Showing posts with label journalism. Show all posts
Showing posts with label journalism. Show all posts

Friday, September 16, 2011

பி பி சி தமிழோசை : ஊடகக் கல்வி- நிபுணரின் ஆலோசனை





வானொலிக்கு தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் எழுதுவது பற்றிய தனது அனுபவத்தை பிபிசியின் சிறப்புச் செய்தியாளர் ஆலன் லிட்டில் விவரிக்கும்போது ’’இதில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன’’ என்கிறார். ’’ஒன்று, சொல்வதற்கு ஏதாவது இருக்க வேண்டும் மற்றொன்று அதை எளிமையாகக் கூற வேண்டும்” என்பது அவரது அறிவுரை.

அத்தோடு நீங்கள் சிறப்பாக எழுத வேண்டும் என்றால், நீங்கள் படிக்கும் அனைத்து மொழிகளையும் நன்றாகப் படித்து உணர வேண்டும் என்றும், எது செயற்படும் எது செயற்படாது என்பதை சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார் ஆலன் லிட்டில்.

மேலும் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்?. அதாவது ஒரு கதையைச் சொல்லவா? அல்லது ஒரு சுற்றுப்புறத்தை உணர்த்தவா? சிக்கலான ஒன்றைப் புரிய வைக்கவா? உங்களது நோக்கம் என்னவென்பது குறித்து ஒரு தெளிவு இருக்க வேண்டும் என்று கூறும் அவர், ஒவ்வொன்றைச் சொல்வதற்கும் தனித்தனியான  நடைகள்( ஸ்டைல்கள்) உள்ளன என்கிறார்.

நன்றி :பி பி சி தமிழோசை 

சுருக்கச்சொற்கள்/ தொழில்நுட்பச் சொற்கள்




யூ.என். (ஐ.நா) போன்ற சுருக்கச் சொற்களுக்கு மொழிபெயர்ப்பு உண்டு என்பதால், அவற்றை மொழிபெயர்த்துச் சொல்கிறோம். ஐ.நா என்றோ அல்லது, ஐக்கிய நாடுகள் மன்றம் என்றோ, பயன்படுத்துகிறோம். ஹுயுமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற சில அமைப்புப் பெயர்களை எப்போதும் மொழிபெயர்ப்பதில்லை. இதுபோன்ற மற்ற சில பெயர்கள்,ஆக்ஸ்பேம், யூனிட்டா, ஸானுபி.எப்.

அதுபோல, விளையாட்டுத்துறையில் புழங்கும் பல சொற்கள் மொழிபெயர்க்கப்படுவதில்லை. உதாரணத்துக்கு கிரிக்கெட்டில், கள நிலைகளுக்குத் தரப்படும் பெயர்கள். மிட் ஆன், கல்லி, மிட் ஆப், சில்லி பொய்ண்ட்,போன்றவை.

அறிவியல் செய்திகளில் வரும் பல தொழில்நுட்பச் சொற்களுக்கு மொழியாக்கம் செய்யமுடிவதில்லை என்பதால், ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்துகிறோம். சில சொற்களுக்கு தமிழ் அறிவியல் தொழில்நுட்ப அகராதிகளில் தரப்படும் மொழிபெயர்ப்பை, நாம் பயன்படுத்துவதில் சிரமங்கள் இருக்கின்றன. முக்கியமான பிரச்சினை, இந்த மொழிபெயர்ப்புக்கள், பரந்து பட்ட மக்களுக்குப் புரியுமா என்ற கேள்வி. ஓரளவுக்கு புழக்கத்தில் வந்துவிட்ட மொழிபெயர்ப்புகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

இண்டர்னல் கம்பஸ்ஷன் எஞ்சின், ஹால்லுசினேஷன் போன்ற வார்த்தைகள், மற்றும் சுகாதார மருத்துவத் துறைகளில் புழங்கும் பல துறை சார்ந்த சொற்கள் இவற்றுக்கு உதாரணம்.

