Saturday, February 23, 2013

ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டம்: இந்தியா செய்யப்போவது என்ன ?





ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரப்போவதாக  அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கு ஆதரவாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் வாக்களிக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துவந்தன. அந்தப் பிரச்சனையும் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அமெரிக்கத்  தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களிடம் உறுதி அளித்திருப்பதாகச்  செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுத்தும் எந்தவொரு காரியத்தையும் இந்தியா செய்யாது . அதற்கு மாறாக இலங்கையை இயன்றவரைக் காப்பாற்றவே அது முயற்சிக்கும். இந்தியாவின் அணுகுமுறை எப்படியிருக்கும் என்று சிந்திக்கும்போது பினவரும் சாத்தியங்கள் நமக்குத் தென்படுகின்றன: 

1. அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதில் பெரிய சிக்கல் ஒன்றும் இருக்கப்போவதில்லை. ஆனால் அந்தத் தீர்மானம் எப்படியிருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றக்கூடும் . கடந்த முறை, தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்ததைப்போல இம்முறையும் இந்தியா  மறைமுகமாக இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படலாம்.அதற்கான அறிகுறிகள் துலக்கமாகத் தெரிகின்றன. புலிகளால் கொல்லப்பட்ட இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு இந்தியத் தூதர் அசோக் கே. காந்தாவும்  இலங்கை ராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கேவும்  கூட்டாக அஞ்சலி செலுத்தியிருக்கும் நிகழ்வு அதற்கொரு சான்று. 

கடந்தமுறை செய்ததுபோல அமெரிக்க தீர்மானம் வெளியானபிறகு அதில் மாற்றம் செய்ய முற்படாமல் தீர்மானம் வெளிவருவதற்கு முன்பே அதில் இந்தியா தலையீடு செய்யலாம். அதற்கான வேலைகள் இப்போதே நடந்துகொண்டிருக்கலாம். 

2. ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலின் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் அளித்திருக்கும் 18 பக்க அறிக்கையின் இறுதியில் இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க 'சுயேச்சையான சர்வதேச விசாரணை ' வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். இப்போது நம் எதிரில் இருக்கும் கேள்வி : சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடப்படுமா? அல்லது மேலும் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படுமா ? என்பதுதான். இந்தியாவின் யுக்தி இலங்கைக்குக் கால அவகாசம் பெற்றுத் தரும் வகையிலேயே இருக்கக்கூடும் . 

3. ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் இடம்பெற்றிருக்கும் நாடுகள் சிலவற்றை இந்தியா தனது ராஜீய உறவுகளின் மூலமாக நிர்ப்பந்திக்க முடியும். எனவே அவற்றைத் தனது நிலைக்கு ஆதரவாக செயல்படவைத்து அமெரிக்காவின்மீதும், ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலின்மீதும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா மறைமுகமாகத் திணிக்கமுடியும். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் கியூபாவை அப்படித்தான் இந்தியா பயன்படுத்தியது. 

4. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடைபெறும் இந்த நேரத்தில் ஜப்பான்,நைஜீரியா, ரொமேனியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் சார்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அவர்களிடம் சில நாட்களின் முன் கையளிக்கப்பட்டிருக்கும் 'ரகசிய அறிக்கை' தற்போது  பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது. இப்படியொரு சந்திப்புக்கு பான்  கி மூன் எப்படி ஒப்புக்கொண்டார் என்ற கேள்வி ஒருபுறமிருக்க,அக்கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டிருக்கும் பத்திரிக்கை செய்தி இலங்கை அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டுவதாக இருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்த 'ரகசிய அறிக்கையின்' பின்னணியில் இந்தியா இருக்கிறதா என்பதும் ஆய்வுக்குரியதாகும். 

இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் இந்தியாவின் அணுகுமுறை   எப்படியிருக்கும் என்பதை நாம் யூகிக்க முடியும். அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தை நீர்த்துப்போகவைத்து இலங்கைக்கு மேலும் கால அவகாசம் பெற்றுத் தருவது என்பதாகவே அது அமையும். இதைச் செய்வதற்காக இந்தியா சில பொருளாதார பலன்களை இலங்கையிடம் கேட்டுப் பெறக்கூடும். 13 ஆவது சட்டத் திருத்தம் குறித்தும் , வடக்கு  கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்பது குறித்தும் இந்தியா இப்போது பேசுவது,  இலங்கையோடு மறைமுகமாக நடைபெற்றுவரும் பேரங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்குத்தானே தவிர இந்தியாவுக்கு அதில் உண்மையான அக்கறை எதுவும் இல்லை என்பதை கடந்தகால நிகழ்வுகள் காட்டியுள்ளன. 

இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் எத்தகைய கோரிக்கைகளை முன்வைப்பது என்பதைப் பற்றி சிந்திக்கவேண்டியது அவசியம். அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்ற பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்காமல் இந்தியா மீது உண்மையான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய கோரிக்கைகளை அடையாளம் காணவேண்டும். 

"இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்த சுயேச்சையான சர்வதேச விசாரணை வேண்டும்" என்பதைத் தீர்மானமாக நிறைவேற்றுவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தமது ஆற்றல் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயல்படவேண்டும்.ஆனால்,  ஊடகக் கவனத்தைக் கவர்வதற்காக சிறு குழுக்கள் சாகசவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது இத்தகைய கருத்தொற்றுமையை  உடைப்பதாக இருக்கிறது. இப்படியான சிறு குழுக்கள் ஈழத் தமிழ் அமைப்புகளின் மறைமுக ஆதரவோடு செயல்படுகின்றன என்பதை அறியும்போது நமக்கு ஒரு கேள்வி எழுகிறது: தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த குரலை சிதைத்து இலங்கை அரசைக் காப்பாற்றக்கூடிய நடவடிக்கைகளை ஈழத் தமிழ் அமைப்புகள் சில ஏன்  ஊக்குவிக்கின்றன ?  என்பதே அந்த கேள்வி. இதற்கு அந்த அமைப்புகள்தான் பதில்சொல்லவேண்டும்.

No comments:

Post a Comment