Wednesday, October 20, 2010

அந்த நாளில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்

அந்த நாளில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம் 

  - ரவிக்குமார் 

ஒரு நாளை நினைவுகூரும்போது
அந்த நாளின் எல்லா நிமிடங்களையும் நாம் 
கற்பனைசெய்து பார்ப்பதில்லை

இப்போது 
அந்த நாளை நினவுகூரும் 
இந்த கணத்தில் 
நாம் எண்ணிப்பார்ப்பது எதை?
அந்த நாளின் பகலையா?
இரவையா? 


நள்ளிரவு கடந்து அந்த நாள் உயிர்பெற்ற
ஆரம்ப கணங்களில்
எப்படி இருந்திருப்பார்கள்?
சில்லிட்டுப்போன காற்றில்
நடுங்கும் உடல்களைக் கைகளால்
போர்த்தியிருந்திருப்பார்களா?
அழும் குழந்தையின் சப்தம் 
கவனத்தை ஈர்த்துவிடுமென்று பயந்து
அதன் குரல்வளையை நெரித்திருப்பார்களா?
பகலைநோக்கி ஊர்ந்துகொண்டிருக்கும்
இரவைத் 
தடுத்து நிறுத்துவது எப்படி என யோசித்திருப்பார்களா?
அந்த இரவு
குண்டுகளின் சப்தங்களால்
சீரழிக்கப்படாத இரவாக இருந்திருக்குமா?


அவர்களின் நாளை 
எப்படி நாம் நினைவுகூர முடியும்?
நமக்குத் தெரியாது
எறிகணையொன்று விழுவதற்குமுன் கேட்கும் சப்தம்
அது வெடித்துச் சிதறும்போது 
விலகிக் கூடும் இருளின் சிறிய இடைவெளியில்
புலப்படும் முகங்கள்
அவற்றில் அப்பியிருக்கும் பயம் 


நமது நாசிகளுக்குத் தெரியாது
கந்தக மணத்தோடு கலந்திருக்கும்
கருகிய உடல்களின் வாசனை
நம் செவிகள் அறியாது
சிதறிய உடல்களின்மீது 
தவழும் குழந்தை ஒன்றின் அழுகுரல்

அந்த நாளை
நாம் எப்படி நினைவுகூரமுடியும்?

நமக்குத் தெரியாது
போர் நடக்கும் இடம் 
எப்படி இருக்குமென்பது

அங்கு 
இரவுகளில் மனிதர்கள் தூங்கியிருப்பார்களா?
அதிகாலையின் மெல்லிய வெளிச்சத்தில்
மரித்துக்கிடக்கும் தம் உறவுகளைப் பார்த்து
அழுவதற்கும் அவர்களுக்கு நேரம் இருந்திருக்குமா?
எதுவுமே நமக்குத் தெரியாது
பதுங்கு குழிகளில் வாழ்வது
அல்லது சாவது 
நமக்குத் தெரியவே தெரியாது

அப்படியிருக்கும்போது
அவர்களின் நாளை
எப்படி நாம் நினைவுகூரமுடியும்?

நமக்குத் தெரிந்தது
நம்முடைய நாள்தான்

அவர்கள் ஒட்டுமொத்தமாகப்
புதைக்கப்பட்ட 
அந்த நாளில் நாம் 
என்ன செய்துகொண்டிருந்தோம்?
திரையரங்குகளில் இருந்தோம்
உணவகங்களில் விருந்துண்டோம்
தொலைக்காட்சிகளில் புதைந்துகிடந்தோம்
பயணித்தோம்
புகைத்தோம்
குடித்தோம்
பாதுகாப்பான நம் வீடுகளில்
புணரவும் செய்தோம்

நம்முடைய நாளைத்தான் நமக்குத் தெரியும்
அதைத்தான் நம்மால் நினைவுகூரமுடியும்

அப்புறம் ஏன்
அறியாத ஒரு நாளைப்பற்றிப் பேசுகிறோம்?
நாம் பார்க்காத உடல்களைப்பற்றி
புதைகுழிகளைப்பற்றி
தொட்டுணராத குருதியைப்பற்றி 
வீரத்தைப்பற்றி
தியாகத்தைப்பற்றி
துயரத்தைப்பற்றி
ஏன் பேசுகிறோம்?


நாம் பேசவேண்டும் நமது சுயநலத்தை
நாம் பேசவேண்டும் நமது கையாலாகாத்தனத்தை
நாம் பேசவேண்டும் நமது துரோகத்தை 
நாம் பேசவேண்டும் நாம் மனிதர்களே இல்லை
என்ற உணமையை

( முள்ளிவாய்க்கால் கொடுமையின் முதலாண்டு நினைவாக மணற்கேணி பதிப்பகம் வெளியிட்ட ' எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது ' என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதை. )

5 comments:

 1. அன்பின் திரு.இரவிக்குமார்,

  ”இந்த நாளில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்” என்ற
  கவிதையையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்க வைக்கிறது இது.

  அன்புடன்
  நாக.இளங்கோவன்

  ReplyDelete
 2. திரு. நாக. இளங்கோவன் அவர்களுக்கு வணக்கம்
  அந்த சிந்தனை எழுந்ததால்தான் இக்கவிதையை போட்டேன் .
  ரவிக்குமார்

  ReplyDelete
 3. திரு ரவிக்குமார்

  உங்கள் கவிதையின் தொடர்ச்சியாக

  அரசியல்வாதி அந்த நாளைப் பேசுகிறான்
  ”நாம் ஓட்டுவாங்க வேண்டுமே” என்று.

