Saturday, November 28, 2015

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: தமிழக அரசியல் கட்சிகளால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறதா? -ரவிக்குமார்



காங்கிரஸ் கட்சியில் நடந்துவரும் உட்கட்சி சண்டை மோசமான நிலையைத் தொட்டிருக்கிறது. மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் விஜயதாரணி எம்.எல்.ஏ வைத் தரக்குறைவாகப் பேசியதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. விஜயதாரணி தன்னை சாதிப்பெயரைச் சொல்லி அவமதித்ததாக அவர்மீது மகளிர் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் புகார் கொடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

உட்கட்சி சண்டை கட்சி அரசியலின் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்ட நிலையில் காங்கிரஸில் நடந்துவரும் சண்டைகள் வியப்பளிப்பவை அல்ல. ஆனால் இந்தச் சண்டையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுவதுதான் நமக்குக் கவலையளிக்கிறது. 

காங்கிரஸில் மட்டுமின்றி திமுகவின் உட்கட்சி சண்டையிலும் இதேபோல் வன்கொடுமைத் தடுப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்திலும் சேலம் மாவட்டத்திலும் திமுகவினரின் ஒரு பிரிவினர் எதிர்த் தரப்புமீது இப்படித்தான் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் புகார் அளித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது இந்தப் புகாரும் ஒரு காரணமாக சுட்டப்பட்டதை இங்கே நினைவுகூரலாம். 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உட்கட்சி சண்டையில் ஆயுதமாகப் பயன்படுத்துவது அந்த சட்டம் குறித்து செய்யப்பட்டுவரும் அவதூறுப் பிரச்சாரத்துக்கு வலுசேர்த்துவிடும். 

வன்கொடுமைத் தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இப்போது மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. அதற்காகத் தமிழ்நாட்டில் திமுகவோ காங்கிரஸோ ஒரு அறிக்கைகூட வெளியிட்டதில்லை. ஆனால் உட்கட்சி சண்டைக்கு மட்டும் அதைப் பயன்படுத்த இக்கட்சியினர் தயங்குவதில்லை. 

கட்சிப் பொறுப்புகளுக்கும் , MLA, MP, உள்ளாட்சி அமைப்புகள் என மக்கள் பிரதிநிதிகளாகவும் தேர்ந்தெடுக்கப்படும் தலித் சமூகத்தினர் அரசியல் கட்சிகளின் தலைமைகளால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் உணர்வார்கள். திமுகவில் சத்தியவாணிமுத்துவும், காங்கிரஸில் எல்.இளையபெருமாளும் அதற்குச் சான்றுகள். 

அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கும் தலித் சமூகத்தினருக்கு ஒரு வேண்டுகோள்!

நீங்கள் இடம்பெற்றிருக்கும் கட்சிகளில் தலித்  சமூகத்துக்கு உரிய மதிப்பும், பிரதிநிதித்துவமும் கிடைக்கப் பாடுபடுங்கள். அதைச் செய்யமுடியாவிட்டால்கூட பரவாயில்லை இப்படி உட்கட்சி சண்டையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்ய துணைபோகாதீர்கள். அது தலித் சமூகத்துக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம் என்பதை உணருங்கள். 

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களே! 

தலித் மக்களின் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உங்களது சுயநலத்துக்காகப் பயன்படுத்துவதைத் தயவுசெய்து நிறுத்துங்கள்!

Friday, November 27, 2015

அம்பேத்கரும் அரசியலமைப்புச் சட்டமும்:



