Monday, April 10, 2017

லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்



1. 

சுதந்திரம், இனிமை, அற்புதம்

சொல்வதற்கு இப்படி பல வார்த்தைகள் உள்ளன 

எனது இதயத்தின் நரம்புகளில் எல்லா நாட்களும் எல்லா நேரமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது

சுதந்திரம் 

விடுதலை என்பது போன்ற சில வார்த்தைகள் உள்ளன 

என்னை அழ வைக்கும் வார்த்தைகள்

எனக்குத் தெரிந்தது உங்களுக்குத் தெரிந்தால் 

உணர்வீர்கள்

நான் சொல்வது ஏன் என்பதை 


2.

நான் அறிவேன் நதிகளை: 

நான் அறிவேன் உலகத்தைப்போல தொன்மையான மனித நாளங்களின் குருதி ஓட்டத்தைவிடப் பழமையான நதிகளை

எனது ஆன்மா ஆழ்ந்து செல்கிறது நதிகளைப்போல

 

விடியல்கள் இளமையாய் இருந்தபோது நான் யூப்ரடிஸ் நதியில் குளித்தேன் 

காங்கோவுக்கு அருகில் கட்டினேன் என் குடிலை

அது என்னைத் தாலாட்டித் தூங்கவைத்தது

நான் நைல் நதியைப் பார்த்தேன் அதன்மேல் கட்டினேன் பிரமிடுகளை 


ஆப்ரகாம் லிங்கன் நியூ ஓர்லயன்சுக்குப் போனபோது நான் கேட்டேன் மிசிசிப்பியின் பாடல்களை

பார்த்தேன் அதன் அடிமடியிலிருக்கும் சேறெல்லாம் அஸ்தமனத்தின்போது தங்கமாக மாறியதை 


நான் அறிவேன் நதிகளை: 

தொன்மையான கறுத்த நதிகளை 

எனது ஆன்மா செல்கிறது ஆழமாக நதிகளைப்போல 



No comments:

Post a Comment