Sunday, April 2, 2017

வார்ஸான் ஷைர் கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்

1. 

எமது ஆண்கள் எங்களுக்குச் சொந்தமில்லை
ஒருநாள் பிற்பகலில் வீட்டைவிட்டுச் சென்றார் என் அப்பா, அவர் எனக்குச் சொந்தமில்லை

சிறையிலிருக்கிறான் என் சகோதரன், அவன் எனக்குச் சொந்தமில்லை.எனது மாமன்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள், தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார்கள், அவர்கள் எனக்குச் சொந்தமில்லை

எனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் மிகையாக நடந்துகொண்டதற்காக அல்லது எதிர்பார்த்த அளவு இல்லாமல்போனதற்காக தெருவில்வைத்து குத்திக்கொல்லப்பட்டார்கள், அவர்கள் எனக்குச் சொந்தமில்லை. நாங்கள் காதலிக்க முயன்ற ஆண்கள் சொன்னார்கள்: ' நாங்கள் ஏராளமான இழப்புகளை சுமந்துகொண்டிருக்கிறோம், மிகவும் கறுப்புத்தனத்தை அணிந்துகொண்டிருக்கிறோம், இங்கே மிகவும் சுமையாக இருக்கிறோம், நேசிப்பதற்குப் பொருத்தமின்றி மிக மிக துயரத்திலிருக்கிறோம்'. பிறகு அவர்களும் போய்விட்டார்கள், நாங்கள் அவர்களுக்காக துக்கம் அனுஷ்டிக்கிறோம். 

இதற்குத்தான் நாங்கள் இருக்கிறோமா? 
செத்துப்போனவர்களை
பிரிந்துபோனவர்களை
போலீஸால் பிடித்துச்செல்லப்பட்டவர்களை
போதை மருந்துக்கு,
நோய்களுக்கு,
வேறு பெண்களுக்குப்
பலியானவர்களை 
சமையலறையில் அமர்ந்தபடி, விரல்விட்டு எண்ணிக்கொண்டிருப்பதற்கா இருக்கிறோம்? 

இதில் எந்த அர்த்தமும் இல்லை
பாருங்கள் உங்கள் சருமத்தை, அவளது வாயை, இந்த உதடுகளை, அந்த கண்களை, அடக் கடவுளே, அந்த சிரிப்பைப் பாருங்கள்.

நம் வாழ்வில் அனுமதிக்கத்தக்க ஒரே இருள் இரவில் வருவதுமட்டும்தான் 
அப்போதும்கூட நம்மிடம்
நிலவு இருக்கும் 

2.

உங்களோடு கொண்டுவந்தீர்கள் யுத்தத்தை 
நீங்கள் அறியாமலேயே, அது இருக்கிறது
உங்கள் சருமத்தில், அவசரமாகத் திணிக்கப்பட்ட சூட்கேஸ்களில், புகைப்படங்களில், அதன் வாசனை கலந்திருக்கிறது உங்கள் கேசத்தில், நகங்களில், 
இருக்கக்கூடும் அது உங்கள் ரத்தத்தில் 

சிலநேரம் நீங்கள் வந்தீர்கள் குடும்பத்தோடு
சிலநேரம் ஒன்றுமே இல்லாமல், உங்களின் நிழல்கூட இல்லாமல்
புதிய மண்ணில் கால் பதித்தீர்கள் கரகரப்பாய் பேசும் ஒரு பேயைப்போல
மொடமொடத்த ஜீன்ஸும் பரிதவிக்கும் புன்னகையும் அணிந்து, 
அந்த மண்ணோடு பொருந்திக்கொள்ளத் தயாராக, 
கடுமையாக உழைக்கத் தயாராக, 
யுத்தத்தை
ரத்தத்தை மறப்பதற்குத் தயாராக 

யுத்தம் அமர்ந்திருக்கிறது
உங்கள் வரவேற்பறையின் மூலையில், 
உங்களோடு சேர்ந்து சிரிக்கிறது
டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, 
நிரப்புகிறது உங்கள் உரையாடலின் இடைவெளிகளை, தொலைபேசியில் பேசும்போது எழும் மௌனத்தை, 
காரணங்களைத் தருகிறது
ஒரு சூழலிலிருந்து,
கூட்டங்களிலிருந்து, மனிதர்களிடமிருந்து, நாடுகளிலிருந்து, காதலிலிருந்து வெளியேறுவதற்கு; 
யுத்தம் படுத்திருக்கிறது
உங்களுக்கும் உங்கள் காதலருக்கும் நடுவில், நிற்கிறது குளிக்கும்போது உங்களுக்குப் பின்னால், உங்கள் வாயைத் திறந்துபார்த்துவிட்டு பதறிப் பின்வாங்குகிறார் பல் மருத்துவர் 
அவர் யுத்தத்தை அங்கே பார்த்திருக்கக்கூடும், எவ்வளவு ரத்தம். 

நீங்கள் அறிவீர்கள் சமாதானத்தை, நீண்ட யுத்தத்தில் பிழைத்த எவரொருவரும் அறிவதுபோல, 
புரிந்துகொள்கிறீர்கள் அதை 
ஏனெனில் எல்லாவற்றிலும் கலந்திருக்கிறது நிகழக்கூடிய யுத்தத்தின் நறுமணம், எத்தனை எளிதாக ஒரு யுத்தம் வெடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியும், அமைதியாக ஒரு தருணம், அடுத்தது ரத்தம். 

யுத்தம் வண்ணமயமாக்குகிறது உங்கள் குரலை, கதகதப்பூட்டுகிறது. நீங்கள் கொன்றவரா அல்லது இழந்தவரா என்பதைத்தெரிந்துகொள்ள எந்த ஆர்வமும் இல்லை. எவரும் கேட்கப்போவதில்லை, சிலவேளை நீங்கள் இரண்டுமாகவும் இருக்கலாம். 
சமீபகாலத்தில் நீங்கள் எவரையும் முத்தமிட்டதில்லை. 
உங்களுக்கு எதை ருசித்தாலும் 
ரத்தத்தின் சுவையே தெரிகிறது. 

* வார்ஸான் ஷைர் ( Warsan Shire) கென்ய நாட்டில் பிறந்த சோமாலிய கவிஞர். தற்போது லண்டனில் வாழ்கிறார்.நிறவெறி, யுத்தம், புலம்பெயர் வாழ்வின் ரணங்கள் முதலானவற்றை பெண்ணிய பார்வையில் பேசுகின்றன இவரது கவிதைகள்

No comments:

Post a Comment