தந்தி டிவியின் 'ஆயுத எழுத்து' விவாதத்தில் பங்கேற்றேன்
~~~~~~~~~~~~~~~~~~
அரசியலமைப்புச் சட்டம் குறித்த தந்தி டிவியின் ஆயுத எழுத்து விவாதத்தில் இன்று பங்கேற்றேன். அதில் நான் தெரிவித்த சில கருத்துகள்: 

Riddles of Rama and Krishna என்ற அம்பேத்கரின் நூலைத் தடைசெய்யவேண்டுமென்று போராடியவர்கள், மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கரின் பெயரை சூட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தவர்கள், 2000 ஆவது ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி எழுதுவதற்காகப் பாராளுமன்றத்தில்கூட தீர்மானம் நிறைவேற்றாமல் நிர்வாக ஆணையின் மூலம் வெங்கடாசலையா கமிஷனை அமைத்தவர்கள், இந்தப் பாராளுமன்ற முறையே வேண்டாம், அதிபர் ஆட்சிமுறை வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் போட்டவர்கள் இன்று அரசியலமைப்புச் சட்ட தினம் கடைபிடிக்கிறார்கள். 

இன்று பிரதமர் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. 

மகராஷ்டிர மாநில அரசு அம்பேத்கரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் ஆங்கிலத்தில் தொகுப்புகளாக வெளியிட்டுவந்தது. அதை இப்போது நிறுத்திவிட்டார்கள். தற்போது பாஜக அரசுதான் அங்கு உள்ளது. உண்மையிலேயே அம்பேத்கர்மீது அக்கறை இருந்தால் அந்தத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளியிட பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இட ஒதுக்கீட்டுக்கொள்கையில் மாற்றம் வேண்டும் என்பது உண்மைதான் தனியார் துறைக்கும், இதுவரை இட ஒதுக்கீடு இல்லாத துறைகளுக்கும், மாநிலங்களவை உள்ளிட்ட மேலவைகளுக்கும் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தவேண்டும். அத்தகைய மாற்றம் வரவேண்டும். 

இட ஒதுக்கீட்டுக்கு காலவரம்பு விதிப்பதற்கு முன்பு இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். கூட்டுகிற பெருக்குகிற வேலையைத் தவிர வேறு எந்தப் பதவியிலும் இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறையாக்கப்படவில்லை. நாடு சுதந்திரம் அடைந்தபோது அனைவருக்கும் கல்வி கொடுப்பதற்கும்கூடத்தான் பத்து ஆண்டு என கால நிர்ணயம் செய்தார்கள். 65 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது கட்டாயக் கல்வி சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக கல்வியறிவைக்கூட தர இயலாத அரசாங்கம் சமத்துவத்தை எப்படி வழங்கப்போகிறது? 1947 ல் நடந்ததைவிட இப்போது தலித்துகள்மீது அதிகமான தாக்குதல்கள் நடக்கின்றன. 

ஹிட்லருடன் பாஜகவுக்கு கருத்தியல்ரீதியில் நெருக்கம், காங்கிரசுக்கு நடைமுறை ரீதியான நெருக்கம். 

அரசியல் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதும் கூறப்பட்டிருக்கிறது. இரண்டுமுறை ஐந்தாண்டுத் திட்டங்களில் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் அதை செயல்படுத்தவில்லை. பாஜகவாவது அதைச் செய்ய முன்வரலாம்.

நொபோரு கரஷிமா காலமானார் - இ.அண்ணாமலை

சமூகம் எப்படி இயங்கியது, எப்படி மாறியது என்பது தெரியாமல் அரசியல் வரலாற்றை – ஆட்சி வரலாற்றை- புரிந்துகொள்ள முடியாது என்னும் கொள்கையில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்.

தமிழகத்தின் மன்னர் ஆட்சிகளைப் பேரரசுகளின் ஆட்சிகளாகப் பார்த்து வரலாறு எழுதிய பழைய தலைமுறை வரலாற்று ஆய்வாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தமிழக வரலாற்றைப் பார்த்தவர். இன்றைய தமிழ்த் தேசியத்துக்கு உரம் போடும் செய்திச் சுரங்கமாக அவர் தமிழக வரலாற்றைப் பார்க்கவில்லை.

அன்றைய தமிழ்ச் சமூகத்தின் வாழ்முறையை அறிந்துகொள்ளும் செய்திச் சுரங்கமாகவே அவர் கல்வெட்டுகளைப் பார்த்தார்.

அரசர்களின் போர் வெற்றிகளைப் பறைசாற்றும் சாதனமாக மட்டும் அவற்றை அவர் பார்க்கவில்லை.

கல்வெட்டுகளிலிருந்து அரச வெற்றிகள் பற்றி நாம் கேட்கும் உரத்த குரலை மட்டுமல்லாமல், அவற்றிலிருந்து வரும் முனகல்களையும் கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இந்த முனகல்களில்தான் சாதாரண மக்களின் குரலைக் கேட்கலாம்.

அதே நேரத்தில், தமிழகத்தின் வணிக உறவுகள், கலாச்சார உறவுகள் தூரத்து நாடுகளிலும் நிலைபெற்றிருந்ததை உலகுக்கு எடுத்துச் சொன்னார். சீனாவில் தமிழ்க் கல்வெட்டு இருப்பதைக் கண்டு சொன்னவர் கரஷிமா. அவருடைய ஆய்வு பெரும்பாலும் சோழர் காலத்தைச் சார்ந்தது. ஆனாலும், அது சிங்கநோக்காக சோழருக்கு முந்திய காலத்தையும் பிந்திய காலத்தையும் பார்க்க இன்றியமையாதது. கரஷிமாவின் விஜயநகர ஆட்சி பற்றிய ஆராய்ச்சியில் இதைக் காணலாம்.

Image copyrightsubbarayulu
Image captionநொபோரு கரஷிமா 

தமிழ் மீது காதல் கொண்ட கரஷிமா