பிற மொழிக்கலப்பு




வட்டார வழக்கு போலவே, பிற மொழிக்கலப்பு குறித்தும் நாங்கள் சூழ்நிலைக்கேற்பவே முடிவு செய்கிறோம். பொதுவான விதி, பிற மொழிச்சொற்களை கலப்பதில்லை என்பதே. ஆனால், தொழில்நுட்பப் பதங்கள் வரும்போது, இதை கடைப்பிடிக்க முடிவதில்லை. பெரும்பாலான தொழில்நுட்பப் பதங்களுக்கு தற்போது தமிழ் வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு வருகின்றன என்றாலும், அவை புழக்கத்தில் வந்து பொதுமக்களால் பயன்படுத்தப்படும்போது மட்டுமே பயன்படுத்தவேண்டும். உதாரணமாகச் சொன்னால் இப்போது உலக அளவில்  பொருளாதார சிக்கல் ஏற்பட்டு வருகிறது. குளோபல் எகனாமிக் க்ரைசிஸ் என்று அதை அழைக்கிறோம். அதிலே பார்த்தீர்களென்றால் பல்வேறு தொழில்நுட்பப் பதங்கள் , பொருளாதார வல்லுனர்களுக்கு மட்டுமே தெரிந்த பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால் ‘ டெரிவேட்டிவ்’ என்கிறார்கள். ‘ லிக்விடிட்டி’ என்கின்றார்கள். இப்படியான பதங்களுக்குச் சரியான தமிழ் வார்த்தைகள் இல்லை. அப்படியான சந்தர்ப்பங்களில் நாங்கள் அவற்றை சற்றே விரிவாக்கி விளக்கும்விதமாக மொழிபெயர்க்கிறோம்.

அறிவியல் தொடர்பான கலைச் சொற்களைப் பொருத்தவரை நாங்கள் அந்தச் சொற்களை மொழிபெயர்க்காமல் அப்படியே பயன்படுத்திவிடுகிறோம். அவற்றை மொழிபெயர்க்கும்போது அவை மக்களுக்குப் புரியாமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது. எனவே பெரும்பாலும் அதே சொற்களை நாங்கள் பயன்படுத்திவிடுகிறோம்.

வட்டார வழக்கு





பொதுவாக வட்டார வழக்குகளை தவிர்க்கிறோம். ஏனென்றால், வட்டார வழக்குகளின் தன்மையைக் கொண்டே, இந்த வார்த்தைகள் அவை பயன்படுத்தப்படும் வட்டாரத்தைத் தாண்டி பிற பகுதிகளில் புரியாமல் போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது.

ஆயினும், இலங்கை, தமிழ்நாடு ஆகிய இரு பகுதிகளுக்கும் நாங்கள் ஒலிபரப்புவதால், இரு பகுதிகளிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைப் பிரயோகங்களை நாங்கள் உபயோகிக்கிறோம். மற்ற பகுதியில் முழுமையாக புரியாது என்று நாங்கள் கருதும் வார்த்தைகளைத் தவிர்த்து விடுகிறோம்.

உதாரணத்துக்கு அங்குரார்ப்பணம், சிரேஷ்ட,அத்யட்சகர், விக்யாபனம் போன்ற வார்த்தைகள் இலங்கைத் தமிழ் சொல்லாடலில் இருக்கின்றன. ஆனால் அவை பொதுவாக தமிழ்நாட்டுத் தமிழ் வழக்கில் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் அது போன்ற வார்த்தைகளை முடிந்த அளவில் தவிர்க்கிறோம். ஆனால், இலங்கைச் செய்திகளில் இந்த வார்த்தைகள் இலங்கைச் செய்தியாளர்கள் மற்றும் இலங்கைப் பிரமுகர்களால் பயன்படுத்தப்பட்டால், அவை அனுமதிக்கப்படுகின்றன.
நன்றி :பி பி சி தமிழோசை

இலக்கணம்





எந்த ஒரு ஊடகமும் மொழியறிவை வாசகர்களுக்கோ அல்லது நேயர்களுக்கோ புகட்டுவதற்காக நடத்தப்படுவதில்லை. மொழி என்பது இங்கே செய்தியை சொல்லப் பயன்படும் ஒரு கருவியாகவே பயன்படுகிறது.

இந்த வரையறைக்குள் செயல்பட்டாலும், பிபிசி தமிழோசை, மொழியை இலக்கணப்பிழையின்றி பயன்படுத்தும் ஒரு அடிப்படையான நோக்கத்தைக்கொண்டிருக்கிறது.

தமிழ் மொழி பெயர்ப்பிலும் சரி, மற்றபடி எழுத்து வடிவத்தில் நாங்கள் பயன்படுத்தும் மொழியிலும் சரி, இலக்கண மற்றும் எழுத்துப்பிழைகள் நேரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

குறிப்பாக, பெயர்ச்சொல்லும் வினைச்சொல் விகுதியும் சரியாக உடன்படுவது, செய்வினை-செயப்பாட்டு வினைப் பிரச்சினை போன்றவைகளில் கவனக்குறைவாக இருந்தால் பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்கக் கூடியவரை முயல்கிறோம்.

