Wednesday, July 16, 2014

அப்பாவித்தனத்தின் அரசியல்



ஆடி மாதம் என்றாலே அது தள்ளுபடிகளின் காலம் என்று ஆகிவிட்டது.' ஆடிப் பட்டம் தேடி விதை ‘ என்று விவசாயிகளால் முக்கியத்துவத்தோடு குறிப்பிடப்பட்ட மாதம் அது. ஆனால் அந்த மாதத்தில் திருமணம் செய்வதில்லை என்ற காரணத்தால் சுபகாரியங்களைச் சார்ந்திருக்கும் வணிக நிறுவனங்கள் ஆடி மாதத்தில் ஈ ஓட்டிக்கொண்டிருந்தன. அந்த நிலையை மாற்ற அவர்கள் கண்டுபிடித்த அருமையான டெக்னிக்தான் ‘ ஆடித் தள்ளுபடி’ . நாம் கொடுக்கும் காசைவிடக் கூடுதலாகக் கொஞ்சம் கிடைத்தால் யார்தான் வேண்டாமென்பார்கள்.இப்போதோ துணிக்கடைகளில் ஆடி மாதங்களில் கூட்டம் அலையடிக்கிறது. உண்மையிலேயே தள்ளுபடி கிடைக்கிறதா என்பதையெல்லாம் எவரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. விளம்பரங்களை அப்படியே நம்பித்தான் நாம் பொருட்களை வாங்குகிறோம். பட்டணத்தில் இருந்தாலும் இந்த வகையில் நாமெல்லாம் பாமரர்கள்தான்.

 

தள்ளுபடி மட்டுமல்ல அதைப்போலவே  இன்னும் பல ‘ மூடநம்பிக்கைகள்’ நம்மை ஆண்டுகொண்டுதான் இருக்கின்றன. நகரத்தில் வசிப்பவர்கள் புத்திசாலிகள் கிராமங்களில் வாழ்பவர்கள் அப்பாவிகள் என்பது அப்படியான நம்பிக்கைகளில் ஒன்று.நான் கல்லூரியில் படிக்கும்போது எனது தமிழ்ப் பேராசிரியர் ஒரு ஜோக் சொன்னார். ஒரு கிராமத்து அப்பாவி சென்னைக்குக் கிளம்பினார். உடனே அவருடைய நண்பர் அவரிடம் எச்சரிக்கை செய்தார். “ மெட்ராஸ்ல ஜாக்கிரதையா இருக்கணும். கிராமத்து ஆள் என்று தெரிந்தால் ஏமாற்றிவிடுவார்கள். ஏதாவது வாங்கினால் இரண்டு மடங்கு விலைசொல்லித் தலையில் கட்டிவிடுவார்கள். நீ எதை வாங்கினாலும் என்ன விலை சொல்கிறார்களோ அதில் பாதி விலைக்குக் கேள்” என்று புத்திமதி சொன்னார். கிராமத்து அப்பாவியும் சென்னைக்கு வந்து சேர்ந்தார். பாரீஸ் கார்னர் பகுதிக்குப் போனார். பிளாட்பாரத்தில் சட்டைகளை விற்றுக்கொண்டிருந்த வியாபாரி அந்த அப்பாவியை அழைத்து சட்டை வாங்கச் சொன்னார். அவரும் விலை கேட்டார்.‘ நூறு ரூபாய்’ என்றார் வியாபாரி. நம் கிராமத்து அப்பாவி உஷாரானார். அவருக்கு நண்பர் செய்த உபதேசம் நினைவுக்கு வந்தது. ”ஐம்பது ரூபாய்க்கு தருவியா?” என்று கேட்டார். போணியாகாமல் கடுப்பில் இருந்த வியாபாரிக்கோ ஆத்திரம் பிய்த்துக்கொண்டு வந்துவிட்டது. “ ஏன் சும்மாவே எடுத்துட்டு போயேன்” என்றார் எரிச்சலோடு. நம் அப்பாவி அப்போதும் சளைக்கவில்லை. சும்மா எடுத்துக்கொண்டுபோவதா ? இதிலும் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது, நாம் ஏமாந்துவிடக்கூடாது என்று எண்ணியபடி ‘ அப்படீன்னா ரெண்டு சட்டை தருவியா?” என்றார் கூலாக.