இவருடைய ஆராய்ச்சியின் தரவுகள் பெரும்பாலும் கல்வெட்டுகளிலிருந்து வருபவை. தொடர்ந்து கல்வெட்டுகளில் மற்ற ஆய்வாளர்களும் இளம் தலைமுறை ஆய்வாளர்களும் ஈடுபடப் பல தரவுகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் கரஷிமா. இவற்றைப் பயன்படுத்தாமல் செய்யும் எந்தத் தமிழக வரலாற்று ஆராய்ச்சியும் மேலோட்டமானதாகவே இருக்கும்.

கரஷிமா தமிழ்க் கலாச்சாரத்தின்மீதும் மக்களின் மீதும் காதல் கொண்டவர். தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றித் தன்னுடைய ஜப்பானிய மாணவர்களுக்காக ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். இந்தப் படம் தமிழ்ப்படுத்தப்பட்டுத் தமிழர்களின் பார்வைக்குக் கொண்டுவரப்படவேண்டும்.

கரஷிமா உலகப் புகழ்பெற்ற டோக்கியோ பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். அந்தத் துறையில் தென்னிந்திய வரலாற்றைப் படிக்க இடம் தேடித் தந்தவர். இந்த ஆராய்ச்சிக்குப் பல ஜப்பானிய மாணவர்களை உருவாக்கியவர், ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெயர்போன தென்னிந்திய ஆய்வாளர்கள் பலர் உண்டு. அவர்களின் செல்வாக்கு இந்தியாவில் உள்ள வரலாற்று அறிஞர்களிடம் அதிகம், அந்த மேல்நாட்டு அறிஞர்களின் ஆராய்ச்சிப் போக்கில் கரஷிமாவின் அணுகுமுறையின் தாக்கத்தைக் காணலாம். இந்தத் தாக்கம் தமிழ் நாட்டு வரலாற்று அறிஞர்களிடமும் நேரடியாக ஏற்பட வேண்டும்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர்

கரஷிமா உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது நான் அதன் செயலாளாராக இருந்தேன். அப்போது அவரோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவர் மனம் செயல்படும் விதம் தெரியும். தஞ்சை மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிறகு அடுத்த மாநாட்டை நடத்தக் காலம் தாழ்த்தியதற்கு அவரிடம் வலுவான காரணங்கள் இருந்தது எனக்குத் தெரியும். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் எதிர்காலம் பற்றிச் சில சிந்தனைகள் அவரிடம் இருந்தன. தமிழ் ஆய்வை இக்காலத் தமிழ் அரசியலிலிருந்து பிரிப்பது அவற்றில் ஒன்று. அதையே அவருடைய வாழ்க்கைச் செய்தியாக நாம் கொள்ளலாம்.

கரஷிமா என்னுடைய அறிவுலக நண்பர் மட்டுமல்ல; குடும்ப நண்பரும்கூட. அவரை நான் கடைசியாக 2013 டிசம்பரில் டோக்கியோவில் அவர் வீட்டில் பார்த்தேன். ஜப்பானிய கலாச்சாரமும் தமிழ்க் கலாச்சாரமும் கலந்த வீடு அது. அவருடைய மனைவி தக்காக்கோவோடும் மூன்று மகன்களோடும் கரஷிமாவை இழந்த துயரத்தை பகிர்ந்துகொள்கிறோம்.

(கட்டுரையாளர் - டாக்டர் இ.அண்ணாமலை, வருகைதரு பேராசிரியர், தமிழ்த்துறை, சிகாகோ பல்கலைக்கழகம்)

Thursday, November 26, 2015

நொபோரு கரஷிமா: தமிழக வரலாற்றைத் துலக்கப்படுத்தியவர் - ரவிக்குமார்



வரலாற்றறிஞர் திரு நொபோரு கரஷிமா அவர்கள் இன்று காலமானார். சற்றுமுன் பேராசிரியர் திரு ஒய்.சுப்பராயலு அவர்களிடம் பேசி இதை உறுதிப்படுத்திக்கொண்டேன். " சிலநாட்களாக உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த ஆண்டு இந்தியாவுக்கு வருவதாகக் கூறியிருந்தார்.அதற்குள் இப்படியொரு துயரம் நேர்ந்துவிட்டது" என திரு ஒய்.எஸ் கூறினார். 

சோழர்கால வரலாற்றைக் கல்வெட்டுகளின் துணையோடு துல்லியமாக முன்வைத்ததில் அவரது பங்களிப்பு முக்கியமானது. திரு நொபோரு கரஷிமா அவர்களும் பேராசிரியர் ஒய்.எஸ் அவர்களும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகள் தமிழ் வரலாற்றை எழுதுவதில் மிகப்பெரிய தாக்கத்தை நிகழ்த்தியிருப்பதை எவரும் மறுக்கமுடியாது. 

' இந்திய கிராமங்கள் தன்னிறைவுபெற்ற குடியரசுகளாகத் திகழ்கின்றன' என்று மெட்கால்ஃப் கூறியதை வழிமொழிந்துதான் கார்ல் மார்க்ஸ் வரை பல்வேறு அறிஞர்களும் இந்தியாவைப்பற்றிப் பேசினார்கள். அதை சோழர்கால கல்வெட்டுகளை ஆதாரமாகக்கொண்டு நொபோரு கரஷிமா மறுத்தார். 

தமிழ்நாட்டில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் ராஜேந்திர சோழன் காலத்திலிருந்துதான் கிடைக்கின்றன என்று அவர் நிறுவினார். தமிழ்நாட்டில் சாதிகளின் வரிசை மாற்றியமைக்கப்பட்டு அதிகாரப் படிநிலை உருவாக்கப்பட்டது அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாதிருந்த  13 ஆம் நூற்றாண்டைச் சுற்றிதான் தான் நடந்தது என்று திருக்கச்சூர் கல்வெட்டுகளை ஆதாரமாகக்கொண்டு அவர் விளக்கினார். 

தமிழக வரலாறு இன்னும் பொய்களாலும் புராணங்களாலும் மூடுண்டே கிடக்கிறது. அறிவியல் அணுகுமுறையோடு தமிழக வரலாற்றை எழுதிய ஒருசிலருள் திரு நொபோரு கரஷிமா முக்கியமானவர். அவரது இழப்பு ஏற்படுத்தும் வெற்றிடத்தை ஈடுசெய்யக்கூடியவர்கள் இங்கே எவருமில்லை என்ற உண்மை அவரது மரணத்தைத் தாங்கமுடியாததாக்குகிறது. திரு கராஷிமா அவர்களுக்கு என் அஞ்சலி!

Wednesday, November 25, 2015

புதிய அரசியலமைப்புச் சட்டம்: திசை மாறிய ஏவுகணை - ரவிக்குமார்