உதாரணத்துக்கு,
ஒரு வாக்கியம். பிரான்சும் இந்தியாவும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்று கூறுவது பிழை, கையெழுத்திட்டன என்று கூறுவது இலக்கணமரபுப்படி சரி.

எழுத்து வடிவில், வார்த்தைகளுக்குப் பின்னர் ஒற்றெழுத்து மிகுவது என்ற விஷயங்களை கவனமாகக் கையாள்கிறோம்.

எம்மையும் மீறி, செய்தியை ஒலிபரப்பும் அவசரகதியிலோ அல்லது இணையதளப்பக்கங்களை பிரசுரிப்பதில் ஏற்படும் நேரப்பிரச்சினைகளாலோ பிழைகள் ஏற்படுவதுண்டு. அவற்றைப் பின்னர் நாங்களே கவனிக்க நேர்ந்தாலோ அல்லது நேயர்கள் சுட்டிக்காட்டினாலோ உடனடியாக அப்பிழைகளைத் திருத்திக்கொள்கிறோம்.

நடுநிலைத்தன்மை





பக்கச்சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்துவது: மொழிபெயர்ப்பில் இதற்கு முக்கியமான இடம் உண்டு. மொழிப் பயன்பாடு தவறாக செய்யப்பட்டால், செய்தியின் நடுநிலைத்தன்மையை பாதிக்கும். சமகால அரசியல் நிலவரத்தைப் பற்றி செய்திகளை சொல்லும்போது இது போன்ற சந்தர்ப்பங்கள் நிறைய வருகின்றன.

டெர்ரரிஸ்ட் என்ற வார்த்தையை செய்திகளில் எப்படி அனுமதிக்கலாம் என்ற கேள்வி பல சந்தர்ப்பங்களில் எழுகிறது. உலகின் பல பாகங்களில் வன்செயல்கள் நடக்கையில், அந்த வன்செயல்களை எதிர்கொள்ளும் அரசுகள், இந்த செயல்களை செய்பவர்களை பயங்கரவாதிகள் அல்லது அந்த நடவடிக்கைகளை பயங்கரவாத நடவடிக்கைகள் என்று வர்ணிக்கின்றன.

ஒரு பக்க சார்பற்ற ஊடகம் இதை அப்படியே பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பிபிசி தமிழோசையைப் பொறுத்தவரை, செய்தியில் நாங்கள் எந்த ஒரு இயக்கத்தையோ அல்லது தனிநபரையோ பயங்கரவாத இயக்கம் அல்லது பயங்கரவாதி என்று கூறுவது இல்லை. அரசோ, அரசு தலைவர்கள் அல்லது ராணுவம், காவல்துறை போன்ற மற்ற நிறுவனங்களோ அவர்களை அவ்வாறு கூறுவதாக மேற்கோள்காட்டுகையில் அந்த வார்த்தை அனுமதிக்கப்படுகிறது.

இதே போலத்தான் அரச பயங்கரவாதம் போன்ற சொற்றொடர்களும். அரசு, தீவிரவாதிகள் என்று அது கூறும் நபர்களுக்கு அல்லது இயக்கங்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் அல்லது தாக்குதல்களைப் பற்றி, அந்தக் குழுக்கள் விமர்சிக்கும் போது அவர்களை மேற்கோள்காட்டுகையில் இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.

அதே போல இத்தகைய ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபடும் இயக்கங்கள் அல்லது குழுக்கள் தங்களை விடுதலை இயக்கங்களாக வர்ணிப்பதை அவர்கள் வார்த்தைகளை மேற்கோள்காட்டியே பயன்படுத்துகிறோம். பிபிசி , அவர்களை விடுதலை இயக்கங்கள் என்றோ அல்லது பயங்கரவாத இயக்கங்கள் என்றோ கூறுவதில்லை.

பிரச்சனைக்குரிய நிலப்பரப்புகளைப்பற்றி பேசும்போதும் பக்கச்சார்பான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கிறோம். உதாரணத்துக்கு காஷ்மீர் பிரச்சினை. காஷ்மீர் பிரிந்து கிடக்கும் ஒரு பகுதி; இதை இரு தரப்பினரும் பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தாமல், இந்தியக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அல்லது இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் என்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குட்பட்ட அல்லது பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் என்று சொல்லிவிடுகிறோம்.

