Saturday, July 19, 2014

எங்களைப் பயங்கரவாதிகள் என்கிறீர்கள்

இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலுக்கு ஆளாகி உயிர்நீத்த பாலஸ்தீன மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக இந்தக் கவிதையை இங்கு மொழிபெயர்த்துத் தருகிறேன்

==========


எங்களைப் பயங்கரவாதிகள் என்கிறீர்கள்


- நிஸார் கப்பானி 

தமிழில்: ரவிக்குமார் 

=========


துண்டு துண்டாகிச்  சிதைந்து 

அழிந்ததுபோக  

எஞ்சியிருக்கும் எம் தாய்நாட்டைப்பற்றிப் பேசினால் 


தனக்கென ஒரு இடத்தைத் தேடிக்கொண்டிருக்கும் 

முகமற்ற எம் தேசத்தைப்பற்றிப் பேசினால் 


எங்களைப் பயங்கரவாதிகள் என்கிறீர்கள் 


ஒப்பாரியையும் ஓலத்தையும் தவிர 

தொன்மையான தனது இலக்கியங்களெல்லாம் அழிந்துபோன 

தாய்நாடு  


தன்னிடம் சுதந்திரமோ கருத்தியலோ இல்லாத 

தாய்நாடு 


ஒரு செய்தித்தாளை வாங்குவதையோ வானொலியைக் கேட்பதையோ 

தடை செய்திருக்கும் தாய்நாடு 


பறவைகள் பாடமுடியாத தாய்நாடு

படைப்பாளிகள் பயத்தின் காரணமாக 

கண்ணுக்குப் புலப்படாத மையைக்கொண்டு  எழுதும் தாய்நாடு 


மண்ணிலிருந்து மனிதர்களிடமிருந்து விலகி 

அவர்களது துயரங்களை ஒதுக்கிவிட்டு 

அந்நிய மொழியில் அந்நிய ஆன்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும் 

எல்லைகளற்ற , இறக்குமதியான 

எமது கவிதையைப்போல இருக்கும் தாய்நாடு 


எந்தவித கௌரவமும் இல்லாமல்

பேச்சுவார்த்தைக்குப் போன தாய்நாடு 


ஆண்களில்லாத பெண்கள் மட்டுமே வாழும் தாய்நாடு 


எமது வாயில் பேச்சில் விழிகளில் கசப்பு 

தொன்மைக்காலம் தொட்டு 

எம்மிடம் கையளிக்கப்பட்ட பாரம்பரியத்தை 

அழித்துவிட்டதா ?


எமது தேசத்தில் எந்த உடலும் இல்லை 

அவமானப்பட்ட உடல்களும் இல்லை 

வண்ணமயமான எமது வரலாற்றை 

சிலர் சர்க்கஸாக மாற்றும்போது 

எமக்கேயுரிய ரொட்டியை வெண்ணையைக் 

கைவிடும்போது 'கூடாது ' எனச் சொல்ல எவருமில்லை 


ஆட்சியாளரின் அந்தப்புரத்தில் கற்பை இழக்காத 

ஒரேயொரு கவிதைகூட எம்மிடம் இல்லை 


நாங்கள் அவமானத்தோடு வாழப் பழகிவிட்டால் 

மனிதனென்று சொல்லிக்கொள்ள என்ன இருக்கும் ? 


எம்மை இருட்டிலிருந்து மீட்க 

எமது பெண்களை நெருப்பின் கொடுமையிலிருந்து காப்பாற்ற 

எவரேனும் ஒரு மாமனிதர் வரமாட்டாரா என

வரலாற்று நூலில் தேடினேன் 


நேற்றைய மனிதர்களைத் தேடினேன் 

எனக்குக் கிடைத்ததென்னவோ எலிகளின் ஆதிக்கத்துக்குப் பயந்த பூனைகள்தான் 


நாங்கள் தேசிய குருட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோமா 

அல்லது நிறக் குருடா 


எங்கள்மீது பயங்கரவாதக் குற்றத்தைச் சுமத்துகிறீர்கள் 

எமது ஒற்றுமையை 

எமது வரலாற்றை 

எமது பைபிளை குர் ஆனை 

நபிகளின் தேசத்தை 

நாசமாக்கிக்கொண்டிருக்கும் 

இஸ்ரேலின் கொடுங்கோன்மைக்குப் பணியமறுப்பதால் 


அதுதான் நாங்கள் செய்த பாவம் அல்லது குற்றம் என்றால் 

பயங்கரவாதம் என்ற அடையாளமும் சரிதான்


மங்கோலிய யூதக் காடையர்களால் 

அழித்தொழிக்கப்படுவதற்கு சம்மதிக்காததால் 

எம்மைப் பயங்கரவாதிகள் என்கிறீர்கள் 

கெய்சுராஸ் மன்னரால் ரத்துசெய்யப்பட்ட 

பாதுகாப்புச் சபையைக் கல்லெறிந்து நொறுக்குவதால் 

எம்மைப் பயங்கரவாதிகள் என்கிறீர்கள் 


ஓநாயிடம் பேச்சுவார்த்தை நடத்தாததால் 

விலைமாதுவிடம் செல்லாததால் 

எம்மைப் பயங்கரவாதிகள் என்கிறீர்கள் 


அமெரிக்கா  எமது பண்பாட்டின்மீது போர் தொடுக்கிறது 

ஏனெனில் அதற்கென ஒரு பண்பாடு இல்லை 

எமது நாகரிகத்தின்மீது தாக்குதல் நடத்துகிறது 

ஏனெனில் அதற்கு நாகரிகம் தேவை 

அமெரிக்கா ஒரு மிகப்பெரிய கட்டடம் 

சுவர்தான் இல்லை 


எம்மைப்  பயங்கரவாதிகள் என்கிறீர்கள் 

திமிர்பிடித்த பலம்பொருந்திய பணக்கார அமெரிக்கா 

ஹீப்ருவை வியாக்கியானப்படுத்தும் ஒரே குரலாக மாறிவிட்ட 

இந்த நிகழ்காலத்தை நாங்கள் ஏற்க மறுப்பதால்

No comments:

Post a Comment