~~~~~~~~~~
( 2007 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசியலமைப்புச் சட்டத்தைப் புதிதாக எழுதவேண்டும் என ஆளுநர் உரையில் குறிப்பிட்டபோது அதை எதிர்த்து நான் சட்டப்பேரவையில் பேசினேன். இந்தக் கட்டுரையை 21-1-2007 அன்று ஜூனியர் விகடனில் எழுதினேன்) 
~~~~~~~~~~~~~~~~

மாநில அரசு நிறைவேற்றப்போகும் நலத்திட்டங்களின் முன்னறிவிப்பாகவே பெரும்பாலும் ஆளுநர் உரை அமைந்திருக்கும். ஆளுநர் அதை வாசித்தாலும் அது மாநில அரசால் தயாரிக்கப்படுவது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். கடந்த ஆண்டு ஆளுநர் உரை முழுவதும் இலவசத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளால் நிரம்பியிருந்தது. இந்த ஆண்டும் அப்படித்தான் இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக இந்த ஆளுநர் உரை ஒரு ஏவுகணையை எடுத்து வீசியிருக்கிறது. ''அரசியல் சட்டத்தைப் புதிதாக இயற்ற வேண்டும்'' என்பது தான் அந்த ஏவுகணை.

பல நாடுகளில் அரசியலமைப்பு சட்டங்கள் புதிதாக எழுதப்பட்டிருப்பதாகவும், இந்திய அரசியல் சட்டத்தை திருத்தி எழுத வேண்டுமென அரசியல் கட்சிகள், சட்ட வல்லுநர்கள் பலர் கோரி வருவதாகவும், ஆளுநர் தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்த கோரிக்கையை அறிஞர் அண்ணா மாநிலங்களவையில் எழுப்பினார் எனவும், இதுவரை அரசியலமைப்பு சட்டத்தில் ஏறத்தாழ 100 திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன என்றும், கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார பரிமாணங்களும், உழைக்கும் வர்க்கத்தின் தேவைகளும் முற்றிலுமாக மாறிவிட்டன என்றும் பல்வேறு காரணங்களை ஆளுநர் தமது உரையில் குறிப்பிட்டிருந்த போதிலும் தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாகவே இப்படியரு தீவிரமான நிலையை தமிழக அரசு எடுத்துள்ளது எனத் தோன்றுகிறது.

''பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் தாம் போராடிப் பெற்றிடும் சமூக நீதியைப் பேணிக் காப்பதற்கும், மேலும் சிறுபான்மையினர் உரிமை மற்றும் பெண்ணுரிமை உள்ளிட்ட சமூக நீதியை உறுதி செய்வதற்கும் கம்பி மீது நடப்பதைப் போன்ற நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்'' என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் புதிய அரசியலமைப்புச் சட்டம் வேண்டும் என்கிற தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு உண்மையான காரணம்.

தற்போது இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குக் காரணம் நமது அரசியலமைப்பு சட்டமா? என்ற கேள்வி இங்கே எழுகிறது. உலக நாடுகளிலுள்ள அரசியலமைப்பு சட்டங்களிலேயே மிகவும் விரிவான சட்டம் நம்முடையது தான். பல நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து, நமது நாட்டுக்கு ஏற்ற ஜனநாயக அமைப்பை நிறுவும் விதமாக அதை அம்பேத்கர் இயற்றினார். நம் நாட்டின் குடிமக்களுக்கு நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நமது அரசியலமைப்பு சட்டம் உறுதியளித்துள்ளது. அதன் முகவுரையிலேயே (Preamble) இவை கூறப்பட்டுள்ளன. அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று இதற்கு முன்பும் பலபேர் பேசியுள்ளனர். பிஜேபி போன்ற அரசியல் கட்சிகளும் கோரி வந்துள்ளன. ஆனால் இந்த அரசியல் அமைப்பு சட்டமே வேண்டாம், புதிதாக எழுத வேண்டும் என்று மாநில அரசே சட்டமன்றத்தில் அதுவும் ஆளுநர் மூலமாக கோரிக்கை விடுப்பது இதுதான் முதல் முறை எனத்தோன்றுகிறது.

மத்தியில் பிஜேபி தலைமையிலான ஆட்சி நடந்த போது அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அந்த ஆட்சியில் திமுக உள்ளிட்ட 24 கட்சிகள் இடம் பெற்றிருந்தன. கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதல் எதையும் பெறாமலேயே, அரசியல் அமைப்பு சட்டத்தைத் திருத்துவது பற்றிய அறிவிப்பை குடியரசுத் தலைவரின் உரை மூலமாக அன்றைய பிஜேபி அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிப்ரவரி 2000த்தில் அதற்கென ஒரு தேசிய கமிஷனும் அமைக்கப்பட்டது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வெங்கடாசலையா அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். வழக்கறிஞர்கள் சோலி சொராப்ஜி, பராசரன், முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மா உள்ளிட்ட பத்து உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

அந்த கமிஷனின் நோக்கம் அரசியலமைப்பு சட்டத்தை மறு ஆய்வு செய்வது தானே தவிர புதிதாக எழுதுவதல்ல என்று அப்போது பிஜேபி அரசு அறிவித்தது. ஆனால் அதைக்கூட காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் ஏற்கவில்லை. குடியரசு தினப் பொன்விழாவில் உரையாற்றியபோது அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தும் பிஜேபி அரசின் முயற்சியை கடுமையாக விமர்சித்தார்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ஆம் நாளை ''அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு நாளாக'' கடைபிடிக்குமாறு அறிவித்த காங்கிரஸ் கட்சி அதற்காக நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்தியது. இந்தியாவெங்கும் தலித் இயக்கங்களும் களமிறங்கின. இந்த எதிர்ப்புகளின் காரணமாக அந்தக் கமிஷனின் பரிந்துரைகள் கைவிடப்பட்டன.

அன்று தமிழக சட்டப்பேரவையிலும் அதுபற்றிய விவாதங்கள் எழுந்தன. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் அப்போது கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் கலைஞர் அவர்கள் ''சிறுபான்மையினர் உரிமைகளுக்கோ, மதச்சார்பின்மைக்கோ, மாநிலங்களின் உரிமைகளுக்கோ அரசியலமைப்பு சட்ட மறுஆய்வு கமிஷனால் ஆபத்து வந்தால் அதை திமுக எதிர்க்கும்'' என்று தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்துவதை திமுக அப்போது ஏற்றுக் கொண்டிருந்தாலும் அதைப் புதிதாக எழுத வேண்டும் என்று அன்றைக்கு கோரவில்லை. இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் அதன் நிலைப்பாடு இப்படி மாறுவதற்கு இடஒதுக்கீடு விஷயத்தில் உச்சநீதிமன்றம் அளித்து வரும் தீர்ப்புகளும், ஜனநாயகத்தின் பிற அமைப்புகளை விட நீதித்துறையே அதிக அதிகாரம் கொண்டது என்பது போல ஒரு நிலை உருவாகி வருவதும் தான் காரணம் என்று கூறலாம்.

நீதித்துறையே அதிக அதிகாரம் கொண்டது என அரசியலமைப்பு சட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. பல்வேறு தீர்ப்புகளின் மூலமாக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்குப் புதிது புதிதாக விளக்கங்களைக் கூறி மெல்ல, மெல்ல தனது மேலாண்மையை இன்று நீதித்துறை நிலை நாட்டிக்கொண்டுள்ளது. சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தைத் தனக்குக் கீழே இருத்தி வைக்கும் நீதித்துறையின் முயற்சியே இன்று ஆட்சியாளர்களை இன்னொரு துருவத்தை நோக்கி விரட்டியுள்ளது.

