Thursday, September 11, 2014

அக்டோபர் – 12 செம்மொழி நாள் ஆய்வரங்கு


வணக்கம்


ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல்தேதியை செம்மொழி நாளாகக் கடைப்பிடிக்க கேரள அரசு முடிவுசெய்திருக்கிறது. மலையாள மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கொடுக்கப்பட்டதையடுத்து கேரள அரசு இதை அறிவித்திருக்கிறது. 


 கேரள மாநில கலாச்சாரத் துறையும், கேரள சாகித்ய அகாதமியும் இணைந்து மாவட்டம்தோறும் நிகழ்ச்சிகளை இதற்காக ஏற்பாடு செய்யவிருக்கின்றன. கேரள சாகித்ய அகாதமி மலையாளத்தில் இருக்கும் பழமையான ஆயிரம் நூல்களை எண்வயத் தொழில்நுட்பத்தின்மூலம் ( Digitisation)  பிரதியெடுத்து நூலகங்களுக்கு இலவசமாக வழங்க முடிவுசெய்திருக்கிறது. மொழிபெயர்ப்புக்கென தனியாக ஒரு பிரிவும் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தத் தகவல்களை கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் கே.சி.ஜோசப் தெரிவித்திருக்கிறார்.


 தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் வழங்கப்பட்டதுகுறித்துப் பெருமைபடப் பேசி மகிழும் நாம் அந்த அங்கீகாரம் கிடைத்த நாளை நினைவுகூரும் விதமாக எதையும் செய்யவில்லை என்பதை  நினைத்தால் வருத்தமே எஞ்சுகிறது.அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி  தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கும் ஆணையை  மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது( அரசாணை எண்: IV-14014/7/2004-NI-II dated 12.10.2004.) அந்த நாளை நாம் ஏன் கேரள அரசு செய்வதுபோல செம்மொழி நாளாகக் கடைபிடிக்கக்கூடாது?  மாநில அரசாங்கம்தான் இதைச் செய்யவேண்டும் என்பதில்லை.நாமே முனைந்து இதை முன்னெடுத்தாலென்ன? 


மணற்கேணி ஆய்விதழ் சார்பில் எதிர்வரும் அக்டோபர் 12 , ஞாயிறன்று ’ செம்மொழி நாள் ஆய்வரங்கு ‘ ஒன்றை விழுப்புரத்தில் ஏற்பாடுசெய்ய விரும்புகிறேன். தமிழ் மொழியைக் கொண்டாடுவதோடு மட்டுமின்றி அதை மேலும் வளப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை வகுப்பதாகவும் இந்த ஆய்வரங்கு அமையவேண்டும். 


இந்த ஆய்வரங்கில் பங்கேற்று ஆய்வுரை வழங்கிடுமாறு சிலரிடம் கேட்டிருக்கிறேன். இந்த ஆய்வரங்கைப் பயனுற நடத்துவதற்கு ஆலோசனைகளை வரவேற்கிறேன். 


   

அன்புடன்,

ரவிக்குமார்    

ஆசிரியர், மணற்கேணி

No comments:

Post a Comment