Thursday, February 14, 2013

காதலர் தினம் - சில கவிதைகள்

 
 
காதலர் தினத்தில் பயன்படட்டுமே என்று எனது மழை மரம் ( க்ரியா பதிப்பக வெளியீடு ) கவிதைத் தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகளை இங்கே தருகிறேன்.


1.

உணவகங்கள் பேசுவதற்கானவை அல்ல
அதிலும் அசைவ உணவகங்கள்
அலைக்கழிக்கின்றன புலன்களை
காதல் மொழி பேச விரும்பும் நாவில்
எச்சிலை சுரக்கச் செய்கிறது கறி மீன்
கூந்தலைக்  கோத
விழையும் விரல்களை
ஈர்க்கிறது முள்கரண்டி
அப்பத்தின் புளிப்பு
போதை ஏற்ற
அருகில் அமர்ந்திருக்கும் உன்னைப் பார்க்கிறேன்
வறுத்த கறித் துண்டங்களாய்
காட்சிதரும் உதடுகளை எடுத்து
உண்ணத் தொடங்குகிறேன்

2.

பறக்கும் அணில்கள் உள்ளன
என்றாலும் நம் தோட்டத்தில்
கண்டதில்லை அவற்றை
இங்கிருக்கும் அணில்
தாவும்போது சிலசமயம்
பறக்கவும் செய்கிறது
மரக்கிளையிலிருந்து
அது
தாவுகிறது நம்
மனசுக்குள்
அப்போது அணிலுக்கும் நம்
மனசுக்கும்
சிறகு முளைக்கிறது

3.


மழை கழுவிய சாலையில்
படர்கிறது
தெருவிளக்கின் மஞ்சள்
காற்றைத் தடுத்து மறிக்கும்
கண்ணாடிக்கு இப்புறமிருந்து
பார்த்துக் கொண்டிருக்கிறோம்

தனிமையின் ஆவேசத்தில்
மொழிக்குள் நாம் எளிதாய்க்
கடந்த எல்லைகள்
இறுக்குகின்றன குரல்வளைகளை

கலையாத படுக்கை விரிப்பில்
சென்று பதுங்குகிறது
குளிர்

தீண்ட நெருங்கிய விரலும்
திறந்திருக்கும் சருமமும்
பற்றியெரிய
புகையாய்க்  கவிகிறது
தயக்கம்

விடியத் துவங்குகையில்
விழியின் நுனியில் துளிர்க்கும் துளியில்
கரையத் தொடங்குகிறது
அச்சம்

No comments:

Post a Comment