கர்நாடக
முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் தேர்ந்தெடுக்குமா
என்பதுதான் இப்போதைய முதன்மையான கேள்வியாக இருக்கிறது. கர்நாடக
மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பரமேஸ்வரா முதல்வர் வேட்பாளர்
எனக் கருதப்பட்டிருந்த வேளையில் அவர் தோல்வியடைந்தது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
2010 ஆம் ஆண்டு மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து
கடுமையாக உழைத்து இன்று 122 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறக் காரணமாக
இருந்தவர் பரமேஸ்வரா ஆவார். படித்தவர்களிடையே பிரபலமாகத் திகழ்ந்த அவர்
கிராமப்புற மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார் அவர் நடத்திய பாத
யாத்திரைகளே கிராமப்புறங்களில் தொய்வடைந்துபோய் கிடந்த காங்கிரசை
எழுச்சிபெற வைத்தன . எனினும் இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த வேட்பாளர் சுதாகர் லால் என்பவரிடம் 18155 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்துள்ளார்.
கர்நாடக மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் தலித்துகள். மகராஷ்டிராவில்
தலித் பேந்தர் இயக்கம் தோன்றியபோதே அதனால் தாக்கம் பெற்று தலித் அரசியல்
இயக்கம் உருவான மாநிலம் அது. தலித் இலக்கியத்திலும் முன்னணி பங்கு வகித்த
மாநிலம் கர்நாடகா. ஆனால் இன்னும் தலித் மக்கள் அரசியல் விழிப்புணர்வு
அடையாத நிலையே அங்கு இருக்கிறது. அதனால்தான் ஒரு தலித் முதல்வர் வரக்கூடிய
வாய்ப்பு இன்று கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.
தற்போது முதல்வர் பதவிக்கான போட்டியில் சித்தாராமையாவும் மல்லிகார்ஜுன
கார்கேவும் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிற்படுத்தப்பட்ட
வகுப்பைச் சேர்ந்த சித்தாராமையா ஆறு ஆண்டுகளுக்கு முன்புதான் காங்கிரசில்
சேர்ந்தார். மதச் சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து காங்கிரசைக் கடுமையாக
எதிர்த்தவர் அவர் . காங்கிரசுக்கு வந்ததும் அவருக்கு முக்கியத்துவம்
தரப்பட்டது. கடந்தமுறை அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் .
![]() |
| மல்லிகார்ஜுன கார்கே |
மல்லிகார்ஜுன கார்கே நீண்ட அனுபவம் கொண்ட காங்கிரஸ்காரர். ஒன்பது முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். போட்டியிட்ட பத்து முறையும் வெற்றிபெற்ற சாதனையாளர். சட்டம் பயின்றவர். குறிப்பாக தொழிலாளர் சட்டங்களில் ஆழ்ந்த புலமை கொண்டவர். தற்போது மத்திய அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார். இதுவரை எந்த குற்றச் சாட்டுகளுக்கும் ஆளாகாதவர் . மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தாலும் அவரே முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர் என்பது பலரதும் கருத்தாக உள்ளது.
தலித் ஒருவரை கர்நாடகத்தில் முதல்வராக்குவதன்மூலம் காங்கிரஸ் கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தலித் வாக்குகளைத் திரட்ட முயற்சிக்கலாம் என
சில யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மையாகும்
எனத் தெரியவில்லை. தலித் மக்கள் தமது பிரதிநிதிகள் யார் தமது தேவைகள் என்ன
என்ற புரிதல் பெறாதவரை தலித் வாக்குகளைப் பெறுவதற்கு வெற்று வாக்குறுதிகளே போதும் என்றுதான் காங்கிரசும் பிற கட்சிகளும் நினைக்கும் . சோனியாவும் ராகுலும் இதில் விதிவிலக்குகளாக இருப்பார்களா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.
