குரு பூஜை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள ஆலோசனைகளை நான் வரவேற்கிறேன். அரசியல் தலைவர்களும்,தமிழக அரசும் அவற்றை ஏற்று நடைமுறைப் படுத்த முன்வரவேண்டும்.
’குரு பூஜை அரசியல்’ ஆபத்தான பரிமாணங்களை எடுத்துவருகிறது. அதை தமிழக அரசு கட்டுப்படுத்தவேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே நான் வலியுறுத்திவந்தேன். இப்போது அந்தக் கருத்து நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டிருப்பதால் அரசாங்கம் அலட்சியம் செய்யாது என நம்புகிறேன்.
மாவட்டங்களுக்கும், போக்குவரத்து கழகங்களுக்கும் தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டதும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டவுடன் கலவரம் மூண்டு அனைத்துப் பெயர்களும் நீக்கப்பட்டதும் வரலாறு. அதுபோலத்தான் இப்போதும் நடக்கிறது என்றாலும் குருபூஜைகள் கட்டுப்படுத்தப்படுவது அவசியம் என்றே கருதுகிறேன்.
இந்தியாவெங்கும் மதக் கலவரங்கள் நடந்த நேரத்தில்கூட தமிழ்நாடு அமைதிகாத்தது. ஆனால், அண்மைக்காலமாக இங்கே சாதி வெறிப் பிரச்சாரம் அதிகரித்து பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மதவெறியின் பின்னால் போலியான தேசியவாதமாவது முன்வைக்கப்படுகிறது. ஆனால் சாதிவெறியோ மக்களைத் துண்டு துண்டாக்கிச் சிதறடிக்கிறது. அந்தவிதத்தில் மதவெறியைவிடவும் சாதிவெறி ஆபத்தானதாகக் கருதப்படவேண்டும்.
’நமது சட்டங்கள் தீண்டாமையைத் தான் குற்றமாக அறிவித்துள்ளன. சாதி நம்பிக்கையைத் தவறு என்று சொல்லவில்லை’ என்பது உண்மைதான். ஆனால், சாதி நம்பிக்கை என்பது சாதிப் பெருமிதமாக மாறி, சாதி வெறியாக வெளிப்படும்போது அது சமூக சமத்துவத்தை அச்சுறுத்துகிறது, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. குருபூஜை விழாக்கள் சாதிப் பெருமிதத்தை வெளிப்படுத்துவனவாக இருந்தாலும் அவை கலவரங்களுக்கு வழிவகுப்பது இதனால்தான். எனவே ஒருபுறம் சாதிப் பெருமிதத்தை ஊக்குவித்துக்கொண்டு இன்னொருபுறம் சாதிக் கலவரங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்..
குருபூஜைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி பல்வேறு தலைவர்களுக்கு அரசு சார்பில் விழா எடுப்பதும் தேவையா என தமிழக அரசு சிந்திக்கவேண்டும்.”இந்திய சுதந்திரத்துக்காகத் தமது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள், தமிழ் மொழிக்காகத் தொண்டாற்றியவர்கள் – அவர்களது வாழ்க்கையையும், சாதனைகளையும் தற்காலத் தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு” இந்த விழாக்கள் நடத்தப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. சுமார் ஐம்பது விழாக்கள் இப்படி தமிழக அரசால் நடத்தப்படுகின்றன. அந்தப் பட்டியலை சமூகரீதியில் ஆய்வுக்கு உட்படுத்தினால் அதில் பொதிந்திருக்கும் பாரபட்சம் வெளிப்படுமென்பது ஒருபுறமிருக்க, அரசே இப்படி விழாக்களைக் கொண்டாடுவதுதான் சாதி அமைப்புகள் குருபூஜைகளை நடத்துவதற்கு தூண்டுதலாக அமைகிறது. எனவே அவற்றையும் தமிழக அரசு கைவிடவேண்டும்.
( செப்டம்பர் 20 , 2013 புதிய தலைமுறை இதழில் வெளியான எனது கட்டுரை)
No comments:
Post a Comment