
விஸ்வரூபம் திரைப்படம் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை இப்போது அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் அதிகாரம் தொடர்பான பிரச்சனையாக அது இப்போது உருவெடுத்திருக்கிறது.ஒரு திரைப்படத்தை பொதுமக்கள் பார்க்கலாமா என்பதற்கான சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அரசியலமைப்பு சட்டத்தில் மத்திய பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி சான்றிதழ் வழங்கும் படத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக் கருதினால் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அந்தப் படத்துக்கு தடை விதிக்க முடியும் .இந்த அதிகாரத்தை தற்போதிருக்கும் திரைப்பட தணிக்கைச் சட்டத்தின் பிரிவு 13 (1) வழங்குகிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் தனது மாவட்ட எல்லைக்குள் ஒரு படத்துக்குத் தடை விதிக்கமுடியுமே தவிர ஒட்டுமொத்த மாநிலத்திலும் தடை செய்ய அவருக்கு அதிகாரமில்லை.
இப்போது விஸ்வரூபம் படத்தைத் திரையிட அனுமதிக்கவேண்டும் எனக் குரல் கொடுப்பவர்கள் எவரும் அடிப்படையான இரண்டு கேள்விகளை எழுப்பவில்லை:
1. பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் இந்தியாவில் திரைப்படங்கள் அந்தந்த மாநில மொழிகளிலேயே தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு தயாரிக்கப்படும் அந்தத் திரைப்படங்களைத் தணிக்கை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளின் கையில்தான் இருக்கவேண்டுமே தவிர அது மத்திய அரசிடம் இருக்கக்கூடாது.மாநில அளவில் மத்திய அரசு ஆலோசனைக்குழுக்களை வைத்திருந்தாலும் அதிகாரம் என்பது மையப்படுத்தப்பட்ட மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்திடமே உள்ளது. தமிழில் தயாரிக்கப்படும் ஒரு படத்துக்கு மும்பையில்கூட தணிக்கைச் சான்றிதழ் பெற முடியும் என்ற நிலைதான் தற்போது உள்ளது. இது மாநில உரிமைக்கு எதிரான ஒன்று அல்லவா? மாநில உரிமைகளுக்காகப் போர்க்குரல் எழுப்பும் தமிழக அரசியல் கட்சிகளோ தமிழ்த் தேசிய உணர்வாளர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் தமிழ்த் திரைத்துறை பிரமுகர்களோ ஏன் இதற்காகக் குரல் எழுப்பவில்லை? மாநில எல்லைகளைப் பார்க்காமல் தமிழ்த் திரைப்படத் துறையினர் பிற மாநிலங்களில் போய் தமது திரைப்படங்களுக்குச் சான்றிதழ் பெறுவது ஏன்?
2. சுதந்திர இந்தியாவில் சினிமா தணிக்கையின் சாதக பாதகங்களைப் பற்றி ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற பஞ்சாப் மாநில தலைமை நீதிபதி ஜி.டி.கோஸ்லா அவர்களின் தலைமையில் ஆணையம் ஒன்று 1968 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு அது தனது அறிக்கையை 1969இல் சமர்ப்பித்தது. தணிக்கை வாரியம் என்பது சுதந்திரமான தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கவேண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்ககூடாது என அது பரிந்துரைத்தது.தணிக்கை விதிகள் அந்த சுதந்திரமான அமைப்பினால் உருவாக்கப்படவேண்டும் என அது கூறியது. அதன் பின்னர் 1970 இல் வேறொரு வழக்கில் உச்சநீதிமன்றத்திடம் கருத்து தெரிவித்த மத்திய அரசு சென்சார் போர்டு விதிகளை மாற்றி அமைக்க ட்ரிப்யூனல் ஒன்றை அமைப்பதாக வாக்குறுதி அளித்தது. 1978 இல் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி அவர்கள் அந்த வாக்குறுதியை மறு உறுதி செய்தார். ஆனால் அந்த வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. இதுபற்றி ஏன் தமிழ்த் திரைப்படத் துறையினர் இதுவரை வாய்திறக்கவில்லை ?
திரைப்படத் தணிக்கைச் சட்டத்தைத் திருத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது என தற்போது மத்திய அமைச்சர் மனிஷ் திவாரி கூறியிருக்கிறார்.மத்திய அரசால் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு திரைப்படத்துக்கு மாநில அரசு தடை விதிப்பதைத் தடுக்கும் நோக்கத்தோடே இந்தக் கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். இது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும். அத்தகைய முயற்சியில் மத்திய அரசு இறங்கினால் அது மாநிலங்களின் கடும் எதிர்ப்பை சந்திக்கும் என்பதில் ஐயமில்லை.
விஸ்வரூபம் படத்தைத் திரையிட இன்னும் சில நாட்களில் அனுமதி கிடைத்துவிடலாம்.அதன்பின் இந்தப் பேச்சு ஓய்ந்துபோய்விடும்.தமிழ்நாட்டில் அமைதி நிலவினால் போதுமென நினைப்பவர்கள் இத்துடன் இந்தப் பிரச்சனையை விட்டுவிடுவோம் என வேறு விஷயங்கள் நோக்கி நகர்ந்துவிடலாம். ஆனால் கலையின் சுதந்திரம் , மாநில உரிமைகள் குறித்து அக்கறை உள்ளவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு எழுப்பவேண்டிய கோரிக்கை இதுதான்:
* தற்போது மத்திய பட்டியலில் இருக்கும் திரைப்படத் தணிக்கை அதிகாரம் மாநில பட்டியலில் சேர்க்கப்படவேண்டும்.இதற்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்.
* சுதந்திரமும் தன்னதிகாரமும் கொண்ட மைப்பாக மாநில தணிக்கை வாரியம் உருவாக்கப்படவேண்டும். அதன் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதியின் அந்தஸ்தில் இருக்கவேண்டும்.அதன் உறுப்பினர்கள் அந்த வாரியத்தின் ஊதியம் பெறும் முழுநேரப் பணியாளர்களாக இருக்கவேண்டும் என கோஸ்லா கமிட்டி சொன்ன பரிந்துரை ஏற்கப்படவேண்டும்.