Tuesday, May 2, 2017

சமஸ்கிருத அறிஞர் திரு. வரத தேசிகர் (1923-2017) மறைந்தார் - ரவிக்குமார்



பிரெஞ்சு கீழ்த் திசைப் பள்ளியில் (EFEO) நீண்டகாலம் பணியாற்றி ஓய்வுபெற்ற சமஸ்கிருத அறிஞர் திரு வரத தேசிகர் அவர்கள் இன்று (02.05.2017) காலை 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தியை திரு ழான் லுய்க் செவ்வியார் மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார். 

கிரந்த யூனிகோடு பிரச்சனை தீவிரமாக இருந்த நேரத்தில் அது தொடர்பாகத் தெளிவு வேண்டி நான்  பாண்டிச்சேரியில் இருக்கும் EFEO நிறுவனத்துக்குச் சென்று திரு.செவ்வியார் அவர்களைச் சந்தித்து அவரிடம் பல்வேறு ஐயங்களையும் எழுப்பி விளக்கங்களைப் பெற்றேன். அப்போது அங்கு பணியாற்றும் சமஸ்கிருத அறிஞர் திரு. வரத தேசிகர் அவர்களைப் பார்த்துப் பேசியது ஒரு அபூர்வமான நிகழ்வு. 

அபோது ஏறத்தாழ தொண்ணூறு வயதை நெருங்கிக்கொண்டிருந்த அவர் தமிழ், சமஸ்கிருதம், கிரந்தம், ஆங்கிலம் என நான்கு மொழிகளில் ஆழ்ந்த புலமை கொண்டவர். கிரந்த ஏட்டுச்சுவடிகளை படிக்கத் தெரிந்த மிகச்சிலரில் ஒருவர். திரு. செவ்வியாரின் உதவியால் அவரது பணிகள் குறித்துக் கேட்டு அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

கிரந்த எழுத்துகள் கலந்து எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளை அவர் என்னிடம் படித்துக் காட்டினார். 

சுவடிகளில் இருப்பவற்றை இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அச்சில் வெளிக்கொண்டுவந்தபோது கிரந்த எழுத்துகளோடுதான் அச்சிட்டிருக்கிறார்கள். அப்படி 1910 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட நாலாயிரத் திவ்வியப் பிரபந்த நூலை நான் அவரிடம் பார்த்தேன். 

அதுபோன்ற நூல்களைப்  பின்னர் பதிப்பித்தபோது கிரந்த எழுத்துகள் இருந்த இடங்களில் எல்லாம் தேவநாகரி எழுத்துகள்கொண்டு அச்சிடப்பட்டிருக்கிறது. அப்படியான நூல்களையும் அங்கு பார்க்க முடிந்தது. 

இப்படி தேவநாகரி கலந்து அச்சிடுவதைவிட கிரந்த எழுத்துகளைக்கொண்டு அச்சிடுவதே சிறந்தது என திரு. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் எழுதியிருப்பது நினைவுக்கு வந்தது.

கிரந்த யூனிகோடு சர்ச்சை குறித்து திரு. வரத தேசிகர் எதுவும் அறிந்திருக்கவில்லை. அவர் தானுண்டு தன் பணியுண்டு என இருந்தார்.

1923 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்த திரு வரத தேசிகர்  தனது தந்தையிடமிருந்து கிரந்தம் படிக்கக் கற்றுக்கொண்டார்.கலித்தொகை உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களையும்,  ஆழ்வார் பாடல்களையும், மத்தியகால இலக்கியங்கள் சிலவற்றையும்  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அவர்  உதவினார். அயல்நாட்டு ஆய்வாளர்கள் பலர் அவரால் தமிழ் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். 

தம்மிடம் கிரந்தம் கற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லையென அவரை சந்தித்தபோது வருத்தத்தோடு என்னிடம் சொன்னார். அவரது அறிவுச்செல்வம் தொடர்ச்சியின்றி அழியப்போவதை எண்ணி அப்போது எனக்குக் கவலையாக  இருந்தது.

இப்போது கிரந்தம் படிக்க யாராவது விரும்பினாலும்கூட கற்றுத்தர அவர் இல்லை. திரு வரத தேசிகருக்கு என் அஞ்சலி

No comments:

Post a Comment