ஆனால் இவை எதுவும் அரசியலமைப்புச் சட்டத்தைப் புதிதாக எழுத வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி விடாது. நமது அரசியலமைப்புச் சட்டமானது மிகவும் நெகிழ்ச்சித் தன்மை (flexibility) கொண்டது. அதனால் தான் இத்தனை திருத்தங்களையும் அது ஏற்றுக் கொண்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை நமது பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் போது ''நெகிழ்ந்து கொடுப்பதாக இருப்பது தான் இதன் சிறப்பு'' என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். ''இது செயல்படக்கூடியது, இது நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது, அமைதி காலத்திலும் சரி, யுத்த  காலத்திலும் சரி இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்திக் கட்டிக்காப்பாற்றும் ஆற்றல் கொண்டது'' என அரசியலமைப்புச் சட்டத்தை அவர் வர்ணித்தார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ள கிரான்வில் ஆஸ்டின் என்பவர்,  (The Indian Constitution: Corner stone of a Natrion) கூறியிருப்பதை இங்கே சுட்டிக்காட்டுவது பொருந்தும்: 
''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் இந்த நாட்டின் குறிக்கோள்களையும் அவற்றை அடைவதற்கான வழிமுறைகளையும் அதற்கான அமைப்புகளையும் அதில் ஏற்படுத்தியுள்ளனர். ஒருமைப்பாடு, சமூகப்புரட்சி, ஜனநாயகம் ஆகிய மூன்றும் அதன் பிரிக்க முடியாத அங்கங்களாகும். இந்த மூன்றையும் தனித்தனியே அடைந்து விட முடியாது... கடந்த ஐம்பது ஆண்டுகளின் அனுபவத்தில் பார்க்கும் போது இந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்த நாட்டின் குறிக்கோள்களை, அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். இந்த அரசியலமைப்பு சட்டம் மிகச்சிறப்பாக இந்த நாட்டுக்கு சேவை புரிந்துள்ளது'' என்று கிரான்வில் ஆஸ்டின் கூறியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் இன்று ஓரளவு காப்பாற்றப்படுவதற்கும், இந்த நாடு இன்றும மதச்சார்பின்மையைத் தனது கொள்கையாகக் கொண்டிருப்பதற்கும் நமது அரசியலமைப்புச் சட்டம் தான் காரணம். அதனால் தான் இந்துத்துவவாதிகள் அதை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று படாதபாடு படுகிறார்கள். இன்று தமிழக அரசு எடுத்துள்ள நிலை அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக மாறிவிடக்கூடாது.

மாநிலங்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்றார்கள். மீண்டும் அதை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் வலியுறுத்தி வருகிறார். அதுபோலவே காவிரி பிரச்சனையிலும், முல்லைப்பெரியாறு சிக்கலிலும் தமிழகத்தின் உரிமைகள் இன்று கேள்விக்குறியாகி உள்ளன. ஆனால் இவற்றை இப்போதுள்ள அரசியலமைப்புச் சட்ட எல்லைக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள முடியும். மத்தியில் கூட்டணி அரசு என்பது யதார்த்தமாகி விட்ட சூழலில், மத்திய அரசின் மீது மாநில கட்சிகளின் செல்வாக்கு முன்பு எப்போதையும் விட கூடுதலாக இருக்கும் இன்றைய நிலையில் முன்பு திமுக வலியுறுத்திய மாநில சுயாட்சியின் கீழ் சொல்லப்பட்ட உரிமைகளைக் கூட  அதனால் இப்போது பெற்று விட முடியும். அதற்காக இன்றுள்ள அரசியலமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிந்து விட வேண்டும் என்பது அவசியமில்லை.

அரசியலமைப்பு சட்டம் என்பது மாற்றவே கூடாத 'புனித நூல்' அல்ல. ஆனால் எதற்காக அதை மாற்றப்போகிறோம் என்பது தான் முக்கியம். தற்போது தமிழக அரசு கூறியுள்ள காரணங்கள் புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியே தீரவேண்டும் என்பதற்கான நியாயத்தை வழங்கவில்லை. 

'அரசியலமைப்பு சட்டத்தை எரிப்பேன்' என அம்பேத்கரே கூறியிருக்கிறாரே எனச் சிலர் சொல்லக்கூடும். ''இந்த அரசியலமைப்பு சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுமேயானால் அதை எரிக்கிற முதல் ஆளாக நானே இருப்பேன்'' என்றுதான் அவர் கூறியிருக்கிறார். அரசியல் அமைப்பு சட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசிய போது அவர் கூறிய இறுதி வார்த்தைகளை இத்துடன் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். ''புதிய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் ஏதேனும் தவறுகள் இழைக்கப்பட்டால் அதற்குக் காரணம் இந்த அரசியலமைப்பு சட்டம் மோசமானது என்பதல்ல, அதை நடைமுறைப்படுத்துபவர்கள் மோசமானவர்கள் என்பதே அதற்குக் காரணமாக இருக்கும்'' என்று அம்பேத்கர் கூறினார். அந்த வார்த்தைகள் இப்போதும் பொருத்தமாகத்தான் இருக்கின்றன.

Tuesday, November 24, 2015

வரலாறு சொல்லும் 'வரலாறு'

இந்தியாவின் வரலாற்றை எழுதுவதற்கு முதன்மைத் தரவாக விளங்கும் கல்வெட்டுகள் தமிழ்நாட்டில்தான் அதிகம் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் படியெடுத்துத் தொகுத்து ஆவணப்படுத்தும் பணி அரசாங்கத்துக்கு முக்கியமானதாகப் படவில்லை. அரசாங்கத்தின் தொல்லியல் துறையைவிட இதில் ஆர்வமுள்ள தனி நபர்களின் பங்களிப்பே அதிகம். அதற்கு சாட்சியாக இருப்பது 'வரலாறு' என்னும் இதழ். 

1993 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட அந்த இதழ் இப்போது வெள்ளிவிழா கண்டு 25 ஆவது இதழ் வெளிவந்திருக்கிறது. டாக்டர் ராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் ஆவணம் இதழ் துவக்கப்பட்டு இரண்டு இதழ்கள் வெளிவந்த பிறகு அதன் ஆசிரியர் குழுவினரிடையே ஏற்பட்ட கருத்து மாறுபாடு காரணமாக இந்த வரலாறு இதழ் துவக்கப்பட்டதென திரு கலைக்கோவன் குறிப்பிட்டிருக்கிறார். அவர்தான் இதன் பொறுப்பாசிரியர். திருமதி நளினி, திருமதி அகிலா ஆகியோர் இணையாசிரியராகவும், துணையாசிரியராகவும் இருக்கின்றனர். இந்த மூவர் குழுவின் பணி மலைக்க வைக்கிறது. 

வரலாறு 25 ஆவது இதழில் 13 புதிய கல்வெட்டுகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. முத்தரையர் காவல் உரிமைச் செப்பேட்டில் இருக்கும் செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது. அது நீண்டதொரு வரலாற்றை சிறு கதையின் சுவாரசியத்தோடு கூறுகிறது. 

திருச்சிராப்பள்ளி மாவட்ட கோயில் கட்டடக் கலை என்ற தலைப்பில் மு.நளினி ஆற்றிய சொற்பொழிவு நிறைய தகவல்களைக் கூறுகிறது.  குடைவரை, கற்றளி,மாடக்கோயில் என மூன்றாக வகைப்படுத்திக்கொண்டு அம்மாவட்டத்தில் இருக்கும் கோயில்கள் குறித்து அவர் விவரித்திருக்கிறார். திருச்சிராப்பள்ளியில் இரண்டு, வெள்ளாறையில் இரண்டு, பைஞ்ஞீலியில் ஒன்று என இந்த மாவட்டத்தில் ஐந்து குடைவரைகள் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். கிபி ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்தக் குடைவரைகளை நாமும் பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது இந்தச் சொற்பொழிவு. 

இந்த இதழில் திரு கலைக்கோவனின் நாட்குறிப்புகளின் தொகுப்பு போன்ற ஒரு கட்டுரை உள்ளது. அது அதிகமான பக்கங்களை ஆக்கிரமித்திருப்பது இதழின் நோக்கத்தை நீர்த்துப்போகச்செய்து திசைதிருப்புவதாக உள்ளது. 

கல்வெட்டுகளில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த இதழை அறிவார்கள். மற்றவர்களும்கூட இதைப் படித்துப் பயனுறவேண்டும். 

Monday, November 23, 2015

ஆங்கிலத்தில் அகநானூறு

திரு ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் அரும்பணி
-ரவிக்குமார்
~~~~~~~~~~~~

