Showing posts with label ramayanam. Show all posts
Showing posts with label ramayanam. Show all posts

Thursday, November 17, 2011

பெண்கள் சூதாடியது குறித்து சங்க இலக்கியங்களில் பதிவு ஏதும் இருக்கிறதா?

வணக்கம் 
ராமாயணம் பற்றிய ஏ.கே.ராமானுஜனின் கட்டுரை டெல்லிப் பல்கலைக்கழகத்தால் நீக்கப்பட்டது குறித்து ஏற்பட்டிருக்கும் சர்ச்சையைத் தொடர்ந்து கம்ப ராமாயணத்தை மீண்டும் படித்துக்கொண்டிருந்தேன். மிதிலைக் காட்சிப் படலத்தில் ராம லட்சுமணரும் முனிவரும் காண்கிற காட்சிகளைச் சொல்லும் கம்பன் பலவிதமான பெண்களை அவர்கள் பார்த்தவாறு செல்வதாகச் சொல்கிறான். நாடக அரங்கில் ஆடும் நுண்ணிடை மகளிர்; ஊசல் ஆடும் மகளிர்; தீந்தேன் என இசை பாடும் மகளிர்; சந்திர உதயம் போல சாளரம்தோறும் தோன்றும் மகளிர்;  'பை அரவு அல்குலார் தம் உள்ளமும், பளிங்கும்போல' பந்து ஆடும் மகளிர்; பங்கயம், குவளை, ஆம்பல் முதலான மலர்கள்; கெண்டை, வரால் உள்ளிட்ட மீன்கள் நிறைந்த வாவிகளில் நீராடும் மகளிர் ஆகியோரைக் காட்டும் கம்பன் அந்தக் காட்சிகளோடு மேலும் இரண்டு காட்சிகளைக் காட்டுகிறான். 

 ' பளிக்கு வள்ளத்தில் வார்த்த பசு நறுந்தேறலை' அருந்திவிட்டு அந்தப் போதையில் ஒளிக்க முடியாமல் ஊடலை வெளிப்படுத்தும் பெண்களை ஒரு பாடலில் சித்திரிக்கிறான். பெண்கள் மது அருந்துவது வியக்கத்தக்க செய்தியல்ல. ஆனால் அவன் விவரித்திருக்கும் இன்னொரு காட்சிதான் எனக்கு வியப்பைத் தந்தது.  கைவளைகள், காதணிகள்,மாலைகள் உள்ளிட்ட ஆபரணங்கள், மேலாடைகள், மகர யாழ்கள் என எல்லாவற்றையும் பந்தயப் பொருட்களாக வைத்துச் சூதாடும் பெண்களை அந்தப் பாடலில் கம்பன் வர்ணிக்கிறான். 

அந்தப் பாடலை இங்கே தருகிறேன்:

''கடகமும் குழையும் பூணும்
      ஆரமும் கலிங்க நுண் நூல்
வடகமும் மகர யாழும்
     வட்டினி கொடுத்து , வாசத்
தொடையல் அம் கோதை சோர
    பளிங்கு நாய் சிவப்பத் தொட்டுப்
படை நெடுங் கண்ணார் வட்டாட்டு
    ஆடு இடம் பலவும் கண்டார்"

பெண்கள் சூதாடுவதற்கென்று தனியே வட்டாடும் இடங்கள் பல இருந்ததாகவும் கம்பனது கூற்றிலிருந்து தெரியவருகிறது. கம்பன் சொல்லியிருப்பதுபோன்ற  பெண்கள் வட்டாடும் இடங்கள் பற்றி வால்மீகி ராமாயணத்தில் ஏதும் சொல்லப்பட்டிருக்கிறதா? பெண்கள் சூதாடியது குறித்து சங்க இலக்கியங்களிலோ அல்லது கம்ப ராமாயணத்துக்கு முந்தைய  தமிழ் இலக்கியங்களிலோ  பதிவு ஏதும் இருக்கிறதா? 

அன்புடன்
ரவிக்குமார்