Tuesday, October 23, 2018

சனாதன பயங்கரவாதமும் கல்வித்துறையில் அதன் வெளிப்பாடுகளும் - ரவிக்குமார்


தோழர்களே! 

கல்விப்பிரச்சனையை பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவருவதில் தமிழ்நாட்டில் திண்டிவனத்துக்கு முக்கியமான பங்கு உண்டு. அதற்குக் காரணம் பேராசிரியர் கல்யாணி திண்டிவனத்தில் இருப்பதுதான். இன்று நேற்றல்ல 1980 களில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக்கொள்கையை எதிர்த்துப் போராடி சிறை சென்றவர்கள் பேராசிரியர் கல்யாணி, பேராசிரியர் கோச்சடை போன்றவர்கள். புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து வீதி நாடகங்களைப் போட்டோம். என் திருமணத்திலேயேகூட அந்த நாடகத்தை நடத்தினோம். பேராசிரியர் கோ. கேசவன் அருமையான விமர்சன நூலை எழுதினார். கல்வி தனியார் மயமாவதால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என அப்போது நாங்கள் என்னவெல்லாம் சொல்லி எச்சரித்தோமோ  அதெல்லாம் இப்போது நடக்கின்றன. 

 ப்ளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முதலில் சொன்னவரே கல்யாணிதான். அப்படி வைத்தால்தான் ப்ளஸ் டூ படிப்பில் இரண்டு ஆண்டுகளிலும் ஒரே பாடத்தை நடத்தும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் மோசடியைத் தடுக்கமுடியும் என அவர்தான் எங்களுக்கு எடுத்துக்கூறினார். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அந்த கோரிக்கையை சட்டமன்றத்திலும் எழுப்பினேன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த திரு தங்கம் தென்னரசு அவர்களிடமும் வலியுறுத்தினேன். திரு செங்கோட்டையன் கல்வி அமைச்சராக வந்தபிறகு நல்வாய்ப்பாக திரு உதயசந்திரன் ஐஏஎஸ் அங்கு செயலாளராக இருந்தார். பள்ளிக் கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை அவர்கள் மேற்கொண்டனர். அந்த நேரத்தில் கல்யாணியை, என்னை இன்னும் பல கல்வியாளர்களை அழைத்து அவர் கருத்துகளைக் கேட்டார். நான் என் கருத்துகளை எழுத்து வடிவில் கொடுத்தேன். அப்போது ப்ளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தவேண்டும் என்பதை கல்யாணி வலியுறுத்தினார். அதன் அடிப்படையில்தான் ப்ளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத்தேர்வு எனத் தமிழக அரசு அறிவித்தது. அதற்கான காரணங்களை விரிவாக விளக்கி அரசாணையும் வெளியிடப்பட்டது. 
ஆனால் அது நடைமுறைக்கு வருவதற்குள்ளாக இப்போது அதை நீர்த்துப்போகச்செய்யும்விதமாக இன்னொரு அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது. அதை எதிர்த்துதான் இங்கு கூடியிருக்கிறோம். 

ப்ளஸ் டூ படிப்பில் 
இரண்டாம் ஆண்டுக்கான பாடத்தையே இரண்டு ஆண்டுகளும் நடத்தி நூறு சதவீத வெற்றி , அதிக மதிப்பெண் என்று தனியார் பள்ளிகள் காட்டிக்கொள்கிறார்கள். இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல அப்படி வெற்றிபெறும் தனியார் பள்ளி மாணவர்களும்தான் பாதிக்கப்படுகிறார்கள். ப்ளஸ் ஒன் பாடங்கள் சரியாக போதிக்கப்படாததால் தொழிற்கல்வியில் சேரும் மாணவர்கள் முதல் ஆண்டில் தோல்வி அடைய நேரிடுகிறது. இது தனியார் பள்ளிகளை நடத்தும் கல்விக் கொள்ளையர்களுக்கு லாபம் சேர்ப்பது மட்டுமல்ல உயர்கல்வியின் தரத்தையும் சீரழிக்கிறது. 

ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற நிலைபாட்டை அரசு மாற்றக்கூடாது. அதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. இப்படியான மாநாடுகளை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நாம் நடத்தவேண்டும். தொடர்ந்து போராடினால் நிச்சயம் நமது கோரிக்கையில் நாம் வெற்றிபெறுவோம். அரசு தனது நிலைபாட்டை சரிசெய்துகொள்ளவில்கையென்றால் நாம் நீதிமன்றத்தை நாடி வெற்றிபெற முடியும். அரசு வெளியிட்ட அரசாணையே அதற்கு உதவியாக இருக்கும். 

மேனிலைக் கல்வியென்பது பள்ளிக் கல்வியையும் உயர் கல்வியையும் இணைக்கும் பாலம். அது சரியாக இல்லாவிட்டால் உயர்கல்வி பாதிக்கப்படும். இந்தியாவில் உயர்கல்வி பயில்வோரின் விகிதம் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. ஆனால் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அந்த வளர்ச்சி தரத்தில் இல்லை. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 25 ஆயிரம் பேர் பிஎச்டி பட்டம் பெறுகிறார்கள். அதிலும்கூட தமிழ்நாட்டுக்குத்தான் முதலிடம். ஆனால் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்களின் தரம் மிக மோசமாக இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த அவலநிலைக்குக் காரணங்களில் ஒன்று ப்ளஸ் டூ படிப்பை நாம் பள்ளிக் கல்வியின் அங்கமாக வைத்திருப்பது ஆகும். புதிய கல்விக்கொள்கை அறிமுகமானபோது ப்ளஸ் டூ படிப்பை கல்லூரியின் அங்கமாக வைப்பதா அல்லது பள்ளியின் அங்கமாக வைப்பதா என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு கூறிவிட்டது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்றவை ப்ளஸ் டூவை கல்லூரிப் படிப்பின் அங்கமாக மாற்றி ஜூனியர் காலேஜ்களை உருவாக்கின. ஆனால் இங்கிருந்த ஆசிரியர்களின் வற்புறுத்தலால் தமிழ்நாட்டில் மட்டும் பள்ளிக் கல்வியின் அங்கமாக அது வைக்கப்பட்டது. கல்லூரிக் கல்வியின் அங்கமாகத்தான் பியுசி இருந்தது. ஆனால் ப்ளஸ் டூ படிப்பு பள்ளிக்கல்வியின் பகுதியாக  ஆக்கப்பட்டது. கல்லூரிக் கல்வியின் அங்கமாக இருந்திருந்தால் ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் ஆசிரியர்களின் தரமும் கூடுதலாகக் கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பு 
இங்கே பாழடிக்கப்பட்டது. மேனிலைக் கல்வியில் சரியான அடித்தளம் இடப்படாததால் உயர்கல்வியும் தரமற்றதாக உள்ளது. எனவே பள்ளிக்கல்வி குறித்து நாம் காட்டுகிற அக்கறை உயர்கல்வி குறித்ததும்தான். அவற்றுக்கிடையிலான உள் இணைப்புகளை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். 

கால் நூற்றாண்டுக்கு முன்னால் மக்கள் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டபோது பாவ்லோ ஃப்ரேய்ரின் ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி என்ற நூலை முன்வைத்து நாம் விவாதித்தோம். அவர் வலியுறுத்திய ஜனநாயகத்தை கல்வியில் மட்டுமின்றி அரசியல் இயக்கச் செயல்பாடுகளிலும் சோதித்துப் பார்த்தோம். கூட்டங்கள் நடத்தியபோது மேடை அமைத்து எதிரில் மற்றவர்கள் உட்கார்ந்தால் அதிகார படிநிலை உருவாகும் என்பதால் வட்டமாக அமர்ந்து விவாதித்தோம். கட்சியின் முன்னணிப் பாத்திரத்தை கேள்விக்குட்படுத்தினோம். அரசு அமைப்புக்கும் கல்வி போதிக்கும் முறைக்கும் உள்ள உறவை எடுத்துக் காட்டினோம். இப்போது அதிலிருந்து விலகிப்போய்விட்டோம். அந்த அணுகுமுறையை, விமர்சன நோக்கை புதுப்பிக்கவேண்டிய நேரம் இது. 