 

கிராமத்து ’அப்பாவித்தனத்தை’ எடுத்துச் சொல்லும் இப்படியான கதைகள் உலகம் பூராவும் இருக்கின்றன. ரஷ்யாவும் அதற்கு விதிவிலக்கல்ல.கொடுங்கோன்மைக்குப் பெயர்போன ஜார் மன்னன் ரஷ்யாவை  ஆண்டுகொண்டிருந்த நேரம்.ஒரு கிராமத்து அப்பாவியும் அவனது இளம் மனைவியும் தங்கள் வயலுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பக்கமாக வந்த படை வீரன் ஒருவன் அவர்களைப் பார்த்துவிட்டான். அப்பாவியின் இளம் மனைவியை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறியில் குதிரையிலிருந்து குதித்து அந்த அப்பாவியைத் தாறுமாறாக அடிக்க ஆரம்பித்துவிட்டான். அந்த அப்பாவியின் மனைவியோ வீரனின் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள். உன் கணவனை உயிரோடு விடவேண்டுமென்றால் நீ எனக்கு இப்போது மனைவியாகவேண்டும் என்றான் வீரன். அவளது கதறலை அவன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தனது அங்கியைக் கழற்றி அந்த அப்பாவியிடம் கொடுத்து “ இதை அழுக்காகாமல் ஜாக்கிரதையாக வைத்திரு. இதில் புழுதி பட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டியபடி அந்த வீரன் அப்பாவியின் மனைவியின்மீது பாய்ந்து அவளை பலாத்காரம் செய்ய ஆரம்பித்துவிட்டான். கிராமத்து அப்பாவியோ அதைத் தடுக்க முயற்சிக்கவில்லை. எல்லாம் முடிந்து அங்கியை வாங்கி அணிந்துகொண்டு குதிரையில் ஏறி வீரன் போய்விட்டான். அவன் சென்று மறைந்ததும் அந்த கிராமத்து அப்பாவி துள்ளிக் குதித்து சிரிக்க ஆரம்பித்துவிட்டான். தனது கண் முன்னாலேயே மனைவியை ஒருவன் கெடுத்துவிட்டுப் போகிறான். அதைத் தடுக்காதது மட்டுமல்ல சிரித்துக் கும்மாளம் போடுகிறானே என்ன மனிதன் இவன் என்று பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ஆத்திரம். அவனை ஓங்கிக் கன்னத்தில் அறைந்து ‘’ மானம் கெட்டவனே ஏன்டா இப்படி சிரிக்கிறே? “ என்று அவள் கத்தினாள். அவன் கூலாகப் பதில் சொன்னான்: “ அந்த ஆள் என்னிடம் அங்கியைக் கொடுத்து அழுக்குப் படாமல் வைத்திருக்கச் சொன்னானில்லையா? அவன் உன்மீது பாய்ந்த நேரத்தில் நான் நன்றாக அந்த அங்கியைப் புழுதியில் போட்டுப் புரட்டி எடுத்துவிட்டேன். தனது அங்கி அழுக்கானது தெரியாமல் அதை அணிந்துகொண்டு போகிறான் அந்த முட்டாள் “ என்று மீண்டும் சிரிக்க ஆரம்பித்துவிட்டான் அந்த அப்பாவி.

 

இப்படியான அப்பாவிகள் இப்போதும் இருக்கவே செய்கிறார்கள். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்கப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பங்குச் சந்தைகளில் கடும் சரிவு. பொருளாதார மந்த நிலை என்று நிபுணர்கள் அதைக் குறிப்பிட்டார்கள். உடனே சில விமர்சகர்கள் மகிழ்ச்சியில் கூத்தாட ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வளவுதான்! அமெரிக்கா குளோஸ்! என்றார்கள். அப்படித்தான் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபோதும் அவர்கள் கொண்டாடினார்கள். பலவந்தம் செய்கிறவனைத் தடுக்கத் திராணியின்றி அவனது அங்கியை அழுக்காக்கிய அப்பாவியைப் போன்றவர்கள்தான் அவர்கள் என்கிறார் ஸ்லாவோஸ் சிசேக் என்ற சிந்தனையாளர் .ரஷ்யக் கதையில் வந்த வீரனோ பலவந்தம் செய்துவிட்டுப் போய்விட்டான். ஆனால் இன்றோ அவன் குடும்பமே நடத்திக்கொண்டிருக்கிறான்.  

 

( 08.07.2011ல் எழுதியது)

No comments:

Post a Comment