  படித்தவன் அந்த நாளைப் பேசுகிறான்
  ”நாம் அறிவுஜீவி என்னும் அடையாளம் வேண்டுமே” என்று.

  இதயத்தில் வலியோடு எங்கோ ஒருவன் பேசுகிறான்
  ”இங்கே பிறந்துவிட்டோமே” என்று.

  கனத்திருக்கும் உள்ளத்தில் சம்மட்டி கொண்டு அடிக்கிறது உங்கள் கவிதை.
  எழுதுங்கள் எங்கள் குரலாக.

  அன்புடன்
  ஆராதி

  ReplyDelete
 4. ரவிக்குமார் நல்ல கவிதைகள் தருகிறார் என்பதுண்மை.

  பல ஆண்டுகளில் இலங்கை தமிழர் - தமிழ்நாடு
  உறவுகள் எப்படி உருவெடுக்கும் என்று சொல்ல முடியாது.

  முகமது அனீப் சிங்களவர் என்ன எழுதுகிறார்கள் என்று
  நமக்கு தெரிவித்தால் எதிர்ப்பக்க எண்ணங்கள் அறிந்துகொள்ளலாம்.
  இப்போது காற்று சிங்களவருக்கு சாதகம் என்றாலும்
  தமிழர் நியாயங்கள் உலகுக்கு தெரியாமல் இருக்குமா?
  ஜார்ஜ் வில்லி போன்ற தமிழர்களால் சாதிக்க முடியும்,
  உருத்திரகுமாரன் அரசாங்கம் ஈழத்தில் ஆதரவு இருக்கிறதா?
  என்று சில ஆண்டுகளில் தெரியும்.

  50, 100 ஆண்டுக்குப் பின்னராவது ஈழந்த்துக்கும்
  தமிழ்நாட்டுக்கும் பாலம் அமைந்து மக்கள் போக்குவரத்து
  பஸ்களும், கார்களும், ... வாகனங்களும் தடையின்றி
  இருபுறமும் போய் வரவேண்டும். கல்வி, வாணிகம்,
  கலை தொடர்புகள் மிகும். இருபுறமும் வாழும்
  அடுத்த தமிழர் சாதிக்க வேண்டிய செயல்.
  ரவிக்குமார், ... போன்ற அரசியல் தலைவர்கள்
  வழிநடத்த வேண்டும்.

  பாலம் கட்ட தொழில் நுட்பம் இருக்கிறது.
  ஸ்வீடனுக்கும் டென்மார்க்குக்கும் இடையே
  உள்ள ஓர்சன் பாலம்:
  http://vinaiooki.blogspot.com/2010/05/resundsbron.html

  ஆனால், மூன்றாம் உலகத்தில் நடக்க பல ஆண்டுகள்
  ஆகும். முதலில் தமிழர் சிங்களரிடம் உரிமை
  பெற இலங்கையில் வாழ்வோர் முடிவே முக்கியம்.

  நா. கணேசன்

  ReplyDelete
 5. மலையகத் தமிழ் பெண் ஒருவர் சிங்கள ஒருவரை திருமணம் முடித்து கொழும்பில் வசித்தார். அப் பெண் தனது கணவருடனும் குழந்தைகளுடனும் சிங்களத்தில் தான் பேசினார். அப்போது எம்முடன் இருந்த சிலர் "ஏன் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் தமிழில் பேசுவதில்லை?" எனக் கேட்டனர். அப்பெண் "தந்தைவழியை தானே பிள்ளைகள் பின்பற்ற வேண்டும்." என எழுதாத சட்டம் ஒன்றைக் கூறினாள்.

  அவளிடம் கேள்வி கேட்டவர் யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் ஆசிரியரின் மகன். மேற்படிப்புக்காக கொழும்பு வந்திருந்தார். "ஒரு கலப்புத் திருமணத்தால் ஒரு பரம்பரை கண்முன்னே சிங்களமாகிக் கொண்டு இருக்கிறது." என்றார். அப்பெண்ணை இழிவாகவும் பேசினார்.

  அன்மையில் அவரைப் பார்த்தேன். தற்போது அவரும் திருமணம் முடித்து பிள்ளைகளுடன் இருக்கிறார் வேறு ஒரு நாட்டில். அப்போது அவரது பிள்ளை சிங்களத்தில் தகப்பனுடன் பேசுவதைப் பார்த்தேன். கேட்டதற்கு இவ்வாறு கூறினார். "எனக்கு சிங்களம் சரியாகத் தெரியாது பாருங்கோ, நான் இவாவுடன் பேசிப்பேசி எப்படியாவது சிங்களம் கதைக்கவேணும் என்று பேசினனான். குழந்தையும் அப்படியே பேசி பழகிட்டுது." என்றார்.

  அதற்கு அவர் கொடுத்த விளக்கம் "என்னெண்டாலும் இவனிண்ட தாய்மொழி சிங்களம் தான் பாருங்கோ!"

  இப்படித்தான் நிலமை செல்கிறது.

  தந்தை வழி
  தாய் மொழி

  ஏதாவது விளங்குகிறதா?

  - Mohamed Haneef

  ReplyDelete