‘நாங்கள் சொல்வதை ஏன் என்று கேட்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்’ என ஒரு அரசாங்கம் ஆணையிட்டால் அதை சர்வாதிகாரம் எனச்சொல்லி உடனே எதிர்ப்பு தெரிவிக்கும் நாம், பள்ளியில் ஆசிரியர் சொல்வதற்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என நம் குழந்தைகளிடம் கூறுகிறோம்; அப்பாவை எதிர்த்துப் பேசக்கூடாது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். வீட்டிலும் பள்ளியிலும் கேள்வி கேட்பதைத் தடைசெய்வதன்மூலம்தான் அரசாங்கத்துக்கு அடிபணிந்து செல்லும் குடிமக்கள் உருவாக்கப்படுகிறார்கள். அதை நாம் காணத் தவறுகிறோம். எங்கெல்லாம் கேள்விகள் அகற்றப்பட்டு மௌனம் திணிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரத்தின் கொடி பறக்கிறது என்று அர்த்தம். நாம் கல்வியைப்பற்றிப் பேசும்போது இந்த பரந்த பின்புலத்திலிருந்துதான் பேசுகிறோம். அதன் உள் இணைப்புகளைப்பற்றிய புரிதலோடுதான் பேசுகிறோம். 

ராஜிவ்காந்தி ஆட்சியின்போதுதான் திறந்த பொருளாதாரக்கொள்கை அறிமுகம் ஆனது. அதற்கு ஏற்பத்தான் புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டது. ஒரு நாட்டில் உள்ள அரசின் வடிவத்துக்கும் அந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி முறைக்கும் தொடர்பு இருக்கிறது. இப்போது நாட்டை ஆளும் சனாதனிகள் தமக்கு ஏற்ற கல்வி முறையைக் கொண்டுவரப்பார்க்கிறார்கள். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முரளிமனோகர் ஜோஷி கல்வியைக் காவி மயமாக்கும் முயற்சியை ஆரம்பித்தார். இப்போது அது தீவிரமாகி  இருக்கிறது. பாடத் திட்டங்கள் மட்டுமல்ல உயர்கல்விக்கூடங்களான பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் சமூக நீதிக்கு சாவு மணி அடித்துவிட்டார்கள். அங்கே இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டுவிட்டது. இதுவரை பல்கலைக்கழகத்தை அடிப்படை அலகாக basic unit ஆக வைத்துதான் இட ஒதுக்கீட்டின் அளவை நிர்ணயிப்பார்கள். ஆனால் மோடி அரசாங்கம் யுஜிசியின் ஒரு உத்தரவு மூலம் அதை மாற்றிவிட்டது. இப்போது ஒரு துறையை - departmentஐ அடிப்படை அலகாக ஆக்கிவிட்டார்கள். ஒரு மத்திய பல்கலைக்கழகம் இருந்தால் அதில் நூறு துறைகள் இருக்கும் அந்த நூறு துறைகளுக்கும் பேராசிரியர்கள் இருப்பார்கள். அதில் எஸ்சி பிரிவுக்கு 15 சதவீதம் எஸ்டிக்கு 71/2 சதவீதம் ஓபிசிக்கு 27 சதவீதம் என ஒதுக்க வேண்டும் என இருந்தது. ஆனால் இப்போது ஒரு துறையை அடிப்படை அலகாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்னும்போது ஒரு துறையில் ஒரு பேராசிரியர் பதவிதான் பெரும்பாலும் இருக்கும். அதில் எப்படி இட ஒதுக்கீடு தர முடியும்? இனிமேல் மத்திய பல்கலைக்கழகங்களில் எந்தவொரு பேராசிரியர் பதவிக்கும் எஸ்சி எஸ்டி ஓபிசி பிரிவினர் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் போக முடியாது. இந்தக் கொள்கை இப்போது ஆட்சி செய்யும் சனாதனவாதிகளின் வர்ணாசிரமக் கொள்கையோடு பொருந்திப்போவதைக் கவனியுங்கள். 

