Thursday, May 4, 2017

பகவன் புத்தர் துவக்கிய யுத்தத்தில் பங்கேற்போம்! " -ரவிக்குமார்தலித் மக்கள் இந்த தேசத்தை வளப்படுத்த தமது வியர்வையை வழங்குகிறவர்கள்; தலித் மக்கள் ஒரு கவளம் சோறு தந்தவர்க்கும் நன்றி பாராட்டி தம் உதிரத்தை வழங்குகிறவர்கள்; தலித் மக்கள் தமது தன்மானத்துக்கு ஊறு நேரிட்டால் தம் உயிரையும் கொடுப்பவர்கள்- வழங்கி வாழும் அந்த மக்களின் தொடர்ச்சியாக இந்த விருது வழங்கும் விழா!

இந்த நாள் விடுதலைச் சிறுத்தைகளின் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் முக்கியமான நாள். கடந்த ஆறு நாட்களாக உச்சநீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கின் வாதம் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் வரி செலுத்துவதற்கான பான் கார்டை இணைப்பதென்று மத்தியில் ஆளும் பாஜக அரசு பிறப்பித்துள்ள ஆணையை எதிர்த்த வழக்கு அது. வெறும் ஆதார் தொடர்பான பிரச்சனை அல்ல இது, இந்தியாவின் அரசியல் போக்கையே ஆட்சி முறையையே மாற்றப்போகிற ஆதாரமாக அமையப்போகிற வழக்கு.

இந்த வழக்கில் இந்தியாவின் தலைமை வழக்குரைஞர் எடுத்து வைத்துள்ள வாதம் இந்த நாடு எந்தத் திசை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியமாக இருக்கிறது. " இந்தியக் குடிமக்களுக்கு அவர்களது உடல்மீதுள்ள அதிகாரம் முழுமையானதல்ல. அவர்களது உடல்மீது அரசாங்கத்துக்கு இருக்கும் அதிகாரத்தை எவராலும் தடுக்கமுடியாது. கை ரேகையை, கண்ணின் கருவிழி ரேகையை மட்டுமல்ல குடிமக்களின் ரத்தத்திலுள்ள  டிஎன்ஏவைக்கூட பதிவுசெய்யப்போகிறோம்" என்று அவர் கூறியிருக்கிறார். நமது உடலும் நமக்கு சொந்தமில்லை என்று சொல்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள்.

இன்று ஆதார் வழக்கில் அரசை எதிர்த்து வாதங்களை முன்வைத்த வழக்குரைஞர் அர்விந் தத்தார் தனது வாதத்தை முடிக்கும்போது அமெரிக்காவில் நிறபெறிக்கு எதிராக பாடுபட்ட நீதிபதி வில்லியம் டக்ளஸ் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். " இரவு சட்டென்று கவிந்துவிடுவதில்லை. அதுபோலத்தான் ஒடுக்குமுறையும். எல்லாம் மாறாமல் இருக்கிறது எனத் தோன்றும்போது அந்த இருளுக்கிடையே விடியலின் வெளிச்சக்கீற்று அவ்வப்போது தென்படும். அதில் நாம் சிறிய சிறிய அளவில் நடந்துகொண்டிருக்கும் மாற்றங்களைப் பார்க்கிறோம். நாம் இந்த இருட்டின் பலிகளல்ல என்பதை உணர்கிறோம்" என்று அவர் கூறியிருக்கிறார். அந்த நம்பிக்கையை நாம் வழிமொழிகிறோம்.

வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றபோது அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியெழுத முயற்சித்தார்கள். அப்போது குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் " இந்த நாட்டில் ஒரு எதிர்ப்புரட்சி நடைபெறுகிறது " என புரட்சியாளர் அம்பேத்கரின் சொற்களைப் பயன்படுத்தி எச்சரித்தார். ஒற்றை மனிதராக நின்று அப்போது வகுப்புவாத செயல்திட்டத்தை முறியடித்தார். இன்று அந்த எதிர்ப்புரட்சி மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின்மீது ஒரு யுத்தத்தை வகுப்புவாத சக்திகள் தொடுத்திருக்கின்றன. இதை எதிர்த்து நிற்கப்போகும் சக்திகள் யார்? என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் ஒரு சிறிய கட்சியாக இருக்கலாம், எங்களுக்கு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கிற வகுப்புவாதத்தை எதிர்க்கவேண்டிய  இந்தக் கடமையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

வகுப்புவாதத்துக்கு எதிரான இந்த யுத்தம், சமத்துவ உரிமைகளை காப்பதற்கான இந்த யுத்தம் - இது 2600 ஆண்டுகளுக்கு முன்னால் பகவன் புத்தர் தொடுத்த யுத்தம், புரட்சியாளர் அம்பேத்கர் முன்னெடுத்த யுத்தம், சமத்துவத்துக்கான அந்த யுத்தத்தில் தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில் உதிரத்தை மட்டுமல்ல உயிரையும் கொடுப்போம். அதற்கு இந்த நாளில் சூளுரை ஏற்போம்! நன்றி,  வணக்கம்!


( 04.05.2017 அன்று சென்னை காமராசர் அரங்கில் விசிக சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை)

No comments:

Post a Comment