இலங்கையில் ராஜபக்ச திடீரெனப் பிரதமராகப் பதவியேற்றிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் நண்பராகக் கருதப்படும் ரணில் தூக்கியெறியப்பட்டிருப்பதன் பின்னணியில் சீனாவின் கை இருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.
இலங்கை அரசியலில் அண்மையில் வேகமான மாற்றங்கள் நிகழ்ந்துவந்தன. இலங்கை அதிபர் மைத்ரி பாலாவையும் ராஜபக்சவின் சகோதரர் கொத்தப்பாயவையும் கொலை செய்ய இந்திய உளவு அமைப்பான ரா திட்டமிடுகிறது என்ற ஒரு தகவலை மைத்ரியே தெரிவித்து அது தி இந்து ஆங்கில நாளேட்டால் அம்பலமானது. அந்தச் செய்தி தவறு என இலங்கை அரசு ஒருபுறம் மறுத்துக்கொண்டே மறுபுறம் அந்த சதிக்கு உடந்தையாக இருந்ததாக ஒரு போலிஸ் அதிகாரியையும் இந்தியர் ஒருவரையும் கைது செய்தது.
சுமார் பத்து நாட்களுக்கு முன்னர் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு சொந்தமான Eastern Container Terminal ஐ இந்தியாவுக்கு விற்றுவிடலாம் என ரணிலுக்கு வேண்டிய அமைச்சரான மாலிக் சமரவிக்கிரம ஒரு திட்டத்தை முன்வைத்ததாக செய்தி வெளியானது அதை மைத்ரிபாலா நிராகரித்துவிட்டதாகவும் ஶ்ரீலங்கா கார்டியன் என்ற பத்திரிகையில் வந்த செய்தி குறிப்பிட்டிருந்தது. ரணில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றி இந்தியாவை மகிழ்விக்க அவர் விரும்பினாரெனவும் அதை வைத்து 2020 ல் நடக்கவுள்ள தேர்தலில் இந்தியாவின் ஆதரவைத் தனக்கு உறுதிசெய்துகொள்ள முயன்றார் எனவும் அந்தச் செய்தி கூறியது. ரணிலுக்கும் மைத்ரிக்குமான உறவு நசிந்து ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதையும் அதில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவோடு அவர் வெற்றிபெற்றதையும் நாம் இத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும். .
இந்தச் சூழலில்தான் ராஜபக்ச பிரதமர் ஆக்கப்பட்டிருக்கிறார். இது இந்தியாவின் இலங்கைக் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் பாஜக அரசு சொதப்புகிறது என்பதற்கு இதுவொரு உதாரணம். இது தமிழ் மக்கள் பிரச்சனையில் என்ன பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பதை இனிவரும் நாட்களில் நாம் அறியலாம்
No comments:
Post a Comment