யுஜிசி இப்போது இன்னும் ஒரு மோசமான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான civil servants களுக்கான நடத்தை விதிகள் இனி பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என அறிவித்திருக்கிறது. மத்திய மாநில அரசுகளை விமர்சிக்கவோ, விமர்சித்துப்பேசும் கூட்டங்களில் பங்கேற்கவோ கூடாது. அப்படிச்செய்தால் அவர்களை டிஸ்மிஸ் செய்யலாம் என அறிவித்துள்ளது. கடந்த மே மாதத்தில் அதற்கான சுற்றறிக்கை எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. அதை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் போன்றவை உடனடியாக அமல்படுத்தப்போவதாகக் கூறியுள்ளன. யுஜியிடம் நிதி பெறுகின்ற அத்தனை பல்கலைக்கழகங்களுக்கும் அது பொருந்தும் என்றுசொல்லப்பட்டிருக்கிறது. எனவே மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் அது நடைமுறைக்கு வந்துவிடும். அப்படி நடைமுறைக்கு வந்துவிட்டால் அரசாங்கத்தின் கல்விக் கொள்கையைப்பற்றிக்கூட ஆசிரியர்கள் பேச முடியாத நிலை ஏற்படும். இது  சனாதன பயங்கரவாதத்தின் வெளிப்பாடு. அது ஏற்படுத்த விரும்பும் சர்வாதிகார ஆட்சிக்கான ஒத்திகை. 

இந்திராகாந்தி அம்மையாரைப்போல எமர்ஜென்சியை வெளிப்படையாக 
அறிவிக்காமல் ஒரு நெருக்கடிநிலையை நாட்டில் நடைமுறைப்படுத்த முடியும் எனக் காட்டிக்கொண்டிருக்கும்  மோடி அரசு, இந்த நாட்டை இந்து ராச்சியம் என்று அறிவிக்காமலேயே சனாதன பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கவனித்து எதிர்ப்பு தெரிவிக்கக்கூட இப்போது எவரும் இல்லை. பல்கலைக்கழகங்களில் இருக்கும் ஆசிரியர் சங்கங்கள்கூட வாய்மூடி மௌனம் காக்கின்றன. அரசியல் கட்சிகளும் இப்படியான பிரச்சனைகளைப் பேசுவதில்லை. எங்கு பார்த்தாலும் பயம், பயத்தால் திணிக்கப்படும் அமைதி. இதுதான் சனாதன பயங்கரவாதத்தின் வெற்றி. இது பாசிசக் கொடுங்கோல் ஆட்சியைவிட ஆபத்தானது. 

இங்கே நாம் பள்ளிக்கல்வியைப் பற்றிப் பேசுவதற்காகக் கூடியிருந்தாலும் உயர்கல்வியைப்பற்றியும் அக்கறைகாட்டவேண்டும். இன்று ஆட்சியாளர்களால் ஊட்டி வளர்க்கப்படும் 
சனாதன பயங்கரவாதத்துக்கும் கல்வி முறைக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் நமது போராட்டங்களை வடிவமைக்கவேண்டும். கல்வியை ஒருங்கிணைந்த முறையில் பார்த்து அதிலுள்ள பிரச்சனைகளைப் பேசியாகவேண்டும். அதற்கான துவக்கமாக இந்த மாநாட்டைக் கருதுகிறேன். 

நன்றி வணக்கம்

( 21.10.2018 அன்று திண்டிவனத்தில் நடைபெற்ற கல்வியாளர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையின் சுருக்கம் ) 

No comments:

Post a Comment