயாளன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தாராசுரம் அகழ்வாய்வைப் பற்றிக் கேட்டபோது அந்த அகழ்வாய்வில் நாயன்மார்களின் ஐம்பொன் சிலைகள் சில கிடைத்ததாகவும் உடைந்த நிலையில் சிற்பங்கள் சில கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.  ஆனால், அங்கிருக்கும் புத்தர் சிலைகள் குறித்து அவரால் விளக்கம் எதையும் தரமுடியவில்லை. 

தாராசுரம் கோயிலில் புத்தர் சிலைகள் இருப்பதாலேயே அதை ஒரு பௌத்தக் கோயில் என்று முடிவுகட்டிவிட முடியாது.  கலை வரலாற்றிஞரான சுரேஷ்பிள்ளை அந்தக் கோயிலின் கட்டடக்கலையில் தென்படும் பௌத்த கலை மரபு சார்ந்த கூறுகளை எடுத்துக்காட்டி புகைப்பட ஆதாரங்களோடு 1976ம் ஆண்டிலேயே ஆங்கிலத்தில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார்.( மிஸீtக்ஷீஷீபீuநீtவீஷீஸீ tஷீ tலீமீ stuபீஹ் ஷீயீ tமீனீஜீறீமீ ணீக்ஷீt, ணிஹீuணீtஷீக்ஷீ ணீஸீபீ விமீக்ஷீவீபீவீணீஸீ, 1976)   அதன் பிறகு பதினொரு ஆண்டுகள் கழித்து பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருக்கும் தாராசுரம் குறித்த நூலில் சுரேஷ்பிள்ளையின் நூலைப் பற்றியோ அவர் தெரிவித்த கருத்துகளைப் பற்றியோ எவ்வித குறிப்பும் காணப்படவில்லை.  அதுமட்டுமின்றி அந்தக் கோயில் குறித்து எழுதிய வேறு எவரும்கூட அதைப்பற்றி விவாதிக்கவில்லை.  இந்த மௌனம் தான் நமக்கு வியப்பளிப்பதாக இருக்கிறது.  சுரேஷ்பிள்ளை சொல்லியிருப்பதைப் போல தாராசுரம் கோயில் குறித்த கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை ஆய்வு தமிழ் பௌத்தத்தின் உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டுவரும் என்றே தோன்றுகிறது.அதைச் செய்யப்போகும் கலை வரலாற்றறிஞர் ஒருவருக்காகக் காத்திருக்கிறது அந்தக் கோயில்.


பயன்பட்ட நூல்கள்:

1.சதாசிவ பண்டாரத்தார் தி.வை 1974, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்,சிதம்பரம்

2.Pillai, Suresh B  ,1976 , Introduction to the study of temple art, Equator and Meridian, Thanjavur 

3.Francoise L Hernault, 1987, Darasuram, EFEO, Paris 

2 comments:

  1. நிறைய திரிப்புகளை முன் வைத்துள்ளீர்கள்

    ReplyDelete
  2. நிறைய திரிப்புகளை முன் வைத்துள்ளீர்கள்

    ReplyDelete