திரு ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் பல்லாண்டுகால கடும் உழைப்பின் விளைபொருளாக அகநானூறு ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது. புதுச்சேரி பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம் (IFP) அதை மிகவும் சிறப்பாக, குறைந்த விலையில் ( 1000/- ரூபாய்) வெளியிட்டிருக்கிறது. 

இன்று சுமார் நான்குமணி நேரம் ஒதுக்கி அந்த நூலைப் படித்தேன். மழைக்காலத்தில் ஈரக் காற்றுடன் அலைகளின் இரைச்சல் கசிந்து உள்நுழையும் நூலகத்தில் கழிந்த அந்த நான்குமணி நேரம் - வாழ்வின் பயனுள்ள காலம். அதற்காக திரு ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கு நன்றி. 

" எனது மொழிபெயர்ப்பில் வெளிப்படும் குரல் என்னுடையதாக இருக்கவேண்டும் என்பதால் இந்தப் பிரதியின் பிற மொழிபெயர்ப்புகளைப் படிப்பதை நான் தவிர்த்துவிட்டேன்" என முன்னுரையில் திரு ஜார்ஜ் ஹார்ட் குறிப்பிட்டிருக்கிறார். அது ஒருவிதத்தில் சரியென்றே எனக்குத் தோன்றுகிறது. 

