Sunday, September 7, 2014

வாசிப்பின் அரசியல்

ஆங்கிலத்தில் Historian of Books என்று சிலரை அழைக்கிறார்கள். Robert Darnton அதில் முக்கியமானவர். ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Roger Chartier குறிப்பிடத்தக்க இன்னொரு சிந்தனையாளர். அப்படியானவர்கள் தமிழில் இல்லை. வாசிப்பு குறித்த ஆழமான ஆய்வுகளும் இல்லை. அச்சுக் கலை, தமிழும் கிறித்தவமும் போன்ற நூல்களுக்கும்கூட ஒரு தொடர்ச்சி இல்லை. நண்பர் ஆ.இரா.வெங்கடாசலபதி முயன்றால் இந்த வெற்றிடத்தை ஓரளவுக்கு நிரப்பலாம். 


தமிழ்நாட்டிலிருந்த/ இருக்கும் lending libraries, circulation libraries குறித்த ஆய்வுகள் நம்மிடம் இல்லை. ஒரு புத்தகம் எத்தனை பிரதிகள் விற்கிறது என்பதைக்கொண்டு அதன் தாக்கத்தை மதிப்பிடுவதைக்காட்டிலும் அது எப்படி வாசிக்கப்படுகிறது உள்வாங்கப்படுகிறது என்பதை வைத்து அதன் தாக்கத்தை மதிப்பிடுவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து. அதிக பக்கங்கள் கொண்ட புதினங்களை வாங்குவோர் அனைவரும் அதைப் படிப்பதில்லை. பூமணியின் அஞ்ஞாடி நாவல் குறித்து நான் விசாரித்து அறிந்துகொண்ட செய்தி இது. அவரது பிறகு நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை இந்த நாவல் ஏற்படுத்தவில்லை. சுந்தரராமசாமியின் ஜேஜே சில குறிப்புகள் நாவலைவிட அவரது கடைசி நாவலான ஆண்கள், பெண்கள்... அதிகம் விற்றிருக்கலாம் ஆனால் அதை வாங்கியவர்கள் எல்லோரும் முழுமையாகப் படித்தார்கள் என்று சொல்லமுடியாது. அந்த நாவல் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதற்கு இதுவொரு காரணம் எனத் தோன்றுகிறது. 


புத்தகக் கண்காட்சி விற்பனை குறித்த தகவல்களில் பூசப்பட்டிருக்கும் பொய்களை உதிர்த்துவிட்டுப் பார்த்தால் உற்சாகம் தரும் செய்தி எதுவும் நமக்குத் தெரிவதில்லை. 


மணற்கேணி பதிப்பகம் வெளியிட்ட நீதிபதி கே. சந்துருவின் " அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள் ' என்ற நூல் கடந்த நான்கு மாதங்களில் ஏழாயிரம் பிரதிகள் விற்றுள்ளது. அதன் விற்பனையிலிருந்து இரண்டு லட்ச ரூபாயை திண்டிவனம் தாய்த் தமிழ்ப் பள்ளிக்கு அளித்திருக்கிறோம். தமிழ்நாட்டின் பலபகுதிகளில் சுமார் இருபது கூட்டங்கள் அந்த நூலுக்கென நடந்துள்ளன. ஆனால் தமிழ் சுயதம்பட்ட அறிவுஜீவிகள் அந்த நூலை வாசித்ததாகவும் தெரியவில்லை;  சிற்றிதழ்கள் என சொல்லப்படுபவற்றில் அந்த நூலுக்கு மதிப்புரையும் வெளியாகவில்லை. அப்படியிருக்கிறது நம் வாசிப்பு! 

No comments:

Post a Comment