ஜிஹாத் போன்ற வார்த்தைகளையும் பொதுவாக நாங்களாகக் கூறாமல், அந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவோர் கூறும் வார்த்தைகளாகவே மேற்கோள்களில் பயன்படுத்துகிறோம். மிலிடன்ட், ரிபெல் போன்ற ஆங்கில வார்த்தைகளை தீவிரவாதி மற்றும் கிளர்ச்சியாளர் என்று மொழிபெயர்க்கிறோம்.

நன்றி :பி பி சி தமிழோசை

துல்லியத்தன்மை




எந்த ஒரு செய்தி ஊடகத்துக்கும் மொழியைக் கையாளுவதில் துல்லியத்தன்மை மிகவும் அவசியம். சொல்லப்படும் தகவலை குழப்பம் ஏதுமின்றி நேயர்கள் புரிந்துகொள்ள இது அவசியம்.மொழிபெயர்ப்பை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதற்கு இதுவொரு அடையாளம். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும்போது இந்த துல்லியத்தன்மை பாதிக்கப்படாமல் செய்திகளைத் தரவேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். எந்த ஒரு மொழியிலும் வார்த்தைகளுக்கு சூழ்நிலைக்கேற்ப பொருள் மாறும் தன்மை இருக்கும். ’சென்சிடிவ்’ மற்றும் ‘ சீரியஸ்’ போன்ற வார்த்தைகளும் அப்படித்தான்.அவை எந்தச் சூழலில் பயன்படுத்தப்படுகின்றனவோ அதற்கேற்ப பொருளும் மாறுபடும். ’சென்சிடிவ்’ என்ற வார்த்தையை ’மென்னுணர்வுகளைக் கிளப்பும்’, ’சிக்கலைத் தோற்றுவிக்கக்கூடிய’,’பிரச்சினையை எழுப்பக்கூடிய’ என்று சூழ்நிலைக்கேற்ப மொழிபெயர்க்கிறோம். ’சீரியஸ்’ என்ற வார்த்தையை, ’பாரிய’, ’பெரிய’,  என்று சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்துகிறோம்.

அகராதியில் ஒரு சொல்லுக்கு என்ன பொருள் தரப்பட்டிருக்கிறது என்பது ஒரு வழிகாட்டும் விஷயம்தான். அந்தச் சொல்லுக்கு நம் சூழலில் என்ன பொருள் தரக்கூடிய சொல்லைப் பயன்படுத்தவேண்டும் என்பதைப் பார்த்து அதன்படியே அந்தச் சொல்லை மொழிபெயர்க்கவேண்டும்.

நன்றி :பி பி சி தமிழோசை

பி பி சி தமிழோசை : வானொலிக்காக எழுதுதல்





செய்தியை கேட்பதற்கும், செய்தியைப் படிப்பதற்கும் இடையே வேறுபாடு இருக்கிறது.ஒரு நாளேட்டையோ அல்லது அச்சிடப்பட்ட எந்தவொரு விஷயத்தையும் நாம் மீண்டும் படிக்க முடியும். ஆனால் வானொலி அப்படியல்ல. அதில் சொல்லப்படும் செய்தி காற்றோடு போய்விடுகிறது. அதை நாம் மீண்டும் கேட்க முடியாது.  வானொலியில் செய்தி சொல்லும் நடைக்கும், பத்திரிகைகள் மற்றும் இணையதளம் போன்ற எழுத்து சார்ந்த ஊடகங்கள் மூலம் செய்தி சொல்லும் முறைக்கும் இடையே இருக்கும் முக்கியமான வேறுபாடு இதுதான்.

வானொலி மொழி என்பது, எளிமையானதாக, கேட்பவர்களை சிரமப்படுத்தாத ஒன்றாக இருக்கவேண்டும். ஏனென்றால் வானொலி மூலம் செய்தி கேட்கும் நேயர்கள், செய்தியை ஒரே ஒரு முறைதான் கேட்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். எனவே, மொழி எளிமை என்பது மிகவும் முக்கியம். அதுமட்டுமின்றி பலதரப்பட்ட நேயர்கள் வானொலியைக் கேட்கிறார்கள். ஒரு பேராசிரியரும் கேட்கிறார், கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் கேட்கிறார். அந்த இரு தரப்பினராலும் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக வானொலிச் செய்தி இருக்கவேண்டும்.

நீண்ட வாக்கியங்கள், சிக்கல் மிகுந்த சொற்றொடர்கள் ஆகியவை கேட்பவர்களின் கவனத்தை சிதறடிக்கும். எனவே முடிந்த வரை, சிக்கலான வாக்கியங்கள் மற்றும் சொற்றொடர்களைத் தவிர்க்கிறோம்.