" புறநானூறு மொழிபெயர்ப்பின்போது Hank Heifetz ம் நானும் கையாண்ட அணுகுமுறையைத்தான் இப்போதும் நான் பின்பற்றினேன். தமிழில் எத்தனை வரிகள் உள்ளனவோ அதே எண்ணிக்கை ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இருக்கும்படி கவனமாகப் பார்த்துக்கொண்டேன்" எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

திரு மா.இலெ.தங்கப்பாவின் Love stands alone நினைவுக்கு வர அதையும் எடுத்து திரு ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் மொழிபெயர்ப்போடு ஒப்பிட்டுப்பார்த்தேன். அகநானூறிலிருந்து ஆறு பாடல்களைத் தங்கப்பா மொழிபெயர்த்திருக்கிறார்( பாடல் எண்கள்: 134,136,224,354,355,395) இரண்டு மொழிபெயர்ப்புகளையும் ஒருசேர படித்தபோது ஜார்ஜ் ஹார்ட்டின் மொழிபெயர்ப்பில் எனது வாசக மனம் நிலைகுத்தி நின்றது. (ஆராய்ச்சியாளர்கள் வேறு முடிவுக்கு வரக்கூடும் ) 

திரு ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கும் , இந்த மொழிபெயர்ப்பை வெளியிட்ட புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்துக்கும் பாராட்டுகள்.

Wednesday, November 18, 2015

இலங்கையில் இரகசிய சித்ரவதைக் கூடம் - ஐ.நா.குழு கண்டுபிடிப்பு


தமிழ் கைதிகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு 
இந்தியா அழுத்தம் தரவேண்டும்

தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

 இலங்கையில் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கடற்படைத் தளத்தில் ரகசிய சித்ரவதைக்கூடம் இருப்பதை ஐ.நா. ஆய்வுக் குழு கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளது. 

இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றி ஆய்வு நடத்துவதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.குழு இலங்கைக்கு வந்து கடந்த சில நாட்களாக ஆய்வு செய்தது.  அப்போது கிழக்கு மாகாணத்தில் இருக்கும் கடற்படைத் தளம் ஒன்றில் இரகசிய சித்ரவதைக்கூடம் இருந்ததை அக்குழு கண்டுபிடித்து அம்பலப்படுத்தியுள்ளது.  இதைப் போன்ற சித்ரவதைக் கூடங்கள் இலங்கையின் ஏனைய பிற பகுதிகளிலும் இருக்கக்கூடும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இலங்கையில் போர் முடிவுற்றதற்குப் பிறகு ஏராளமான தமிழ் இளைஞர்களும் இளம்பெண்களும் கடத்தப்பட்டு காணாமலடிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் பலர் சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  சிலர் இன்னும் இரகசிய இடங்களில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.  சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட மனித உரிமை அமைப்பு ஒன்றின் அறிக்கை இலங்கையில் 50க்கும் மேற்பட்ட இரகசிய சித்ரவதைக் கூடங்கள் இருக்கின்றன என்று தெரிவித்தது.  இப்போது ஐ.நா. குழுவே அதை உறுதிப்படுத்தியிருப்பது ஈழத் தமிழர்களின் அச்சமும் குற்றச்சாட்டும் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இலங்கைச் சிறைகளில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை விடுவிக்கச் சொல்லி கடந்த சில நாட்களாக ஈழத் தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் உண்ணாநிலை போராட்டம் உள்ளிட்ட பல்வேறு அறப்போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு மாகாண முதலமைச்சரும் அதனை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் சித்ரவதைக்கூடம் பற்றிய ஐ.நா.குழுவின் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு இந்திய அரசு இப்போதாவது அழுத்தம் தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.  தமிழக அரசும் இது குறித்து இந்திய பிரதமருக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

Friday, November 6, 2015

தமிழ் உரிமைப் போராளி ந. அரணமுறுவல் மறைந்தார் - ரவிக்குமார்



திரு அரணமுறுவல் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை இன்று காலையில் அறிந்து அதிர்ச்சியுற்றேன். சர்க்கரை நோய் இருந்தபோதிலும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இப்படி அகாலத்தில் அவர் வாழ்வு முடியுமென நான் நினைக்கவில்லை. 

1980- 1990 களில் சென்னைக்குச் சென்றால் திருவல்லிக்கேணி பகுதியில் அவரைப்போய்ப் பார்ப்பது வழக்கம். பாமக துவக்கப்பட்ட காலத்தில் அக்கட்சியின்மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களில் அவரும் ஒருவர். தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு மலரை அவர்தான் தயாரித்தார். அப்போது சில நாட்கள் நானும் அவரோடு இருந்து மெய்ப்புப் பார்த்தேன். திரு குணா அவர்களின் திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலை அச்சிட்டதும் அவர்தான். அந்த நேரத்தில் அந்த நூலின் உள்ளடக்கம் குறித்து அவரோடு கடுமையாக விவாதித்திருக்கிறோம். 

நிறப்பிரிகை சார்பில் நாங்கள் நடத்திய புலம்பெயர்ந்த தமிழர் மாநாட்டின் முதல் ஆலோசனைக் கூட்டம் அவர் வீட்டில்தான் நடந்தது. அப்படி பல கூட்டங்கள் அவர் வீட்டில் நடந்ததுண்டு. 

ஈழப் போராளித் தலைவர்கள் பலரோடும் அவருக்கு நெருங்கிய நட்பிருந்தது. அவர்களால் பலனடைந்தவர் அல்ல அவர், அவர்களுக்குப் பயன்பட்டவர். அந்த அனுபவங்களை எழுதுங்கள் என நான் பலமுறை வலியுறுத்தினேன். அப்படி எழுதியிருந்தால் ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின் தளமாக தமிழகம் இருந்த காலத்து வரலாறு ஓரளவு ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். 

தனது கருத்துகளில் தெளிவும் அதனால் உறுதியும் கொண்டிருந்தவர். பெயருக்குப் பொருத்தமாக எப்போதும் சிரிப்பு மாறாத முகம். தளராத உழைப்பு. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் பணியாற்றியபோது அடிக்கடி பார்க்கிற வாய்ப்பு இருந்தது. அதன்பின்னர் அவரைப் பார்க்கும் தருணம் வாய்க்கவில்லை. 

அவரது மரணச் செய்தி அறிந்து பேராசிரியர் கல்யாணியிடம் பேசினேன். இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தேன். அதற்குச் சற்று நேரத்திலேயே  அன்னை மாரியம்மாள் அவர்களின் மரணச் செய்தி வந்துவிட்டது. 

தமிழ்வழிக் கல்வி, தமிழ் மொழியுரிமை, ஈழ விடுதலை முதலான களங்களில் அவர் போல வேறு எவரும் தொடர்ச்சியாக உழைத்திருக்கமாட்டார்கள். திரு அரணமுறுவல் அவர்களுக்கு எனது அஞ்சலி

Thursday, November 5, 2015

அன்னை மாரியம்மாள் : புதிய புறநானூற்றுத் தாய் - ரவிக்குமார்



மதிமுகவின் பொதுச்செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணப்பாளருமான திரு வைகோ அவர்களின் அன்னையார் மாரியம்மாள் அவர்கள் இன்றுகாலை உயிர்நீத்தார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன். 

ஒரு மாதத்துக்கு முன்னர் கலிங்கப்பட்டியில் திரு வைகோ அவர்களின் உதவியாளர் சந்துரு அவர்களின் இல்லத் திறப்புவிழாவுக்குச் சென்றிருந்தபோது அன்னையாரை சந்தித்து வாழ்த்துபெற்றோம். 

ஈழத்துக்கான போராட்டங்களிலும், மது ஒழிப்புப் போராட்டக் களங்களிலும் தனது வயதைப் பொருட்படுத்தாமல் முன்னணியில் நின்றவர் அன்னை மாரியம்மாள் அவர்கள். திரு வைகோ அவர்களது உணர்வின் ஊற்று, உள்ளுறை ஆற்றல் அன்னை மாரியம்மாள் அவர்கள்தான் என்பதை அவரோடு பழகியவர்கள் அறிவார்கள். ஈன்று புறந் தருதல் மட்டுமின்றி சான்றோனாக்கி, வேல் எடுத்துக் கொடுத்துப் போராளியாக வளர்த்தெடுப்பதும் தாயின் கடமைதான் எனப் புதிய புறநானூற்றுத் தாயாகத் திகழ்ந்தவர். 

அன்னை மாரியம்மாள் அவர்களுக்கு என் அஞ்சலி. அவரை இழந்து வாடும் அண்ணன் திரு வைகோ அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

தனித் தமிழீழம் அடைவதும், தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதும் அன்னை மாரியம்மாள் அவர்களின் நிறைவேறாக் கனவுகள். அவற்றை நிறைவேற்ற உறுதியோடு உழைப்பதே அவருக்கான பொருள்பொதிந்த அஞ்சலியாக இருக்கும்.


Wednesday, November 4, 2015

ஈழத்துத் தமிழறிஞர் ஆ.வேலுப்பிள்ளை சிறப்பிதழ்



ஈழத்தைச் சேர்ந்த தமிழறிஞர் திரு ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் நவம்பர் 2 ஆம் நாள் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் மரணமடைந்தார் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள். 

 தமிழ்ச் செவ்வியல் இலக்கியம், இலக்கணம்,கல்வெட்டியல்,தொல்லியல்,சமய வரலாறு எனப் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த புலமைகொண்டிருந்தவர். தமிழியல் ஆய்வுகளில் அவரது பங்கு மகத்தானது.அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக மணற்கேணி 32 ஆவது இதழ் அறிஞர் ஆ.வேலுப்பிள்ளை சிறப்பிதழாக 2015 டிசம்பர் மாதத்தில்  வெளிவரவுள்ளது. அதில்  கட்டுரை  எழுத விரும்புவோர் தமிழியலுக்கான அவரது பங்களிப்புகள் குறித்தும் அவரோடு, அவரது படைப்புகளோடு தங்களுக்கிருந்த உறவு குறித்தும்  எழுதலாம். 

500 முதல் 750 சொற்கள் வரையிலும் உங்கள் கட்டுரை அமையலாம். யூனிகோடு அல்லது பாமினி  எழுத்துருவில்  கட்டுரையை தட்டச்சு செய்து manarkeni@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.11.2015 க்குள் அனுப்புமாறு வேண்டுகிறேன். 

அன்புடன்
ரவிக்குமார்
ஆசிரியர்,மணற்கேணி